Search This Blog

Saturday, October 29, 2011

மூன்று கவலைகள்! - ஓ பக்கங்கள், ஞாநி

கவலை 1:


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பெரிய அரசியல் மாற்றம் எதையும் செய்துவிடவில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் தி.மு.க.வை நிராகரித்து அ.தி.மு.க.வை ஆட்சிக்குக் கொண்டுவந்த அதே போக்குதான் இதிலும் தொடர்கிறது. ஐந்து மாதங்களுக்குள் புதிய ஆட்சிக்கு எதிராக பெரும் அதிருப்தி மக்கள் மனத்தில் உருவாக வாய்ப்பில்லை என்பதால் அதே போக்கு தொடர்கிறது.  பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடது சாரிகள் முதலிய சிறு கட்சிகளுக்கெல்லாம் பெரும் பின்னடைவு என்றும் காங்கிரஸ் அடியோடு காலி என்றும் சிலர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை விமர்சிக்கிறார்கள்.

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. எப்போதுமே இரு பெரும் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் தலா 25 சதவிகித வோட்டு பலம் குறைந்த பட்சம் இருந்துகொண்டே இருக்கிறது. தேர்தல் சமயத்து அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து இரு கட்சிகளுக்குமிடையே சுமார் 5 முதல் 10 சதவிகித வோட்டு வித்தியாசம் மாறி மாறி இருந்து வருகிறது. சிறு கட்சிகள் ஒரு சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை வோட்டும் பலம் உள்ளவை. பெரிய கட்சி ஏதேனும் ஒன்றுடன் சிறு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால், அது இருவருக்கும் பயன் தரும். பிரிந்து இருந்தால், பெரிய கட்சிக்குப் பெரும் பாதிப்பு ஏற்படாது. சிறிய கட்சிக்குக் கடும் பாதிப்பு இருக்கும். இதுதான் எப்போதும் நடக்கிறது. இப்போதும் நடந்திருக்கிறது.  நம்முடைய தேர்தல் முறையில் வாங்குகிற வோட்டுகளுக்கும் பெறுகிற இடங்களுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை இருப்பதால் கணிசமாக வோட்டு வாங்கினாலும் பயன் இல்லாமல் போகும். இந்த முறை பாரதிய ஜனதாவும் மார்க்சிஸ்ட்டுகளும் ம.தி.மு.க.வும் ஆளுக்கொரு நகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வோட்டு சதவிகிதம் என்ன? கம்யூனிஸ்ட் - 0.71. மார்க்சிஸ்ட் 1.02. பா.ஜ.க. - 1.35. ம.தி.மு.க 1.7. இவர்களைவிட பாட்டாளி மக்கள் கட்சியும் காங்கிரசும் அதிக வோட்டுகளை வாங்கியும் எந்த நகராட்சியையும் பிடிக்கவில்லை. பா.ம.க - 3.55 சதவிகிதம். காங்கிரஸ் 5.71. உண்மையில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வந்தால் மட்டுமே நம் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் அசல் பலத்துக்குரிய இடங்களைப் பெறமுடியும். 

