Search This Blog

Sunday, October 02, 2011

சச்சின், திராவிட் முனை மழுங்கிய அம்புகள்! - சோயிப் அக்தர் கிரிக்கெட்


இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்கள் சுயமுன்னேற்றத்தில்தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். பிறகுதான் அணிக்காக ஆடுவதெல்லாம். சச்சின், திராவிட் போன்ற வீரர்கள் மேட்ச் வின்னர்கள் கிடையாது. அவர்களுக்கு வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கத் தெரியாது. யுவ்ராஜ், சேவாக் போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்த பிறகுதான் நிலைமை மாறியது. அவர்கள், அணியின் வெற்றிக்காக ஆடுபவர்கள். சச்சின் நிறைய ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாது.

ஐ.பி.எல்.லில் நான் சேர வேண்டும் என்று மோடியும் ஷாரூக்கானும் நெருக்கடி கொடுத்தார்கள். எனக்கு நிறையப் பணம் கிடைக்கும் என்று மோடி ஆசை காட்டினார். இதனால் நான் ஐ.சி.எல்.லில் வழங்கப்பட்ட பெரிய தொகையை மறுத்து, ஐ.பி.எல்.லில் சேர்ந்தேன். ஆனால், பிறகு, என்னை ஐ.பி.எல்.லில் விளையாட முடியாமல் செய்து விட்டார்கள். நான் ஷாரூக்- மோடியின் பேச்சைக் கேட்டிருக்கக் கூடாது.


பைஸலாபாத்தில் நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில், என் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் மிகவும் பயந்தார். ‘காண்ட் ரோவர்சியலி யுவர்ஸ்’ என்கிற தம்முடைய சுயசரிதை புத்தகத்தில் இது போன்ற கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.  பி.சி.சி.ஐ. சார்பாகப் பேசியுள்ள ராஜீவ் சுக்லா, ‘அக்தர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். 2003 உலகக்கோப்பைப் போட்டியில் சச்சின் அவர் பந்தைக் கிழித்ததை மறந்துவிட்டாரா? சச்சினுக்கு, அக்தர் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. பிராட்மேனால் பாராட்டப்பட்டவர் சச்சின்,’ என்று குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். பாகிஸ்தான் அணியில் நிலவிய விரிசல்கள் பற்றியும் வெளிப்படையாக எழுதியதற்கு வாசிம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ‘புத்தகத்தை விற்பதற்கான வேலை இது.’ 

‘அக்தரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பது என் கண்ணியத்தைக் குறைப்பதாகும்,’ என்று மட்டும் பதிலளித்து அமைதியாகி விட்டார் சச்சின். இந்தியாவின் சில பகுதிகளில் அக்தரின் கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு விழா தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் பார்த்துப் பதறிப் போயிருக்கும் அக்தர், ‘சச்சின், கிரிக்கெட்டின் பிதாமகன், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று இப்போது யு டர்ன் அடிக்கிறார்.  அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் பல தலைவலிகளைக் கொடுத்தவர். வாரியத்துடன் மல்லுக்கட்டுவது, கிரிக்கெட் பொருள்களைக் கொண்டு சக வீரர்களைத் தாக்குவது என்று ஆரம்பித்து போதை மருந்தை உட்கொண்டது வரை... இவரது அடாவடி லிஸ்ட் அதிகம்! பௌலிங்கால் பேசப்பட்டதைவிடவும் சர்ச்சைகளால் அதிக கவனத்துக்கு உள்ளானவர். இவருக்கு முன்னால் கிரிக்கெட் ஆட வந்து, இவருக்குப் பிறகும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சச்சினும் திராவிடும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், புத்தகத்தை நாலு பேர் படிக்க வேண்டும் என்பதற்காக உளறிக் கொட்டியிருக்கிறார் அக்தர். 


அவர் கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது என்றாலும் சாதனையாளர்கள் மீது குற்றம் சொல்லும்போது தகவல்களைச் சரிபார்த்துக்கொண்டு பேச வேண்டும். சச்சின், திராவிடை வம்புக்கிழுத்து அதன் வழியாக இந்தியாவில் பரபரப்பை உண்டு பண்ணி புத்தகத்துக்கு விளம்பரம் தேடியிருக்கிறார் அக்தர்.  

சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அவமானமாக இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் மோசமான சூழலிலும் ஒரு மனிதர் மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானின் கொடியை உயர பிடித்துக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் கிரிக்கெட் திறமை மழுங்கிப் போய்விட்டதோ என்று நினைக்கும்போது, இல்லையில்லை... நான் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டுகிறார். அவர் பாகிஸ்தான் நடுவரான அலீம் டர். தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சிறந்த நடுவருக்கான விருதை ஐ.சி.சி.யிடமிருந்து பெற்றிருக்கிறார். டி.ஆர்.எஸ். எல்லாம் அவசியமே இல்லாமல், அலீம் டர் அளிக்கும் தீர்ப்புகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். மரியாதையையும் புகழையும் இப்படித்தான் பெற வேண்டும்.


1 comment:

  1. சச்சின், திராவிடை வம்புக்கிழுத்து அதன் வழியாக இந்தியாவில் பரபரப்பை உண்டு பண்ணி புத்தகத்துக்கு விளம்பரம் தேடியிருக்கிறார் அக்தர்.
    சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அவமானமாக இருக்கலாம்

    ReplyDelete