ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
1879, மார்ச் 14ம் தேதி ஜெர்மனியின் உல்ம் நகரில் ஹெர்மன் - பாலின்
ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நீண்ட காலம் கழித்தே பேசத் தொடங்கிய
ஐன்ஸ்டைன், படிப்பில் பின்தங்கிய, விளையாட்டுகளிலும் ஆர்வமில்லாத மாணவனாகவே
விளங்கினார். இவர்தான் பின்னாளில்
பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட கோட்பாடு இயற்பியல் விஞ்ஞானி ஆனார்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் களுள் ஒருவராகக்
கருதப்படும் ஐன்ஸ்டைன் புகழ் பெற்ற சார்புக் கோட்பாடு, குவாண்டம்
எந்திரவியல், புள்ளியியல் எந்திரவியல், அண்டவியல் ஆகிய துறைகளில் மகத்தான
கண்டுபிடிப்புகளை அளித்தார்.
அப்பாவின் வியாபாரம் நொடித்துப் போகவே, ஐன்ஸ்டைன் குடும்பம்
ஜெர்மனியிலிருந்து இத்தாலியின் மிலன் நகருக்குக் குடிபெயர்ந்தது. ஐன்ஸ்டைன்
சுவிடசர்லாந்து சென்று பள்ளி படிப்பை
முடித்துவிட்டு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம்
பெற்றார். பிரௌனின் நகர்ச்சி (Brownian Motion), ஒளிமின் விளைவு
(Photoelectric Effect), பொருண்மை ஆற்றல் சமன்பாடு (Mass Energy
Equation),
சிறப்பு சார்பியல் கோட்பாடு (Special theory of relativity) ஆகிய
கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். 1905-ம் ஆண்டு அவர்
வெளியிட்ட இந்த மூன்று கோட்பாடுகளை
கௌரவிக்கும் விதத்தில், 2005ம் ஆண்டை ஐ.நா. சபை சர்வதேச இயற்பியல்
ஆண்டாகக் கொண்டாடியது.
ஒளிமின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு
இயற்பியலில் கணிசமான சேவைக்காகவும் 1921ல் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு
வழங்கப்பட்டடது.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி அமெரிக்கா
லட்சக்கணக்கான மக்களை அழித்த நாளை ‘இருண்ட தினம்’ என்று வருந்தினார்
ஐன்ஸ்டைன். அணு குண்டுகள் பூமியில்
வாழும் உயிரினங்களின் அழிவுக்கும், விண்வெளியில் கதிரியக்க விஷப்
பொழிவுக்கும் வழிவகுக்கும் என்று எச்சரித்தார். வாழ்வின் கடைசி வினாடி வரை
அணு ஆயுதம் மனித இனத்தையே அழித்துவிடும் என்று முழங்கிய
ஐன்ஸ்டைன், 1955 ஏப்ரல் 18 அன்று 76 ஆவது வயதில் மறைந்தார். ‘இருபதாம்
நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்’ என பிரபல டைம்ஸ் பத்திரிகை இவரைப்
போற்றிப் புகழ்ந்துள்ளது.
அகிரா குரொசோவா
1910 மார்ச் 23. ஜப்பானில் டோக்கியோ நகரில் இசாமு குரொசோவா என்ற ராணுவ
உடற்பயிற்சி ஆசிரியருக்கும், ஷிமாவுக்கும் மகனாக அகிரா குரொசோவா பிறந்தார்.
குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இசாமு படங்களுக்குச்
செல்லும் பழக்கம் இருந்ததால், பிற்காலத்தில் இயக்குனராக வேண்டும் என்னும்
குறிக்கோள் சிறு வயது முதற்கொண்டே அகிராவுக்கு இருந்தது.
1923ல் கைகா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளிப் படிப்பு
முடிந்த உடன் ஓவியராக விரும்பி டோக்கியோ நுண்கலை அகாடமியில் சேர்ந்தார்.
பின்னர் பத்திரிகை அலுவலகத்தில் ஓவியராகத் தனது
வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவர் திரைத்துறையில் தடம் பதிக்கத் தொடங்கியபோது ஊமைப் படங்கள்
முடிவுக்கு வந்து பேசும் படங்கள் வெளியாகத் தொடங்கின. 1936 டோஹோ ஃபிலிம்
ஸ்டூடியோவில் கதை வசனகர்தாவாகவும், உதவி இயக்குனராகவும் சேர்ந்தார்.
1943ல் ‘சான்ஷிரோசுகடா’ என்ற முதல் படத்தை இயக்கினார். 1950ல் இவரது
இயக்கத்தில் வெளியான ‘ரஷோமோன்’ படம் வெனிஸ் உலகத் திரைப்பட விழவில் முதல்
பரிசைப் பெற்றது. ஜப்பானியத் படங்களுக்கு
ஹாலிவுட்டில் தனி மரியாதை கிடைத்தது.
இகிரு, அகஹிகே, ஷிசினின் ஓ சமுராய், தி செவன் சமுராய், தி பாடிகார்ட்,
சஞ்சுரோ, தி மெக்னிஃபிசண்ட் செவன், எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் போன்ற
இவருடைய திரைப்படங்கள் ஒளிப்பதிவு, மனித
நேயத்துடனான ஆழமான கதையம்சம், படமாக்கப்பட்ட விதம், அழகுணர்வு,
படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
60களின் பிற்பகுதியில் குரொசோவாவின் படங்கள் பெரிய அளவில் வெற்றி
பெறவில்லை. ஆனால்1975ல் டெர்சு உஜேலா படம் அகாடமி விருதுகளைக் குவித்ததைத்
தொடர்ந்து மீண்டும் உச்சத்தைத்
தொட்டார். 1980ல் வெளியான ககேமுஷா கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசைத்
தட்டிச் சென்றது. 1985ல் வெளியான ரான் கேயோஸ் பல்வேறு பிரிவுகளில் அகாடமி
பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
80 வயதைக் கடந்த நிலையிலும் ட்ரீம்ஸ், க்யோஷிக்யோகு படங்களை இயக்கிச்
சாதனை படைத்தார்.
1990ல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1998,
செப்டம்பர் 7 அன்று சினிமாவுக்கென்றே வாழ்ந்த இந்த மேதை டோக்கியோவில்
மரணமடைந்தார். 62 வருட திரைப்பட
வாழ்க்கையில் இவர் இயக்கிய படங்கள் 31 மட்டுமே.
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஸ்காட்லாந்திலுள்ள
எடின்பரோவில் 1847 மார்ச் 3ம் தேதி பிறந்தார். இவரது தந்தை மெல்வில்
பெல்குரல் குரல்வளை, நாக்கு, தொண்டை, உதடுகள் உள்ளிட்ட
உறுப்புப் பயிற்சி நிபுணராக விளங்கியதால் கிரஹாம் பெல்லுக்கு இயல்பாகவே
‘குரல் மற்றும் ஒலி’ ஆகியவற்றில் ஆர்வம் தோன்றியது.
கிரஹாம் பெல் எடின்பர்க்கிலுள்ள ராயல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
1865ல் ஹெர்மன் ஹேம் ஹோல்ட்ஸ் எழுதிய ‘வியப்பூட்டும் குரலொலி’ என்னும்
புத்தகத்தைப் படித்ததைத் தொடர்ந்து மின்சாரம்
வழியே பேசும் ஒலியைச் செலுத்துவது குறித்து சிந்திக்கத் தொடங்கினார்.
1871ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியதைத் தொடர்ந்து, 1873ல் பாஸ்டன்
பல்கலைக்கழகத்தில் குரல் உறுப்புகள் துறைப் பேராசிரியராகச்
சேர்ந்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஆகிய இருவரும் தொலைபேசி
கண்டுபிடிப்பில் ஒரே காலகட்டத்தில் தனித்தனியே ஈட்டுபட்டனர். இறுதியில்
கிராஹாம் பெல் தொலைபேசி கண்டுபிடிப்பில் வெற்றி பெறவே அமெரிக்க
அரசு 1876 மார்ச் 7ம் தேதி அவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொண்டு
காப்புரிமையை வழங்கியது.
கிரஹாம் பெல் தனது கண்டுபிடிப்புகளின் உரிமையை 1,00,000 டாலருக்கு
வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் நிறுவனத்துக்கு விற்க முன்வந்தபோது அவர்கள்
வாங்க மறுத்துவிட்டனர். எனவே 1877ம் ஆண்டு ‘பெல் தொலைபேசி’ என்று சொந்தப்
பெயரில் நிறுவனத்தை
ஆரம்பித்து 30வது வயதிலேயே கோடீஸ்வரரானார். 1881ல் நிறுவனத்தின் மொத்த
பங்குகளில் மூன்றில் இரு பகுதியை விற்ற பிறகும் ஒரு பகுதிப் பங்குகளின்
மதிப்பாக 10,00,000 டாலர் கைவசம் இருந்தது.
கிராஹம் பெல் 1922 ஆகஸ்ட் 2 மறைந்தபோது அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தும்
வகையில் அமெரிக்காவிலுள்ள அனைத்துத் தொலைபேசிகளும் ஒரு நிமிடம்
நிறுத்தப்பட்டன.
உலக மக்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ள தொலைபேசி என்னும் மகத்தான
சாதனத்தைக் கண்டுபிடித்த பெல், தனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கூட தனது
அன்பு மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொள்ளவே இல்லை.
காரணம் அவரது மனைவி கேட்கும் திறனற்றவர்.
No comments:
Post a Comment