உள்ளாட்சித் தேர்தல்களில் தனி நபர் செல்வாக்குக்கு, கணிசமான இடம் இருக்க முடியும் என்றும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்குக்கு, கூடுதல் அழுத்தம் கிடைக்கும் என்றும் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சிகளின் ஆதிக்கத்தையே உறுதிப்படுத்தியிருக்கின்றன. பஞ்சாயத்து மட்டத்தில் அதிகார பூர்வமாக கட்சி அடிப்படை கிடையாது என்ற போதும் அங்கேயும் கட்சி செல்வாக்கே இந்த முறை மேலோங்கியிருக்கிறது. கட்சி செல்வாக்கு என்பது இங்கே கூடவே பணபலத்தையும் குறிக்கிறது.உண்மையில் மாநகராட்சி வரை கட்சி அடிப்படையை முற்றிலும் நீக்க வேண்டும். கட்சி சின்னம் அடிப்படையில் போட்டி நடக்கக்கூடாது. தனி நபர்களின் தரத்தின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்க வேண்டும். அதுதான் உள்ளாட்சிகளுக்கு சரியானதாக இருக்க முடியும் என்றெல்லாம் நாம் சொன்னாலும், நடைமுறையில் கட்சி அடிப்படை தான் இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. சென்னை மேயர் தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் சைதை துரைசாமி தனிப்பட்ட முறையில் நல்ல பெயர் எடுத்தவர். மனித நேய அறக்கட்டளைப் பணிகள் வாயிலாக ஐ.ஏ.எஸ்.க்கு ஏழை மாணவர்களை இலவசமாகத் தயார் செய்து அனுப்பி சாதனைகள் செய்தவர். ஆனால் அவரே அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடாமல், சுயேச்சையாகப் போட்டியிட்டால், கவுன்சிலராகக்கூட தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சைதை துரைசாமி போலவே நல்ல பெயர் எடுத்திருக்கக்கூடிய, நல்ல களப்பணிகள் செய்திருக்கக்கூடிய பல சமூக ஆர்வலர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு கவுன்சிலராகக் கூட ஆகமுடியவில்லை. தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய வீடுகளையும் மனைகளையும் முதலமைச்சர் தன் விருப்பக் கோட்டாவில் முறைகேடாக, பல அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஒதுக்கிய ஊழலை, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தியவர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் கோபாலகிருஷ்ணன். ஆனால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலில் கிடைத்த மொத்த வோட்டு வெறும் 305தான். கொட்டிவாக்கத்தில் ராஜ் செரு பாலும், தியாகராய நகரில் ஸ்ரீதரனும் முக்கியமான சமூக ஆர்வலர்கள். அவர்களுக்கும் தேர்தலில் இதே கதிதான். 

உள்ளாட்சித் தேர்தலில் கூட கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நல்ல வேட்பாளர்கள் வெல்லும் வாய்ப்பு இனி சுத்தமாக இல்லை என்பதுதான் இந்தத் தேர்தல் காட்டியிருக்கும் ஆபத்தான நிலைமை. இது பற்றி நாம் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.

கவலை 2:


கிரண் பேடி அப்படி என்ன பெரிய தப்பு செய்துவிட்டார் என்று அவரை ஆதரிப்பவர்கள் வாதிடுகிறார்கள். ஊழலுக்கு எதிராக ஜன் லோக்பால் சட்டம் தேவை என்று போராடும் அண்ணா ஹசாரேவின் தளபதிகளில் ஒருத்தர் கிரண் பேடி. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் பேர்வழிகள், எல்லா எம்.பி.களும் நம்பமுடியாதவர்கள் என்று கேலியும் கிண்டலுமாக ராம் லீலா மைதான மேடையில் நடனம் ஆடி நையாண்டி செய்தவர் கிரண் பேடி. அவரை யாராவது வெளியூரில் பேசக் கூப்பிட்டால் விமான டிக்கட் வாங்கித் தர வேண்டும். கிரண்பேடி விமானத்தில் சொகுசு வகுப்புக்கான கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் வாங்கிக் கொள்வார். ஆனால் சாதாரண வகுப்பில் பயணம் செய்வார். அந்த டிக்கட்டிலும் அவருக்கு 75 சதவிகிதம் தள்ளுபடி உண்டு. காரணம் அவர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது தீரச் செயலுக்கான மெடல் வாங்கியவர் என்பதால் அந்தச் சலுகை. ஆக மொத்தத்தில் 10 ஆயிரம் ரூபாய் விமான டிக்கட்டை 2500 ரூபாய்க்கு வாங்கிவிட்டு, பில்லை மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கொடுப்பார் கிரண்பேடி என்பதுதான் குற்றச்சாட்டு. இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது.கிரண்பேடி நடந்ததை மறுக்கவில்லை. இப்படி ‘மிச்சப்படுத்தும்’ தொகையை நான் சமூகப் பணிகளுக்குத்தான் பயன்படுத்துகிறேன் என்பதுதான் அவரது சமாதானம். பல அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்களும், இப்படி பில் தொகையில் மிச்சப்படுத்தும் வழக்கம் நம் சமூகத்தில் சகஜமாக இருந்து வருகிறது. நான் சாதாரண வகுப்பில் போவேன். என் பதவி அந்தஸ்துக்கு எனக்கு முதல் வகுப்பு டிக்கட்டுக்கு உரிமை உண்டு என்பதால் முதல் வகுப்பு டிக்கட் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்பது பல அலுவலர்களின் வழக்கமான நிலை. கிரண் பேடியும் அதையேதான் செய்து வருகிறார். 

