Search This Blog

Sunday, March 24, 2013

கோப்ராபோஸ்ட் - கறுப்புப் பண வங்கிகள்...

கோப்ராபோஸ்ட் - யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இணையதளம் இன்றைக்கு ஃபைனான்ஸ் மற்றும் பிஸினஸ் வட்டாரத்தில் படுபாப்புலராகிவிட்டது. காரணம், சமீபத்தில் இந்த இணையதளம் வெளியிட்ட ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்தான். வெளிநாட்டு வங்கிகளில் குவிந்துகிடக்கும் கறுப்புப் பணத்தை எப்படி கொண்டுவருவது என எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, நம்மூரில் இருக்கும் சில வங்கிகளே கறுப்புப் பணத்தைப் பதுக்கி நிர்வாகம் செய்வதற்கான ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் செய்துதருகின்றன என்பதுதான் அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்.
 
ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய வங்கிகள் கறுப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வழி சொல்லித் தருகிறது. இது ஏதோ ஒரு கிளையில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பல இடங்களிலும் நடக்கிறது என்பதை இந்த இணையதளம் வீடியோ ஆதாரத்தோடு (இந்த வீடியோ மட்டுமே 100 மணி நேரத்துக்கு மேல் ஓடுமாம்!) வெளியிட, சம்பந்தப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி, நிதித் துறை வட்டாரங்களே அரண்டுபோய்க் கிடக்கிறது.வங்கியின் துணையோடு எப்படியெல்லாம் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை கோப்ராபோஸ்ட் இணையதளமே சொல்கிறது. 'பொதுவாக, 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு பான் கார்டு எண் தரவேண்டும். ஆனால், பணமாக முதலீடு செய்யாமல் வேறு பல வழிகளைப் பயன்படுத்தி, பான் கார்டு பிரச்னையிலிருந்து எளிதாகத் தப்பித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, வங்கிக்குக் கொண்டுவரப்படும் பணத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது, தங்க நகைகளை வாங்குவது, வேறு வங்கியிலோ அல்லது அதே வங்கியிலோ பல டி.டி.களை எடுத்து வங்கிக்கு மாற்றுவது, வேறு வங்கியில் போட்டு அதன்பிறகு மொத்தமாக மாற்றுவது, கே.ஒய்.சி. விதிமுறைகளை மீறுவது, பணம் தந்து மற்றவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி, அதன்பிறகு மாற்றுவது உள்ளிட்ட பல வேலைகளை இந்த வங்கிகள் செய்துதர முயன்றுள்ளது' என சொல்கிறது கோப்ராபோஸ்ட்.
 
இதுமட்டுமல்லாமல், சாதாரணமாக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம்கூட இப்படி ஒரு வழிமுறை இருக்கிறது என்பதைச் சொல்லி பேரம் பேசி இருக்கிறார்கள் இந்த வங்கி அதிகாரிகள் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது கோப்ராபோஸ்ட்.


இந்தச் செய்தி வந்தவுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சில பணியாளர்களை சஸ்பெண்ட் செய்தது. மற்ற வங்கிகளும் சில ஒழுங்குநடவடிக்கைகளை எடுத்தது. மறுபுறம் ரிசர்வ் வங்கியும் விசாரணை நடத்தி வருகிறது.
 

No comments:

Post a Comment