அகிலம் அனைத்தையும் படைத்தவளும், அதை ரட்சிப்பவளும்
சாட்சாத் அந்த ஆதிபராசக்தியே! பொற்கரங்கள் பதினெட்டும், ஒளி வீசும்
திருமுகமும் துலங்க, எல்லோருடைய அதிதேவதையாகவும் திகழும் அந்த துர்காதேவியே
மகிஷாசுரமர்த்தினியாகவும் சண்டிகாவாகவும்... இன்னும் பற்பல
திருநாமங்களில்- திருவடிவங்களில்... நம்மைக் காக்க அவதாரம் எடுத்து வந்தாள்
என்கின்றன புராணங்கள். ஸ்ரீபரசுராமர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய
அவதாரங்களே ஸ்ரீதுர்காதேவியை வழிபட்டு, தேவி வழிபாட்டின் சிறப்பை நமக்குத்
தெரியப்படுத்தி உள்ளனர்.
வரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக,
கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். தேவலோகத்தை
இன்னல்கள் சூழ ஆரம்பித்தது. இந்திரன் முதலான தேவர்களை பலவாறு துன்புறுத்திய
மகிஷன், அவர்களை விரட்டியடித்துவிட்டு தேவ லோகத்தைக் கைப்பற்றினான்.பரிதவித்துப்போன இந்திரன், பிரம்மதேவரை சந்தித்தான். அவருடன் சென்று
சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடமும் சரணடைந்தான். மும்மூர்த்தியரின் சக்திகளும்
ஒன்றுகூடி உருவானவளே ஸ்ரீதுர்கை. தனது திருக்கரங்களில்... ஈசனின் சூலம்,
விஷ்ணுவின் சக்ராயுதம், பிரம்மனின் கமண்டலம், இந்திரனின் வஜ்ராயுதம்,
அக்னி-வருணன் ஆகியோரின் சக்தி, வாயு பகவானின் வில், ஐராவதத்தின் மணி,
எமதருமனின் தண்டம், நிருதி தேவனின் பாசம், காலனின் கத்தி-கேடயம் ஆகியவற்றை
ஏந்தி நின்றாள் தேவி. அத்துடன், சமுத்திர தேவன் தாமரை மலரையும், குபேரன்
பாணங்கள் நிறைந்த பாத்திரத்தையும், ஹிமவான்- சக்தி மிக்க சிம்மத்தை
வாகனமாகவும், சூரிய தேவன் - தேக காந்தியையும், இன்னும் பிற தேவர்கள்
பல்வேறு ஆடை-ஆபரணங்களையும் அளித்ததால், சர்வலங்கார பூஷணியாக திகழ்ந்தாள்
ஸ்ரீதுர்கா.மகிஷாசுரன் பெற்றிருந்த வரத்தின்படி, அந்த அசுரன் எந்தப் பெண்ணை
மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும். ஸ்ரீதுர்காதேவி அசுரனைத்
தேடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றாள். அவளது அழகைக் கண்டு
மோகித்தான் மகிஷன்; தன்னை மணக்கும்படி வேண்டினான். 'யுத்தத்தில் என்னை
ஜெயித்தால், உன்னை மணக்கிறேன்’ என நிபந்தனை விதித்தாள் தேவி. யுத்தம்
தொடங்கியது. ஒன்பது நாட்கள் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரன்
கொல்லப்பட்டான். தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையின் மீது பூமாரி பொழிந்தனர்.
மகிஷனின் தலையின் மீது ஏறி நின்று, மகிஷனாக வந்த வர முனிக்கும்,
தேவர்களுக்கும் திருவருள் புரிந்தாள் தேவி. தேவி துர்கையின் வெற்றியைக்
கொண்டாடிய திருநாளே விஜயதசமி.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீதுர்கையின் மகாத்மியத்தைப்
போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்காதேவியையும்,
அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள்
ஸ்ரீசரஸ்வதியையும் வழிபடுவார்கள். புரட்டாசி மாதம், வளர்பிறை பிரதமை
துவங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. கடைசி (10-வது) நாள்
விஜயதசமி!இந்த நிகழ்வுகளையெல்லாம் பொம்மைகளாக வைத்து சித்திரிப்பதே கொலு வைபவமாகப்
பரிணமித்தது. வடநாட்டில், ஸ்ரீராமனின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ஸ்ரீராமர், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்
செய்ததைப் போற்றும் விழாவாக, ஸ்ரீராமனின் வெற்றி விழாவாகக்
கொண்டாடப்படுகிறது விஜயதசமி.