பொய்க் கணக்குக் காட்டி எடுக்கும் பணத்துக்குத்தான் கறுப்புப் பணம் என்று பெயர். அதை நல்ல காரியத்துக்குத்தான் பயன்படுத்துகிறேன் என்ற சமாதானத்தை, கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பிக்கலாம். ஊழலுக்கு எதிராக குரலெழுப்புபவர் துளியும் ஊழல் செய்யாதவராக இருக்கவேண்டும் என்பதே நியாயம்.இங்கே எனக்கு மறைந்த ஏ.கே.வி. எனப்படும் அ.கி.வேங்கட சுப்பிரமணியனின் நினைவுதான் வருகிறது. அவரும் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர்தான். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் கேட்டலிஸ்ட் டிரஸ்ட், குடிமக்கள் முரசு இதழ் ஆகியவற்றின் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வுக்காகவும் வாக்காளர் உரிமைகளுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்துக்காகவும் ஓயாமல் வேலை செய்தவர். எனக்கு 49 ஓவை அவர்தான் தெரியப்படுத்தினார். தமிழகம் முழுவதும் அவரை பல அமைப்புகள் பயிற்சி வகுப்புக்கும் கூட்டங்களுக்கும் அழைத்தன. ஓயாமல் சுற்றுப் பயணம் செய்து பேசினார். பஸ்களில் செல்வார். பஸ் டிக்கட் என்னவோ அதைத்தான் அழைத்தவரிடம் வாங்கிக் கொள்வார். கூட்டம் பேசச் சென்ற ஊரில் சொந்த வேலையாக எதையாவது செய்யச் சென்றால், அதற்கு சொந்தக் காசைத்தான் செலவு செய்வார். நமக்கு ஏ.கே.வி.கள் தான் தேவை; கிரண் பேடிகள் அல்ல. ஆனால் கிரண் பேடிகள்தான் மீடியாவில் வலம் வருகிறார்கள் என்பதே கவலையாக இருக்கிறது. 

கவலை 3:


சென்ற சில வருடங்களில் உலகத்தை உலுக்கி எடுத்தவர் ஜூலியன் அசாஞ்சே. அவர் உருவாக்கிய விக்கிலீக்ஸ், அரசாங்கங்கள் குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் சொல்லும் பல பொய்களை அம்பலப்படுத்தியது. இணையதளத்தின் மூலம் புதிய இதழியலையே அசாஞ்சே உருவாக்கியிருந்தார்.விக்கிலீக்ஸை முடக்க அமெரிக்க அரசும் இதர அரசுகளும் எடுத்த பல முயற்சிகள் தோற்றன. அசாஞ்சே மீது வழக்கு போட்டு அவரை முடக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே விக்கிலீக்சின் பொருளாதார பலத்தை சீர்குலைக்கும் வேலையில் இறங்கிவிட்டன. விக்கிலீக்ஸ் முழுக்க முழுக்க பொது மக்களின் நன்கொடையை நம்பியே நடக்கிறது. ஆண்டு தோறும் 35 லட்சம் டாலர்கள் தேவை. உலகம் முழுவதும் பல நாடுகளிலிருந்து நன்கொடை கொடுப்பவர்களுக்கு எளிமையான வழி விசா, மாஸ்டர் கார்டுகள், பேபால் போன்றவை மூலம் இன்டர்நெட் வழியாக நன்கொடை அனுப்புவதாகும். வெஸ்டர்ன் யூனியன் போன்ற பண பரிவர்த்தனை கம்பெனிகள் மூலம் பணம் அனுப்பலாம். அமெரிக்க அரசின் நெருக்கடியால், இவை அனைத்தும் விக்கிலீக்சுக்கு எங்கள் கார்டுகள், அமைப்புகள் மூலம் நன்கொடை வாங்கித் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டன. இதனால் விக்கிலீக்சுக்கு வந்து கொண்டிருந்த நன் கொடையில் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே அடுத்த ஓராண்டுக்கு விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை நிறுத்திவைக்கப் போவதாக அசாஞ்சே அறிவித்திருக்கிறார். மாற்று வழிகளில் பணம் திரட்டியபிறகு மறுபடியும் செயல்படுவோம் என்று அசாஞ்சே சொல்லியிருக்கிறார்.

