Search This Blog

Friday, October 14, 2011

மீண்டு வரும் ரொனால்டினோ!


பீகாரில் ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்க இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. இது குறித்து பீஹார் அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தோனி. தன் அகாடமிக்குத் தேவையான நிலம் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். தோனியை நேரில் வரவழைத்து, தகவல்களை அறிந்துகொண்டு, பீஹார் அரசு நிலம் வழங்கும் என்று கூறியிருக்கிறார் பீஹார் அமைச்சர் சுக்தா பாண்டே. 


சமீபத்தில் நடந்து முடிந்த உலக அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அத்லெடிக் வீரர்கள் யாருமே ஜொலிக்க வில்லை. ஒரே ஆறுதல், பி.டி. உஷாவின் மாணவியான டிண்டு லுகா, 800 மீ. ஓட்டப் பந்தயத்துக்காக, அடுத்த வருடம் லண்டன் ஒலிம்பிக்ஸுக்குத் தேர்வு பெற்றதுதான். “என் குரு பி.டி. உஷாவுக்கு நிச்சயம் பெருமைத் தேடித் தருவேன்” என்று கூறி யிருக்கிறார் லுகா.  


சச்சினுக்குக் கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லையே என்று நினைக்க வைத்துவிட்டார் லியோனல் மெஸ்ஸி. நட்புறவு ஆட்டத்துக்காக மெஸ்ஸி கொல்கத்தா வந்த போது லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு மெஸ்ஸிக்குத் தங்கள் ஆதரவை அளித்தார்கள். ஆட்டம் நடந்த நாளன்று, கொல்கத்தாவே ஸ்தம்பித்துவிட்டது. மைதானத்துக்கு உள்ளே மட்டுமல்ல; எங்கு பார்த்தாலும் மெஸ்ஸி காய்ச்சல் பரவியிருந்ததைக் காண முடிந்தது. பீலே, மரடோனா போன்ற கால்பந்து பிதாமகன்கள் இதற்கு முன்னர் கொல்கத்தாவுக்கு வந்திருந்த போதும், மெஸ்ஸிக்குக் கிடைத்த வரவேற்புக்கு ஈடு இணை இல்லை.  

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன், இனி அவ்வளவுதான் என்று விமர்சனங்கள் வந்தாலும், தான் இன்னும் ஓயவில்லை என்று அறிவித்துவிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள் போட்டியில் பீட்டர்சன் சரியாக ஆடவில்லை. (30 போட்டிகளில் ஒரு செஞ்சுரி மற்றும் 2 ஃபிஃப்டிகள் மட்டுமே). இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கு பீட்டர்சன் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், “அடுத்ததாக இந்தியாவில் நடைபெறுகிற 5 ஒரு நாள் போட்டிகளில் நிச்சயம் கலந்து கொள்வேன். அடுத்த 5 வருடங்கள் தொடர்ந்து ஆடுவேன்” என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் பீட்டர்சன்.

உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பிறகும்கூட உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வருத்தம் தெரிவித்துள்ளார். “கிரிக்கெட் இந்தியாவின் மதமாக இருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளோம். மகளிர் பிரிவில் இந்தியாவின் சார்பில் இந்தப் போட்டியில் பதக்கம் வென்றது நானும் அஸ்வினியும்தான். இதற்குப் பிறகும் எங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை இது எதிர்காலத்தில் பாட்மிண்டன் விளையாட விரும்பும் இளம் வீரர், வீராங்கனைகளிடையே எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும்” என்று சமீபத்தில் தன் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார் ஜுவாலா.


பிரேஸில் கால்பந்து வீரர் ரொனால்டினோ, 2010 கால் பந்து உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை. அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் பிரேஸில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2004, 2005ல் உலகின் சிறந்த கால்பந்து வீரராகத் தேர்வு செய்யப்பட்டவரின் நிலை குறித்து அவர் ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள். ஆனால், இப்போது மீண்டும் பிரேஸில் அணியில் இடம் பிடித்துள்ளார் 31வயது ரொனால்டினோ. “பிரேஸிலில் நடக்கவுள்ள 2014 கால்பந்து உலகக் கோப்பையில் ரொனால்டினோவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரேஸில் பயிற்சியாளர் மெனிசஸ்.




No comments:

Post a Comment