தென்னாட்டில் ஸ்ரீதுர்கா, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி வழிபாடாக
நடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த 10 நாட்களும்
கோலாகலம்தான். ஒற்றைப்படை எண்ணிக்கையில்... 5, 7 அல்லது 9 படிகளுடன் கொலு
அமைப்பார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே பொம்மைகள் செய்யச் சொல்லி வாங்கி
வந்து, கொலுவில் வைத்து வழிபடுவார்கள். வருடா வருடம் புது பொம்மைகள்
இடம்பெறும். அந்தக் காலத்தில், மரப்பாச்சி பொம்மைகளுடன் கொலு அமைப்பார்கள்.
செங்கல் வைத்து பலகைகள் போட்டு அதன்மேல் சலவை வேஷ்டியைப் போர்த்தி,
படிக்கட்டாக செட் செய்து கொலு வைக்கப்படும்.
சில இடங்களில் விழா நாளுக்கு முன்னதாகவே கொலு அமைக்கும் இடத்தைச்
சுத்தப்படுத்தி, சுற்றிலும் மண்ணைக் கொட்டி, பாத்தி அமைத்து முளைப்பாரி
விதைப்பார்கள். அதற்கு, தினமும் தண்ணீர் ஊற்றி வர... விழா ஆரம்பிக்கும்
தருணத்தில் கொலுப் படிக்கட்டைச் சுற்றி நன்றாக வளர்ந்து நிற்கும்
முளைப்பாரி பயிர்கள்!கீழிருந்து மேலாக ஒவ்வொரு படியிலும் முறையே... புல்-பூண்டு, செடி-கொடிகளில்
ஆரம்பித்து, ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள், எல்லோருக்கும்
மேலாக தேவி சக்தியின் விக்கிரகம் திகழ... அனைத்தும் தேவி பராசக்தியின்
சாந்நித்தியமே என்பதைச் சொல்லாமல் சொல்லும், கொலு காட்சி. தற்காலத்தில்
பொம்மைகளும், கொலுப் படிக்கட்டுகளும் ரெடிமேடாகவே வந்துவிட்டன.
கம்ப்யூட்டர் கணபதியையும் கொலுவில் தரிசிக்க முடிகிறது!மொத்தத்தில் இந்தப் பண்டிகை... முழுக்க முழுக்க பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கான பண்டிகை. மாலைவேளை யானதும் முருகன், கிருஷ்ணன்,
ராமன்,கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு
அழைத்துச் செல் வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள்
வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள் கொலுவீட்டுக்காரர்கள்!
குழந்தைகள் மற்றும் கன்னிப் பெண்களின் திறமைக்குச் சவாலாகவும் அமையும்
நவராத்திரி விழா. ஒவ்வொரு நாளும்... என்ன வேஷம் போடுவது, இன்றைக்கு என்ன
பாடலாம் எனப் போட்டி போட்டுக்கொண்டு அசத்துவார்கள். கோலப்போட்டி, பாட்டுப்
போட்டி, சிறந்த கொலுப்போட்டி என்று தூள் கிளப்புவார்கள். மொத்தத்தில் இந்த
10 நாட்களும் நண்பர்களின் சங்கமம், உறவுகளின் பாராட்டு... என கல்யாண
விழாவாகக் களைகட்டும்.இப்படி மகிழ்வான தருணங்களைத் தருவதுடன், நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி,
தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளையும் சொல்லித்
தருகிறது நவராத்திரி.
நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ
முதல் நாள்- குமாரி; இரண்டாம் நாள்- திரிமூர்த்தி; மூன்றாம் நாள் -
கல்யாணீ; நான்காம் நாள் - ரோகிணி; ஐந்தாம் நாள்- காளிகா; ஆறாம் நாள் -
சண்டிகா; ஏழாம் நாள் - ஸாம்பவி; எட்டாம் நாள்- துர்கா; ஒன்பதாம் நாள் -
ஸுபத்ராவாக அம்பிகையை வழிபட வேண்டும்.
மாதர்மே மதுகைடபக்னி மஹிஷா ப்ராணப ஹாரோத்யயே
ஹேவா நிர்மித தூம்ரலோசன வநேஹே சண்ட முண்டார்த்திணீ
ஹேவா நிர்மித தூம்ரலோசன வநேஹே சண்ட முண்டார்த்திணீ
நீ: சேஷி - க்ருத - ரக்தபீஜ - தனுஜே நித்யே - நிகம்பாபஹே சும்பத்வம்ஸினி
ஸம்ஹராஸுதுரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே
- இந்த தியான ஸ்லோகத்தை நவராத்திரி ஒன்பது நாட்களும் சொல்லி வந்தால்,
நம் பாவங்கள் அகன்று துர்கையின் பேரருள் கிடைக்கும். 'மகிஷாசுரமர்த்தினி
ஸ்தோத்ரம்’ எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியது. அதேபோல் துர்கா
காயத்ரீ, துர்கா சரணம் சொல்லியும் அம்பாளை வழிபடலாம்.
No comments:
Post a Comment