இன்று படித்தவர்கள் பலரும் இன்டர்நெட் சார்ந்த விசா, மாஸ்டர் கார்ட், பேபால், கூகிள், ஃபேஸ்புக், ஜீமெயில் போன்ற பல வசதிகளை சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் நம் சுதந்திரமான உரிமைகள். யாரும் இவற்றை எதுவும் செய்ய முடியாது. இவை நமக்கு நிரந்தரமானவை என்று நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு தவறு என்று விக்கிலீக்ஸ் சிக்கல் புரிய வைக்கிறது. அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். அமெரிக்க அரசின் மிரட்டலுக்கு உட்பட்டவை. உலகத்தில் அராஜகங்களை பகிரங்கமாகப் பேசவும் எடுத்துச் சொல்லவும் விக்கிலீக்ஸ் மட்டுமல்ல, கிரீன்பீஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகளும் இயங்குகின்றன. எல்லாமே மக்களின் நன்கொடைகளில் இயங்குபவை. ஆனால் அவை செயல்பட, வங்கிகள், கிரெடிட் டெபிட் கார்டுகள், இன்டர்நெட் போன்ற உதவிகள் தேவை. அவற்றை வெட்டிவிட்டால் செயல்பட முடியாது. அரசாங்கங்கள் நினைத்தால் வெட்டிவிட முடியும் என்பதை விக்கிலீக்ஸ் சிக்கல் நமக்கு முகத்தில் அடித்தாற் போலச் சொல்கிறது.இந்தியாவிலும் நமக்கு மறந்திருக்கலாம். சில வருடங்கள் முன்பு தெஹல்கா முதலில் இணையதளமாகத்தான் செயல்படத் தொடங்கியது. பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியது. தெஹல்காவை ஒடுக்க நினைத்த பி.ஜே.பி. அரசு, தெஹல்காவில் முதலீடு செய்த நிதிநிறுவனங்களை ரெய்டு செய்து முடக்கியது. தெஹல்கா இணையதளமும் மூடப்பட்டது. பின்னர் மக்கள் நன்கொடையினால் தெஹல்கா அச்சுப் பத்திரிகையானது. பத்திரிகைகளின் பொருளாதாரத்தை ஒடுக்க அரசாங்கங்களும் தனியார் கம்பெனிகளும் விளம்பரங்களில் கைவைப்பது வழக்கம்.

எந்த எதிர்ப்பையும் விமர்சனத்தையும், போராட்டத்தையும் ஒடுக்க அதன் அடிப்படையாக இருக்கக் கூடிய வருமானத்தில் கைவைப்பதுதான் ஒடுக்குவோரின் நடைமுறை. கூடங்குளம் போராட்டத்தையும் ஒடுக்க அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் தடை முயற்சிகளில் அரசு ஈடுபடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. பொருளாதாரரீதியாக தாக்குப் பிடிக்கும் சக்தி இருந்தால் மட்டுமே எந்த எதிர்ப்பையும் வெல்ல முடியும். அந்த சக்தி பெரும்பாலான எதிர்ப்பு இயக்கங்களுக்கு இல்லையே என்பது கவலையாக இருக்கிறது.   

இந்த வார வேண்டுகோள்!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னையில் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக பல முறை கேடுகள், விமர்சனங்கள் இருந்தாலும், கிராமியக் கலைகளை ஊக்குவிக்கவும் நகரில் அறிமுகப்படுத்தவும் அவை உதவும் என்பதால், ஜெயலலிதா அரசு வரும் ஜனவரியில் அவற்றை கைவிடாமல் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும், சைதை துரைசாமி தலைமையிலான புதிய மாநகராட்சியும் சேர்ந்து அதை நடத்த முடியும்.   

No comments:

Post a Comment