Search This Blog

Saturday, September 29, 2012

அருள்வாக்கு - இளைஞர் கடமை!


பிறருக்கு உபகாரம் செய்வதற்கே நமது சரீரம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆன்றோர் மொழி. ‘பரோபகாரார்த்த இதம் சாரீரம்’ என்பார்கள். தேகத்தில் நல்ல தெம்பு இருக்கிற போதே, யுவர்கள் சேவை நெறியில் ஈடுபட வேண்டும். பிறருக்குச் சேவை செய்வதற்காகவே தேக பலத்தை நன்கு காத்துக்கொள்ள வேண்டும். தேக பலத்தைவிட ஒழுக்க பலம் முக்கியம். நமது மதம் கூறுகிற சாஸ்திர தர்ம நெறியின்படி சுத்தமான வாழ்வு வாழ வேண்டும். இப்படி நாம் தூய்மையாக இருந்தால்தான் பிறருக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். காமக் குரோதாதிகளாக இருந்தால் எப்படி நல்ல முறையில் சேவை செய்வது?

சமூகசேவை உண்மையாக இருக்க வேண்டுமாகில் சேவை செய்கிறவர்களுக்குத் தர்மத்திலும், சத்தியத்திலும் தளராத பிடிப்பு இருக்க வேண்டும். அவர்களுக்குப் பயம் என்பதே கூடாது. பயமற்ற நிலை வேறு; ஹிம்ஸை வழியில் நடப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. யுவர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் ஆஞ்சநேய ஸ்வாமி. அவருக்கு இருந்த பலம் மிகப் பெரியது. சுபாவத்திலோ சாந்தராக இருந்தார். கோபித்து எழவேண்டிய சமயத்தில் மஹாவீரராக எழும்பி ஹதாஹதம் செய்தார். அவருடைய புத்தி பலம் பெரிது. ஆயினும் பக்தியில் தோய்ந்து அடக்கத்துடன், விநயமே ஸ்வரூபமாகச் சேவை செய்து கொண்டிருந்தார். பயமென்பதே அவருக்கு இல்லை. ஆனாலும், தாமாக ஹிம்ஸை வழியில் அவர் சென்றதில்லை. பிறருடைய ஹிம்ஸைக்கு எதிர்மருந்தாகவே தாமும் எதிர்த்தார். அவர் சொந்த நலனுக்காகப் பலத்தைப் பிரயோஜனப்படுத்தவில்லை. துர்பலருக்குக் கொடியவரால் கஷ்டம் ஏற்பட்டால், தம் நலனையும் பொருட்படுத்தாமல் பலவீனரை ரட்சிப்பதில் அஞ்சா நெஞ்சராகச் சேவை செய்தார். லோக கேஷமம் ஒன்றே லக்ஷியமாகக் கொண்டு இந்த தர்மத்தை இளைஞர்களும் நடத்திக் காட்டினால் நாட்டின் ஒழுக்கம் மிக உயர்ந்த நிலை அடையும். அரசாங்கத்தின் தரமும் தானாகவே உயரும்.
- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

1 comment: