Search This Blog

Friday, March 29, 2013

ஐ.பி.எல்.! - 6


ஒரே வருடத்தில் எல்லாமே தலைகீழ். சென்ற வருட ஐ.பி.எல்.லின்போது, இந்திய அணி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் படுதோல்விகளைச் சந்தித்ததால் யாருக்கும் பெரிய உற்சாகம் இல்லாமல் இருந்தது. இப்போது 4-0 என்று ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்த கொண்டாட்டத்தில், ஐ.பி.எல். ஜோராகக் களைகட்டி இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில்தான் தோனியை நீக்கிவிட்டு கோலியை கேப்டனாக்கவேண்டும் என்கிற கவாஸ்கரின் விமர்சனம், இப்போது, 2019 உலகக்கோப்பை வரை தோனிதான் இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்கிற வரை ஒரேடியாக மாறியிருக்கிறது. ஆனால், எந்த விமர்சனத்துக்கும் பதற்றப்படாமல் கஷ்ட நஷ்டங்களைச் சுலபமாகக் கடந்து விடுகிறார் தோனி. இதனால்தான் பல நாட்டு வீரர்கள் ஆடுகிற ஐ.பி.எல். லில்கூட தோனியால் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் கலக்கி விட்டார்கள். சி.எஸ்.கே.வைச் சேர்ந்த தோனி, அஸ்வின், ஜடேஜா, விஜய் ஆகிய நான்கு பேர்தான் டெஸ்ட் தொடரின் நாயகர்கள் (புஜாரா மட்டும் சி.எஸ்.கே.வில் இல்லை!). இதனால் சி.எஸ்.கே. மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக எகிறியிருக்கிறது. இந்த வருட ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், வழக்கம் போல தன்னுடைய அணியினரை விட்டுக் கொடுக்காமல் அதேசமயம் சில திறமையான உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களைப் புதிதாகத் தேர்வு செய்திருக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்தியா சார்பாக அபாரமாக விளையாடிய பாபா அபரஜீத் மற்றும் க்ரிஸ் மோரிஸ், ஜெஸன் ஹோல்டர் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சி.எஸ்.கே. வீரர்களாக ஐ.பி.எல். லில் அறிமுகம் ஆகிறார்கள். ஓய்வு பெற்றுவிட்டதால் மைக் ஹஸ்ஸி முழு ஐ.பி.எல்.லிலும் விளையாடுவார். ஆனால், சென்ற ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வின் புதிய நட்சத்திரமாக உருவாகிய தென் ஆப்பிரிக்காவின் டுபிளஸ்ஸி, காயம் காரணமாக ஏப்ரல் வரை ஐ.பி.எல். பக்கமே வரமாட்டார். கடந்த சில வருடங்களில் சி.எஸ்.கே.வின் பெரிய பலமாக இருந்த டக் பொலிஞ்சர் இப்போது அணியில் இல்லை. புதிதாக நுழைந்திருக்கும் அனுபவமிக்க ஆஸி வீரர் டிர்க் நேனஸ் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.கே.

வழக்கமாக ஐ.பி.எல். ஆரம்பித்த பிறகுதான் வரிசையாக சர்ச்சைகள் எழ ஆரம்பிக்கும். இந்தமுறை ஆரம்பிக்கும் முன்பே பெரிய தலைவலி கிளம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் போராட்டங்கள் ஐ.பி.எல்.லில் விளையாடும் இலங்கை வீரர்கள் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது என்று பல கல்லூரி மாணவர்கள் டி.வி.யில் பேட்டியளித்தது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. சென்னையில் ஆடும்போது மட்டும் ஐ.பி.எல். அணிகள் இலங்கை வீரர்களை அணியில் சேர்க்காமல் இருக்கலாம் என்று ஆலோசனைகள் கிளம்பினாலும் ஃபைனலுக்கு முந்தைய ப்ளே ஆஃப் ஆட்டம் சென்னையில்தான் நடக்கிறது. இதனால் சென்னையில் ஐ.பி.எல். மேட்சுகள் நடக்காமல் போகவும் அல்லது ஏராளமான பிரச்னைகள் உருவாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகி இருக்கின்றன. 

ஐ.பி.எல்.லில், சி.எஸ்.கே.வுக்கு நிகராக குழு மனப்பான்மை உள்ள அணி எதுவுமில்லை. இதனால்தான், கடந்த ஐந்து ஐ.பி.எல்.களிலும் அரையிறுதிக்குச் சென்ற ஒரே அணி என்கிற பெருமை சி.எஸ்.கே.வுக்கு உண்டு. இந்த வருடமும் சி.எஸ்.கே., மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள்தான் வலுவாக இருக்கின்றன. நாலாவதாக அரையிறுதிக்கு நுழையப் போகிற அணி எது என்கிற கேள்விதான் இப்போது. இன்றைய சி.எஸ்.கே., மும்பை இந்தியன்ஸ் அணி போல 2008ல் பீமபலம் கொண்ட அணியாக இருந்த டெக்கான் சார்ஜர்ஸ், நாளடைவில் மிகவும் தொய்வைச் சந்தித்துவிட்டது. இப்போது சன் ரைஸர்ஸாக மலர்ந்திருக்கும் ஹைதராபாத் அணி, புதிய உத்வேகத்துடன் ஐ.பி.எல்.லில் களம் இறங்குகிறது. சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐ.பி.எல்.லில் தொடர்ந்து ஆடுவது அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. சச்சினுக்காகவே மும்பை இந்தியன்ஸை ஆதரிப்பவர்கள் நிறைய பேர். சென்ற ஐ.பி.எல்.லை வென்ற கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக் ஆகியோர் இந்த ஒரு வருடத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து விட்டார்கள். தன் பழைய ஃபார்மை இருவரும் நிரூபிக்க இதுவே சரியான தருணம். அதேபோல ஜாகீர் கான், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், யூசுஃப் பதான், ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த் போன்றவர்களும் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய ஐ.பி.எல்.லைத்தான் நம்பி இருக்கிறார்கள்.ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.லிலும் ஓர் இந்திய வீரர் தன்னை முன்னிறுத்திக் கொள்வார். முதல் ஐ.பி.எல்.லில் யூசுப் பதான், இரண்டாவதில் நெஹ்ரா, மூன்றாவதில் அஸ்வின், நான்காவதில் ராகுல் சர்மா, ஐந்தாவது ஐ.பி.எல்.லில் ரெஹானே என பல வீரர்கள் இந்திய அணிக்குள் புதிதாக அல்லது மீண்டும் நுழைய பெரிய வாய்ப்பைத் தந்தது, ஐ.பி.எல். இந்த வருடமும் அதே எதிர்பார்ப்புகள் தான். எந்த அணி ஐ.பி.எல்.யை வெல்லப் போகிறது? புதிய நட்சத்திர வீரர் யார்?

2 comments:

  1. சுவையான அலசல்! நன்றி!

    ReplyDelete
  2. நல்ல அலசல்...

    csk திறமையான அணி..

    பாப்போம் என்ன நடக்குதுன்னு?

    ReplyDelete