Search This Blog

Saturday, March 02, 2013

எனது இந்தியா ( கவிஞர்... கணித அறிஞர்! ) - எஸ். ரா.....

வித்யாதர் பட்டாச்​சாரியா என்ற அமைச்சரின் திட்டப்படி ஜெய்ப்பூர் கட்டப்பட்டது. வித்யாதர் பட்டாச்சாரியா, வாஸ்து சாஸ்திர நிபுணர் என்பதால், நகரம் ஒன்பது கோள்களைப்போல ஒன்பது பிரிவுகளாக அமைக்கப்பட்டது. இவற்றில் ஏழு பிரிவுகளில் மக்கள் வசிப்பிடமும் இரண்டு பிரிவுகளில் மன்னர்களின் அலுவலகங்களும் அமைக்கப்​பட்டன. 1853-ல் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையை முன்னிட்டு, ஜெய்ப்பூர் நகரம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டது. அன்று முதல் இந்த நகரை 'பிங்க் சிட்டி’ என்றே மக்கள் அழைக்கின்றனர். மொகலாய மன்னரான முகமது ஷாவின் ஆணைப்படி வானவியல் குறிப்புகளை ஆராய்ந்து அதில் திருத்தம் செய்யத் தொடங்கினார் மகாராஜா ஜெய்சிங். இதற்காக, ஏழு ஆண்டுகள் பல்வேறு மொழிகளில் உள்ள வானவியல் குறிப்புகளை, ஆய்வுகளைப் படித்து ஆராய்ந்து பரிசோதனையை துல்லியமாகச் செயல்படுத்துவதற்காக, வானவியல் அளவுக் கூடங்களை உருவாக்க விரும்பினார். அந்தக் கனவின் நிஜ வடிவமாக உருவானதே ஜந்தர் மந்தர்.

ஜெய்சிங், தான் படித்த வானவியல் புத்தகங்களின் துணையால், உள்ளூர் பளிங்குக் கற்களால் இந்தக் கட்டடங்களைக் கட்டினார். நேரத்தைக் கணக்கிடுவதற்காக இவர் உருவாக்கிய சூரியக் கடிகாரத்தின் வடிவம் கட்டடக்கலையில் அரிய சாதனை. வானவியல் கருவிகளைப் போலவே, நீர் பாய்ச்சும் இயந்திரங்களையும் விவசாயப் பணிகளுக்கான கருவிகளையும் ஜெய்சிங் வடிவமைத்து இருக்கிறார். 1,500 ஆண்டுகளுக்கு முன்பே, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் குறித்து எந்த உபகரகணங்களையும் பயன்படுத்தாமல் தாலமி என்ற அறிஞர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். முடிவில் அவர், 1,022 நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு வகைப்படுத்தி இருக்கிறார். அந்தப் பட்டியலை மேம்படுத்த பாக்தாத் நகரில் ஒரு சிறப்பு வானவியல் கூடம் அமைக்கப்பட்டு அதன் மூலம் நட்சத்திரங்களின் நகர்வுகள் கணக்கிடப்பட்டு 'தாலமி’யின் அட்டவணை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.


இதைத் தொடர்ந்து, 1,000-வது ஆண்டில் கெய்ரோ நகரில் கலிபா அல்ஹக்கிம் ஆட்சியின்போது ஒரு வானவியற்கூடம் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதுபோலவே, இன்றுள்ள ஈரானில் அமைந்துள்ள நிஷாப்பூரில் 1074-ம் ஆண்டு சிறப்பு வானவியற்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. இப்படி, அரபு மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் தொடர் முயற்சியால் வானவியல் குறித்த புதுமைகள் உலகுக்கு அடையாளம் தெரியவந்தன. 15-ம் நூற்றாண்டில் துருக்கிஸ்தானை ஆட்சி செய்த உலாபெக், வானவியலில் தீவிர ஆர்வலர். அவர் சாமர்கண்டில் பெரிய வானவியல் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்து நட்சத்திரங்களின் நகர்வுகளைத் துல்லியமாகப் பதிவுசெய்தார். இந்தப் பட்டியலில் 1,018 நட்சத்திரங்கள் குறிப்பிடப்​பட்டு இருந்தன. அவற்றின் இயல்பு, வேகம், நகரும் திசை, அதன் விளைவுகள் யாவும் துல்லியமாக விவரிக்கப்பட்டு இருந்தன. இந்த உலா​பெக்கின் அட்டவணையைத் திருத்தம்செய்து புதிய தகவல்களை இணைக்க விரும்பிய மன்னர் ஜெய்சிங், வானவியல் கருவிகளின் தொகுப்புக் கூடம் ஒன்றை நிர்மாணம் செய்தார். அதற்காக, சாமர்கண்டில் இருப்பதுபோலவே வானவியல் கருவிகளை தானே உருவாக்கி இருக்கிறார் ஜெய்சிங். மரபாக வானவியல் கருவிகள் பித்தளையில் செய்யப்பட்டன. ஆனால், அவற்றைக்கொண்டு துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்று உணர்ந்த ஜெய்சிங், இதற்காக விஷேசமான வடிவமைப்புகொண்ட கட்டடங்களை நிர்மாணம் செய்வது என்று முடிவுசெய்து, தானே வடிவமைத்து இருக்கிறார். சூரியனின் நகர்வைக்கொண்டு துல்லியமாகக் காலத்தைக் கணிக்கும் இவரது இயந்திர வடிவங்கள் உலகுக்கு இன்று பிரமிப்பான முன்னோடி முயற்சிகளாக உள்ளன.


