புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க
முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக்
கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள்
ஏற்படுகின்றன. சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal
drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
'வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது.
முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண
மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும்
முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின்
போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக
சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள்
நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை
ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான்
கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக்
கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது,
மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன்
மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை
சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை
உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு
மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு
மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை
உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1
மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால்,
ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள
முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால்,
அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச்
செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு
எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை
சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு
முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய
காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து
செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான்
இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி
பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய
கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த
கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை
செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே
எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து
செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே
இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே
சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும்
அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும்.
மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும்,
வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று
பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப்
பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப்
பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை
அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை
உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும்
ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்.
டாக்டர் ஆர்.ராமநாராயண்
ஃபங்ஷனல் நியூரோசர்ஜன்,
அப்போலோ மருத்துவமனை
No comments:
Post a Comment