Search This Blog

Sunday, March 17, 2013

அருள்வாக்கு - மனஸ்!


நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுதுகிறாய், தெரிந்து கொள்கிறாய், எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுகிறாய். ஆனால், இதை எல்லாம் செய்யும் உன் மனஸ் என்னவென்று உனக்குப் புலப்படுகிறதோ? அதை நிறுத்தி வைத்து இன்னவென்று தன்னைத்தானே பார்த்து அறிந்து கொள்ளும்படி பண்ண முடிகிறதோ?

இந்த நிமிஷம் நல்லதாய்த் தெரிகிற மனஸ் அடுத்த நிமிஷம் மஹா கெட்டதாய் விடுகிறது. இந்த செகண்ட் சந்தோஷமாயிருக்கும் மனஸ் அடுத்த செகண்ட் துக்கம் கொண்டாடுகிறது. இந்த க்ஷணம் ஏதோ கொஞ்சம் சாந்தமாயிருக்கிற மாதிரி தோன்றுகிற இந்த மனஸு அடுத்த க்ஷணம் அப்படியிருக்குமா என்று தெரியவில்லை. இந்த மனஸ் என்பது என்ன? புரியவே இல்லை. ‘இதனால்தான் ஜீவனுக்கு எல்லா அனுபவமும் ஏற்படுகின்றன. இது வேலை செய்யாமல் தூங்கிப் போனால் அல்லது மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் எந்த அநுபவமுமேயில்லை’ என்பதால் இதுவேதான் நாம் என்று தோன்றுகிறது.

தூக்கத்தின்போது, மூர்ச்சையின்போது உனக்கு எந்த அநுபவமும் இல்லை என்பது சரி. நாமிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியத்தான் இல்லை. ஆனால், நீ அப்போது நிஜமாகவே இல்லாமல் போய்விட்டாயா, என்ன? அப்படியானால், தூக்கத்துக்கு அப்புறம் எப்படி முழித்துக் கொண்டாய்? தூக்கம் கலைந்து எழுந்த அப்புறம் அப்படி ஜடமாகக் கிடந்ததற்கும் சேர்த்து வைத்து எப்படிக் காரியம் செய்ய ஆரம்பித்தாய்?

மூர்ச்சையைப் பற்றியும் இப்படியே யோசித்துப் பார். தூக்கத்துக்கும், மூர்ச்சை போடுவதற்கும் முந்தி நீயாக இருந்த ஆஸாமியேதான் தூக்கம் கலைந்த பிற்பாடும், மூர்ச்சை தெளிந்த பிற்பாடும் நீயாக இருப்பது என்பதும் தெரிகிறதோல்லியோ? அப்போது உனக்கிருந்த அபிப்ராயங்கள், அநுபவங்கள், உறவுமுறைகள் எல்லாம் இப்போதும் தொடர்ந்து வருகின்றன அல்லவா? அந்த உடம்பேதானே இப்போதும் உன் உடம்பாயிருக்கிறது? இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தூங்குகிறபோதும், மூர்ச்சை போட்டுக் கிடந்தபோதும் உன் உயிர் இருக்கத்தானே செய்தது? ரத்த ஓட்டம், தேகத்தில் உஷ்ணம், சுவாசம் எல்லாம் இருக்கத்தானே செய்தன?

அதனால் மனஸ் இல்லாதபோது நீ இருக்கத்தான் இருந்தாய். அதாவது ‘நான் நான்’ என்று மனஸ் உள்ள போதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகிறதென்றாலும் மனஸ் இல்லாத போதும்கூட நாம் இருந்து கொண்டுதானிருக்கிறோம்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment