Search This Blog

Friday, September 07, 2012

U-19 உலகக் கோப்பை


நான்கு வருடங்களுக்கு முன்பு, U-19 உலகக் கோப்பையை வென்ற வீராட் கோலிக்கு, ஒரே நாளில் நாடு முழுக்க கவனம் கிடைத்தது. அந்தச் சாதனையோடு திருப்தியடையாமல், அடுத்ததாக இந்திய அணியில் இடம்பிடித்து, இன்று சச்சினின் சாதனைகளை உடைக்கக் கூடியவராக வளர்ந்திருக்கிறார் கோலி. ஆனால், இறுதிப் போட்டியில் கோலியுடன் ஆடிய மீதி 10 பேரும் இன்று தேடவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறார்கள். கோலிக்கு நிகராகப் பேசப்பட்ட தருவர் கோலி, கோஸ்வாமி, சங்வான், அஜிதேஷ் அர்கல் போன்றோரால் இன்றுவரை அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அதே அணியில் ஆடிய ரவீந்தர் ஜடேஜாவும் சோரூப் திவாரியும் இந்திய அணிக்காக ஆடினாலும் அவர்களால் நிலைக்க முடியவில்லை. 2000ம் வருடம் இந்திய இளைஞர் அணி உலகக் கோப்பையை ஜெயித்தபோது அந்த அணியிலிருந்து யுவ்ராஜ் சிங்கும், முஹமது கயிஃப்பும்தான் சர்வதேசத் தரத்துக்கு ஈடுகொடுத்தார்கள். 1991ல், U-19 அணியில் ஆடியவர்களில், ராகுல் திராவிடைத் தவிர வேறு யாரும் இந்திய அணிக்காக ஆடவில்லை. இந்தப் புள்ளிவிவரங்களைக் கொண்டு தான் U-19 உலகக் கோப்பை சாதனையை மதிப்பிட வேண்டியிருக்கிறது.

‘உன்முக் சந்த், அபரஜித் பாபா, ஹர்மீத் சிங், சந்தீப் சர்மா என நான்கைந்து பேர் உலகக்கோப்பையை வென்றதற்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டார்கள். உன்முக் சந்த், ஹர்மீத் சிங் ஆகிய இருவரையும் உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு செய்யவேண்டும்’ என்கிறார் இயன் சேப்பல். ஆனால், இந்திய அணிக்குத் தேர்வாக, 19 வயது அணியில் நிகழ்த்திய சாதனைகள் மட்டும் போதுமா? இப்படித் தான் சச்சினும் திராவிடும் கங்குலியும் இந்திய அணிக்குத் தேர்வானார்களா? உன்முக் சந்த், அபரஜித் பாபா, ஹர்மித் சிங் என சில 19 வயது வீரர்கள் ரஞ்சியிலும் ஐ.பி.எல்.-லிலும் ஆடியிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாருமே இந்தத் தகுதி நிலையிலேயே இதுவரை பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. பிறகு எப்படி, இந்திய அணிக்காக இவர்களைத் தேர்வு செய்ய முடியும்? அதற்கு முன்பு, ரஞ்சியிலும் இந்திய ஏ அணியிலும் சாதித்துக்காட்ட வேண்டியது அடிப்படைத் தகுதியில்லையா?  

எப்படி 32 வயதாகிவிட்டது என்று வயதை ஒரு காரணமாகக் காண்பித்து பத்ரிநாத்தை ஒதுக்குவது தவறோ, அதுபோல 19 வயது என்பதால் எல்லோரையும் சச்சினாகவும் கோலியாகவும் எண்ணுவதும் பெரிய தவறுதான். வயதை விடவும் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய திறமை இருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டும். உன்முக் சந்த், ஹர்மீத்சிங் போன்ற நம்பிக்கையளிக்கும் வீரர்கள், அடுத்ததாக ரஞ்சியிலும் இந்தியா ஏ அணியிலும் சாதிக்கவேண்டும்.ஹர்பஜன் சிங்கை அஸ்வின் வெளியேற்றிய போது பலருக்கும் சந்தேகம் வந்தது. அஸ்வினை நம்பி பெரிய தவறைச் செய்கிறதா பி.சி.சி.ஐ. என்று பயந்தவர்கள் பலர். ஆனால், இந்தியாவில் ஆடிய நான்கு டெஸ்டுகளில் அஸ்வினும் ஓஜாவும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து 60 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள். அதிலும் அஸ்வின் முதல் ஏழு டெஸ்டுகளில் 43 விக்கெட்டுகளை எடுத்து சாதனை செய்திருக்கிறார் (அதற்கடுத்த இடத்தில் ஹிர்வானி - 42). இந்தியாவில் ஆடிய நான்கு டெஸ்டுகளில் மூன்றில் மேன் அஃப் தி மேட்ச் ஆகியிருக்கிறார் அஸ்வின். ஆஸ்திரேலியாவில்தான் அஸ்வின் மிகவும் தடுமாறிவிட்டார். ஆனால், அங்கு முரளிதரனும் ஹர்பஜனுமே பெரிதாக எதுவும் சாதிக்க முடிய வில்லை. குறுகிய காலத்துக்குள் எப்படி முத்திரை பதிக்க முடிந்தது என்று அஸ்வினிடம் கேட்டபோது கிடைத்த பதில் - ‘உலக அரங்கில் பங்களிப்பதற்கான பயிற்சியை ரஞ்சிப் போட்டி மூலமாக அடைந்திருக்கிறேன். இதனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் வெற்றிபெற முடிகிறது.’ இந்த அனுபவம்தான் U-19 வீரர்களுக்கான உடனடித் தேவை. 

சில வருடங்களுக்கு முன்பு நெ.1 இடத்தில் இருந்த இந்திய அணி, இப்போது டெஸ்ட்டில் வெற்றி பெறுவதே அரிதாகிவிட்டது. ஹைதராபாத்தில், நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் வெற்றியடைந்தது, அடுத்து வருகிற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களுக்கான பயிற்சிதான். திராவிட் இடத்தைப் பிடித்திருக்கும் புஜாரா செஞ்சுரி அடித்திருப்பது அவருக்கு ஒரு நல்ல தொடக்கம். ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக பிட்சுகள் இருப்பது போல, இனிவரும் டெஸ்டுகளில் ஸ்பின்னுக்கு உகந்த பிட்சுகள்தான் தயாரிக்கப்படும் என்பது முதல் டெஸ்ட் வெற்றியிலிருந்து உறுதியாகிறது.

2 comments:

  1. நல்ல அலசல்...

    அஸ்வின், வீராட் கோலி இல்லாமல் டெஸ்ட் போட்டி வெல்வது கஷ்டம் என்றளவிற்கு வளர்ந்து விட்டது நன்று..

    ReplyDelete
  2. நல்ல தகவல்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete