சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் வரிசையில் உலகம் சந்தித்த, சந்தித்துக்
கொண்டிருக்கிற, சந்திக்கப் போகும் ஆபத்து நிறைந்த இயற்கைச் சீற்றம் என்று
சொன்னால் அது எரிமலை வெடிப்பாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய
நிலப்பகுதிகள் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வரை ஏராளமானவற்றை அழித்
தொழித்துள்ள எரிமலைகள் உலகின் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்றன.
உலகம் தழுவிய அளவில் பிரம்மாண்டமான அழிவுகளையும் பெருத்த தட்பவெப்ப
மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய, நெருப்பைக் கக்கக்கூடிய எரிமலைகளுக்கு
ஆங்கிலத்தில் வல்கனோ என்று பெயர். இத்தாலியர்களின் நெருப்புக்
கடவுள் வால்கன். ஆகவே, நெருப்புடன் தொடர்புடைய அந்தப் பெயரே
எரிமலைகளுக்குப் பொருந்தி விட்டது. எரிமலைகள் பற்றிய ஆய்வுகளுக்கு
வல்கனோலஜி என்று பெயர்.
பூமியின் உட்புறத்தில் ஏற்படும் இயற்கையான நகர்வுகள் காரணமாக பூமியின்
மேல்பகுதியில் ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவுக்கு எரிமலை என்று பெயர்.
அந்தப் பிளவு அல்லது வெடிப்பின் வழியாக
பூமியின் உட்புறத்தில் உள்ள சூடான கற்குழம்புகளும் சாம்பலும் அசாதாரண
முறையில் வெளியேறுகின்றன. அப்படி வெளியேறும் கற்குழம்புதான் லாவா என்று
அழைக்கப்படுகிறது.
எரிமலை குமுறி வெடிக்கும்போது பூமியின் அடிப்பரப்பில் இருந்து
மேல்பரப்பை நோக்கிச்சிதறும் பாறைகள் அல்லது கற்களால் ஆன குழம்பே லாவா.
எரிமலையின் துளையில் இருந்து கற்குழம்பு வெளிவருகிற சமயத்தில்
அதன் வெப்பநிலை 700 டிகிரி செல்சியஸ் முதல் 1200 டிகிரி செல்சியஸ் வரை
இருக்கும்.
இந்த லாவாவின் பாகுநிலை சாதாரண நீரைக்காட்டிலும் ஒரு லட்சம் மடங்கு
அதிகம். ஆனாலும் இந்தக் கொதிக்கும் கற்குழம் பானது வெகுதூரம் வரைக்கும்
உறையாமல் ஓடக்கூடிய சக்தி கொண்டது. அதேசமயம், எரிமலை ஆக்ரோஷமாக
வெடித்துச் சிதறினால்தான் கற்குழம்புகள் வெளியேற வேண்டும் என்ற
அவசியமில்லை. எரிமலையின் முகத்துவாரம் போன்ற துளையின் மூலமாகவும் சிறிய
அளவில் வெளியேறுவது உண்டு.
லாவாக்களின் வகைகள்மிகுந்த பாகுத்தன்மை கொண்டவை, இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்டவை, குறைந்த பாகுத்தன்மை கொண்டவை
முதல் வகை லாவாவில் சிலிக்கா, அலுமினியம் பொட்டாசியம், சோடியம்,
கால்சியம், குவாட்சு ஆகிய வேதியியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
பாகுத்தன்மை அதிகமாக இருப்பதால்
இந்த வகை லாவாக்கள் குறைவான வேகத்தில் மட்டுமே பாய்கின்றன. அதேசமயம் அதிக
தூரத்துக்குப் பாயக்கூடியவை.
இரண்டாம் வகை லாவாவில் அலுமினியம், சிலிக்கா ஆகியவற்றின் அளவு குறைவாக
இருக்கும். இரும்பு, மாங்கனிசு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருக்கும்.
பாகுத்தன்மை சற்றே மிதமாக இருப்பதால்
இவற்றின் பாயும் வேகம் முதல் வகையைக் காட்டிலும் அதிகமானது.
மூன்றாவது வகையான லாவா அதிக வெப்பநிலை கொண்டது. பாகுத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அதிவேகமாகப் பாயக் கூடிய தன்மை கொண்டது.
பலத்த சத்தத்துடன் எரிமலைகள் வெடித்துச் சிதறும்போது பல்லாயிரம்
மைல்களுக்கு நெருப்பு மழை பொழிந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய
தட்பவெப்ப மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி எரிமலைகள் வெடிக்கும்
போது நச்சுத்தன்மை கலந்த வாயுக்கள் வெளியேறுகின்றன. ஹைட்ரஜன் சல்பைடு,
ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃப்ளோரைடு ஆகிய மூன்று வாயுக்கள்தான் எரிமலை
வெடிப்பின்போது உமிழப்படும் முதன்மையான
வாயுக்கள்.
மேலும், அதீத வெப்பத்துடன் கூடிய நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, சல்ஃபர்
டை ஆக்ஸைடு மற்றும் பாறைத்துகள்களும் உமிழப்படுகின்றன. இவை தவிர, ஹாலோ
கார்பன்கள், கரியமில மற்றும் ஆவியாகும் தன்மை கொண்ட உலோகக்
குளோரைடுகள் ஆகியனவும் எரிமலை வெடிப்பின் போது பூமிப் பகுதியில்
உமிழப்படுகின்றன. இவற்றில் ஹைட்ரஜன் குளோரைடும் ஹைட்ரஜன் ஃப்ளோரைடும்
மேகத்தில் உள்ள நீர்த்தி வலைகளில் கரைந்து அமில மழையை
உருவாக்கி விடுகின்றன.
உலகின் மிகப்பெரிய எரிமலை 1815ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சும்பவா தீவில்
உள்ள டம்போரா மலையில் வெடித்ததுதான். சுமார் ஒரு லட்சம் உயிர்களைப் பலி
கொண்டது இந்த எரிமலை.
எரிமலையின் சமீபத்திய வெடிப்புகளையும் அதன் தொடர்ச்சியையும் அடிப்படையாக வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
முதல் வகை, உறங்கும் எரிமலைகள். வரலாற்றுக் காலங்களில் ஒருமுறையோ அல்லது
பலமுறையோ வெடித்துச் சிதறி, ஆனால் சமீப காலமாக எந்தவிதச் சலனமும் இல்லாமல்
இருக்கும் எரிமலைகளுக்கு
உறங்கும் எரிமலைகள் என்று பெயர். இவை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச்
சிதறக்கூடியவை.
இரண்டாவது வகை, உயிர்த்துடிப்புள்ள எரிமலைகள். வரலாற்றுக் காலங்களில்
வெடித்துச் சிதறியதோடு, வெகு சமீபத்திலும் வெடித்துச்சிதறிய எரிமலைகளுக்கு
உயிர்த்துடிப்புள்ள எரிமலைகள் என்று பெயர். சமீபகாலம் என்று சொல்வது
எரிமலைகளைப் பொறுத்தவரை பத்தாயிரம் ஆண்டுகளைக் குறிகிறது.
மூன்றாவது வகை, இறந்துபோன எரிமலைகள். வரலாற்றுக் காலங்களில்
வெடித்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல், சமீபத்திலும் எந்தவித
சலனத்துக்கும் ஆட்படாமல் இருக்கின்ற எரிமலைகளுக்கு அழிந்துபோன எரிமலைகள்
என்று பெயர்.
வெடிப்பதற்கு எந்த விதமான அறிகுறியும் தட்டுப்படவில்லை என்பதைத் தீவிரமாக
சோதனை செய்த பிறகே இப்படியான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
எது உறங்கும் எரிமலை, எது அழிந்துபோன எரிமலை என்பதை அடையாளம் கண்டு
அறிவிக்கும் விஷயத்தில் அறிஞர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள்.
ஏனென்றால், எரிமலைகளின் முக்கிய
குணமே அவற்றின் உறக்கம்தான். பல எரிமலைகள் அழிந்து போனவையாகக்
கருதப்பட்டிருந்த நிலையில் திடீரென வெடித்துச் சிதறி ஏராளமான சேதங்களை
ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, அலாஸ்காவில் உள்ள ஃபோர்பிக்ட் எரிமலை
2006 செப்டெம்பர் வரை அழிந்துபோன ஒன்றாகவே கருதப்பட்டு, திடீரென வெடித்து
ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது.
ரஷ்யா, ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, இந்தோனேஷியா, கிரீஸ், பிலிப்பைன்ஸ்
உள்ளிட்ட பல நாடுகளில் எரிமலைகள் அதிக அளவில் இருக்கின்றன. அவற்றில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எரிமலைகள் தொடர்ச்சியாக
நெருப்புக் குழம்பைக் கக்கியபடியே இருக்கின்றன.
No comments:
Post a Comment