Search This Blog

Sunday, March 17, 2013

திருச்செந்தூர்.

வங்கக்கடலின் தாலாட்டில், நாளும் வந்து குவியும் பக்தர்களின் அத்தனைக் குறைகளையும் போக்கும் அற்புதத் திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் இரண்டாவது படைவீடு. சூரபத்மனின் சம்ஹாரம் நிகழ்ந்த அற்புத க்ஷேத்திரம். சூரசம்ஹாரம் நிகழ்ந்த பிறகு, சிவபூஜை செய்ய விரும்பினார் முருகப்பெருமான். அவரது விருப்பப்படி, தேவசிற்பி விஸ்வகர்மா ஒரு கோயிலை உருவாக்கினார். அதுதான், இன்றைய பிரமாண்ட திருச்செந்தூர் திருத்தலம். செந்தூர் முருகன் கடற்கரை ஆண்டியாக இருப்பதாக ஐதீகம். அதனால் இங்கே அவருக்கு அருகில் வள்ளி, தெய்வானையைப் பார்க்க முடியாது. அவர்கள் இங்கே தனித்தனி சந்நிதிகளில் அருள்கிறார்கள். 
 
செந்தூர் சிறப்புகள்... 
  இலைவிபூதி: திருச்செந்தூர் கோயிலின் புகழ்பெற்ற பிரசாதம் இது. பன்னீர் இலையில் விபூதியை மடித்துத் தருவதால் அப்படியரு பெயர். இந்த இலை விபூதியை உண்டுதான் ஆதிசங்கரர் தனக்கு ஏற்பட்ட நோயைப் போக்கிக்கொண்டதாகச் சொல்வர்.


நாழிக்கிணறு: இங்குள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. சண்முகவிலாசத்துக்கு எதிரே 24 அடி ஆழத்தில், ஒரு சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இந்தக் கிணற்றில் சுரக்கும் நீர் மிகவும் சுவையானது. சூரசம்ஹாரத்தின்போது தமது படைவீரர்களின் தாகம் தணிக்க முருகப்பெருமானே உருவாக்கிய கிணறு இது என்கிறார்கள்.

வள்ளிக்குகை: தேவேந்திரன் மகள் தெய்வானையை முருகப்பெருமான் மணந்துகொண்டதால் கோபம் கொண்ட வள்ளி இங்கே ஒளிந்துகொண்டதாகச் சொல்வர். கடற்கரையை ஒட்டியுள்ள சந்தனமலையில் அமைந்துள்ளது இந்தக் குகை.


அதிசய ராஜகோபுரம்!

9 நிலைகளும், 137 அடி உயரமும் கொண்ட திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டும் பணியை மேற்கொண்டவர் தேசிகமூர்த்தி சுவாமிகள். இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குக் கூலியாக விபூதியைப் பொட்டலமாக மடித்துக் கொடுத்தார் சுவாமிகள். இங்குள்ள தூண்டுகை விநாயகர் கோயில் அருகே விபூதி பொட்டலத்தை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அது அவர்களுக்கு ஏற்ற கூலிப் பணமாக மாறியதாக வரலாறு. மேலும், ராஜகோபுரம் கட்டும் பணிக்கு வள்ளல் சீதக்காதி ஒரு மூட்டை உப்பு கொடுக்க, அது தங்கக்காசுகளாக மாறியதாகவும் கூறுவர். கிழக்கில் இருப்பதற்கு மாறாக மேற்கில் இருக்கும் காரணத்தால் எப்போதும் மூடியே கிடக்கும் இந்தக் கோபுரம், கந்தசஷ்டி விழாவில் இடம்பெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் அன்று நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும்.
 

No comments:

Post a Comment