பெர்ஷிய மற்றும் அரபு வானவியல் ஆய்வு​களுடன் அன்று ஐரோப்பாவில் நிலவிய வானவியல் ஆய்வுகளைப் பற்றியும் ஜெய்சிங் அறிந்து வைத்து இருந்தார். அதற்காக அவர், பிரெஞ்சு வானவியல் அறிஞர் டிலா ஹேரே எழுதி 1702-ல் வெளியான 'ஆஸ்ட்ரோ நாமிகே’ என்ற நூலை ஜெசுவிட் மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார் மூலம் வரவழைத்து படித்து இருக்கிறார். அதுபோலவே, பிரிட்டிஷ் வானவியல் அறிஞர் பிளாமிஸ்ட் எழுதிய வானவியல் நூல்களையும் லண்டனில் இருந்து வாங்கி அதில் உள்ள நட்சத்திரங்களின் அட்டவணையைப் பரிசீலனை செய்து இருக்கிறார். தனது ஆய்வுப் பணிகளுக்கு உதவிசெய்வதற்காக ஒரு வானவியல் அறிஞரை அனுப்பிவைக்கும்படி போர்த்துக்கீசிய மன்னருக்கு வேண்டுகோள் விடுத்தார் ஜெய்சிங். அவர், டிசில்வா என்ற அறிஞரை அனுப்பிவைத்தார்.

மொகலாய மன்னர்கள் ஜெய்​சிங்கின் இந்தத் திறமையை மெச்சி அவரைப் பாராட்டியதுடன், விஞ்ஞானப் பூர்வமான அணுகு​முறையுடன் காலக்கணித முறையை நாடெங்கும் அறிமுகப்படுத்தினர். டெல்லியின் இம்பீரியல் ஹோட்டலின் பின்பகுதியில் அமைந்துள்ளது ஜந்தர் மந்தர்.


உலக வரலாற்றில் கிரேக்கர்களுக்குப் பின் அறிவியல் வளர்ச்சியில் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். அவர்களின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிடும் கல்வியாளர் ரியாஸ் முகமது, ''கிரேக்கர் விட்டுச்சென்ற அடிச்சுவடுகளைத் தொடர்ந்து, தூசுபடிந்து கிடந்த அவர்களது அறிவுக் கருவூலங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை மொழிபெயர்த்தும், ஆராய்ந்தும், விமர்சித்தும், விளக்கம் எழுதியும், மேலே சென்று புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்து உலக வரலாற்றில் அழிக்க முடியாத பல தடங்களைப் பதித்தது இஸ்லாமியர்களே'' எனக் கூறுகிறார். அதாவது, அரேபிய வானவியல் துறை ஒரு கோப்பர்னிகஸையோ அல்லது நியூட்டனையோ உருவாக்கவில்லை. ஆனாலும், அரேபியர்களது பங்களிப்பு இல்லாமல் ஒரு கோப்பர்னிகஸோ அல்லது நியூட்டனோ பிறந்து இருக்கவே முடியாது என்று, ஆர்.பிரிபோல்ட் என்பவர் 'த மேக்கிங் ஆஃப் ஹியுமானிட்டி’ என்ற நூலில் கூறி இருப்பதை குறிப்பிடுகிறார்.

பாக்தாத்தை ஆட்சி செய்த கலீபா ஹாரூன் அர்ரஷீத், மஃமூன் ஆகியோரது ஆட்சிக் காலத்திலும், அறிவியல் சிந்தனைகளை மேம்படுத்த பல்கலைக்கழகம் ஒன்றும், வானோக்கு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டன. இவர்களது காலத்திலேயே அறிவியல் நூல்களின் மொழிபெயர்ப்புப் பணி முழுவீச்சில் நடந்து இருக்கிறது.

கலீபா அல் மஃமூன், பக்தாத் நகரில் 'பைத்துல் ஹிக்மா’ என்னும் அறிவு நிலையம் ஒன்றை நிறுவினார். இந்த நிறுவனமே முஸ்லிம்களின் அறிவியல் ஆராய்ச்சிக்கு நிலைக்​களமாக விளங்கியது. இந்த நிறுவனம் மொழிபெயர்ப்புப் பணியில் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சிக் கூடமாக​வும் பொது நூல்நிலையமாகவும் விளங்கியது.
கலீபா அல்மன்ஸ¨ரின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 754-775) இந்திய வானியல் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. யார் அந்தச் சிந்தனையை முன்வைத்த அறிஞர் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கலிபா மன்சூர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் இருந்து வந்த யாத்ரீகர், கோள்களின் நகர்வைக்கொண்டு கிரகணத்தைத் துல்லியமாகக் கணித்தார். அவரிடம் இருந்த வானவியல் குறிப்புகள் 'ஸின்ந் ஹிந்து’ எனும் தலைப்பில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இது, அரபுலகில் வானியல் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்​படையாக அமைந்தது.

கலீபா மன்சூருக்காக அபூ யஹ்யா பின் அல் பத்ரீத் என்பவர் இயூக்கிலீட்டின் 'மூலகங்கள்’ (The  Eliments) , தொலமியின் 'அல்மஜெஸ்ட்’ ஆகியவற்றை மொழிபெயர்த்து இருக்கிறார். அதுபோலவே, கலீபா ஹாரூன் காலத்தில் ஈரானிய வானியல் விஞ்ஞானிகளின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்களாக முஸ்லிம்​கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், அரேபியர்கள், சிரிய மதங்களைச் சேர்ந்தவர்​களும் பணியாற்றினர். பூமி உருண்டையானது என நிறுவி, அதன் சுற்றளவைக் கணிக்கும் ஆராய்ச்சி இந்தக் காலத்தில்தான் தொடங்கியது. ஆனால், இதே காலத்தில் அறிவியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் ஐரோப்பாவில் பூமி தட்டையானது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.    

'இஸ்லாம் மற்றும் அரபு வரலாறு’ எனும் நூலில் கஸ்டர் லீ பொன், 'நூல்கள் மற்றும் நூலகங்களின் முக்கியத்துவம் பற்றி ஐரோப்பியர் அறிந்திராத காலத்திலேயே பல இஸ்லாமிய நாடுகளில் நூல்களும் நூலகங்களும் நிறைய இருந்தன. பக்தாத்தில் இருந்த 'பைத்துல் ஹிக்மா’வில் 40 லட்சம் நூல்கள் இருந்தன. கெய்ரோவில் இருந்த சுல்தானியா நூல் நிலையத்தில் 30 லட்சம் நுல்கள் இருந்தன. இஸ்பெயினில் முஸ்லிம் ஆட்சியின் கீழ் ஆண்டுதோறும் 80,000 நூல்கள் வெளியிடப்பட்டன’ என்கிறார்.

ருபயாத் என்ற புகழ்பெற்ற கவிதை நூலை எழுதிய கவிஞர் உமர் கய்யாம் ஒரு கணித அறிஞர். வானவியல் விற்பன்னர். இவர், தனது தொடர் ஆராய்ச்சியின் மூலம் ஜலாலி நாட்காட்டி ஒன்றை உருவாக்கி, ஈரானுக்கு அளித்து இருக்கிறார். அந்தக் காலக்கணிதம் இன்று வரை பின்பற்றப்படுகிறது. ஒரு மாபெரும் கவிஞர் சிறந்த வானவியல் அறிஞராக இருப்பது பலரும் அறியாத நிஜம்.

இன்று, அறிவியல் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள ஆங்கிலம் பயன்​பட்டது​​போல, ஒரு காலத்தில் அரபு மொழி பயன்படுத்தப்பட்டது. ஜெய்சிங் தனது வானவியல் ஆய்வு​களுக்​காக அரபு கற்றிருக்கிறார். அரபு மொழியில் இருந்த வானவியல் நூல்களை முன்மாதிரியாகக்கொண்டு தனது ஆய்வைத் தொடர்ந்து இருக்கிறார். இவர் உருவாக்கிய வானவியல் கூடங்கள்  இன்று யுனெஸ்​கோவின்நினைவுச்​சின்னமாகப் பாதுகாக்கப்​படுகின்றன.

அறிவியலையும் வரலாற்றையும் இணைக்கும் ஜந்தர் மந்தர், இந்திய வானவியலின் அரிய சாதனை. அதைப் பராமரிக்கவும், பெருமைப்படுத்தவும், பின்பற்றி வளர்த்து எடுக்கவும் வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.

2 comments:

  1. சிறப்பான பகிர்வு! அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete