Search This Blog

Saturday, March 16, 2013

எனது இந்தியா (தாகூரின் கல்விமுறை !) - எஸ். ரா

ரவீந்திர பவனா என்ற பிரிவில் ரவீந்திரரின் நாடகம், இசை போன்றவை ஆராய்ச்சி செய்யப்பட்டன. சங்கீத பவனா பிரிவில் இசை, நாடகம், நடனம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இங்கேதான் புகழ்பெற்ற ரவீந்திர சங்கீதம் என்ற வகைமை உருவாக்கப்பட்டது. அதுபோலவே, சிற்ப பவனா பகுதியில் மரம் மற்றும் கல்லில் சிற்பங்கள் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கிராமப்புற மறுவாழ்வு குறித்துக் கற்பிக்கத் தனியாக ஒரு பிரிவும், வேளாண்மையைக் கற்றுக்கொள்ளத் தனிப் பிரிவும் கணிதம், புள்ளியியல், இயற்பியல், தாவரவியல், உயிரியல் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள விஞ்ஞானப் பிரிவும் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்க கல்வி கற்பித்தல் துறையும் வரலாறு மற்றும் பொருளாதாரம் கற்பிக்கும் தனித் துறைகளும் இங்கே உருவாக்கப்பட்டன. இவற்றுடன், இந்தியக் கலாசாரம், வங்காளம் மற்றும் ஆங்கில இலக்கியங்களும் போதிக்கப்பட்டன.

இந்த வளாகத்துக்குள் ஓர் ஆரம்பப் பள்ளியும் இருக்கிறது. இந்தப் பள்ளிதான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. இங்கே ஆண், பெண் இருபாலரும் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் முதல் மாணவர்​களாக தாகூரின் பிள்ளைகள் சேர்க்கப்​பட்டனர். விஸ்வ​பாரதி பல்கலைக்கழகத்தின் மிக முக்கியமான இடம், அதன் நூலகம். லட்சக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட இந்த நூலகத்தில், தாகூரின் சேமிப்புகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சீன மற்றும் ஜப்பானிய அரசுகள் வழங்கிய புத்தகங்கள், அரிய புத்தகங்கள் மற்றும் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தின் சுவர்கள் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டவை. அத்துடன், திறந்தவெளியில் அற்புதமான சிற்பங்களும் உண்டு.  புகழ்பெற்ற இந்திய இயக்குநரான சத்யஜித்ரே, சாந்திநிகேதனில் படித்தவர். 'சாந்திநிகேதனில் மூன்று வருடங்கள் படித்தேன். அது, என் வாழ்வின் வசந்த காலம். அங்கேதான் மேற்கத்திய இசை மற்றும் கிழக்காசிய நாடுகளின் ஓவியக் கலைகளை நான் அறிந்துகொண்டேன். அது, எனது ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சாந்திநிகேதன்தான் எனது கலை ஆர்வத்தின் தொடக்கப் புள்ளி. மானுட நேசமே கலையின் ஆதாரம் என்பதை சாந்திநிகேதனில்தான் கற்றுக்கொண்டேன்’ என்கிறார் சத்யஜித்ரே. ஜவஹர்லால் நேரு தனது 'தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலில் சாந்திநிகேதனைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார். அத்துடன், தனது மகள் இந்திரா காந்தியை சாந்திநிகேதனில் கல்வி பயில அனுமதித்தார். ரவீந்திரநாத் தாகூர்தான், இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி என்ற பெயரைச் சூட்டினார். ஒரு மாணவன் முதல் வகுப்பில் சேர்ந்து டாக்டர் பட்டம் பெறும் வரை தேவையான அனைத்துத் துறைகளும் இந்த ஒரே பல்கலைக்கழகத்துக்குள் இருக்கின்றன என்பதே இதன் தனிச் சிறப்பு. 63 வயதானபோது பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று  தாகூர் அங்கு சென்றார். அங்கிருந்து, மெக்சிகோவுக்கும் சென்று கலை இலக்கியம் குறித்த உரைகளை ஆற்றினார். இன்று வரை தாகூரின் கவிதைகள் அங்கே விரும்பி வாசிக்கப்படுகின்றன. இரு நாட்டு அரசுகளும் தாகூரின் வருகையின் நினைவாக சாந்திநிகேதனுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கின.


தாகூரைப் போலவே, காந்தியும் கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பி 'வார்தா’ என்ற தொழில்முறைக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். ''இந்தக் கல்வியில், தொழில் கற்பதுதான் ஆதாரம். 'வார்தா’ கல்வித் திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகக் கருதப்படுபவை 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி. அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் கல்வி. அனைத்துப் பாடங்களும் தேர்ந்தெடுக்கப்​பட்ட கைத்தொழிலுடன் இணைக்கப்படும். உற்பத்தியுடன் இணைந்த கல்விச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். தாய்மொழியில் பாடம் கற்றுத்தரப்படும். சமயம், நன்னடத்தைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்று காந்தி கூறினார்.

''இது, பழைய குலக் கல்வி முறையை மறுபடி உருவாக்க முயற்சிக்கும் திட்டம்'' என தந்தை பெரியார் கடும் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸின் 'வார்தா திட்டக் கல்வி’ என்பது வர்ணாசிரம தர்மத்தைப் புதுப்பித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் கருத்தைக்கொண்டதால், இந்தக் கல்வி ஒரு நாளும் வெற்றி பெறாது என்பதுடன், இது இயற்கைக்கு முரணானது. ஏனெனில் உலக முற்போக்கு, இந்தியாவை மட்டும் கல்ஆயுதக் காலத்துக்குத் தள்ளிவிட அனுமதிக்காது. ஆதலால், ஒவ்வொரு வகைத் தொழிலாளி வர்க்கமும் ஒன்று சேர்ந்து சாதியையும் வகுப்பையும் மறந்து ஒரே வர்க்கத் தொழிலாளராகி, இயந்திர உலகத்துக்குத் தயாராக இருக்க வேண்டும்'' என்பதே பெரியாரின் வாதம்.

'மகாத்மா’ என்ற பட்டத்தை காந்திக்கு அளித்தவர் மகாகவி தாகூர். ஆனாலும், அவருக்கும் காந்திக்கும் இடையில் நிறையக் கருத்துவேறுபாடுகள், முரண்கள் இருந்தன. பரஸ்பரம் நேரடியாகவே விமர்சனம் செய்துகொண்டனர். சுதந்திரப் போராட்டக் களத்தில், தாகூர் நேரடியாகப் பங்குகொள்ள​வில்லை என்ற விமர்சனம் அவர் மீது சுமத்தப்பட்டது. அது, உண்மை அல்ல. தாகூர், சுதந்திர எழுச்சிக்கு முக்கியமான காரணியாக விளங்கினார் என்பதே உண்மை. 1905-ம் ஆண்டில் 'வங்காளத்தைப் பிரிப்போம்’ என்று அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. தாகூர் அதற்கு எதிராகப் பல்வேறு கண்டனக் கூட்டங்களில் பேசினார். ''தாகூர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை' என்று, இ.ஜே. தாம்சன் என்ற ஆங்கிலேயர் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல் தாகூருக்கு 'ஸர்’ பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்கள் மீது ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஏராளமானோர் இறந்தனர். அந்தப் படுகொலையைக் கண்டித்த தாகூர், தனக்கு அளிக்கப்பட்ட 'ஸர்’ பட்டத்தைத் துறந்தார். 1930-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி, டாக்டர் மெண்டில் என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவரது இல்லத்தில் சந்தித்து தாகூர் உரையாடினார். அது, மிக முக்கியமான வரலாற்றுச் சந்திப்பு. அதுபற்றி, அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த நேர்காணலில் ஐன்ஸ்டீன், தாகூரின் தத்துவக் கருத்துகளைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தனது வாழ்நாளில் ஐந்து கண்டங்களில் 30 தேசங்களைச் சுற்றி வந்து அதன் கலை, கலாசாரம், இலக்கியம் பற்றி கற்றறிந்தவராக விளங்கினார் தாகூர்.

தாகூரும் காந்தியும் நல்ல நண்பர்கள் என்றாலும், தேசியம், நாட்டுப்பற்று, கலாசார மாற்றம், அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் காந்தியிடமிருந்து மாறுபட்டார் தாகூர். தனது தாம்பத்ய வாழ்க்கையைப் பகிரங்கமாக சத்திய சோதனை நூலில் எழுதினார் காந்தி. ஆனால் தாகூரோ, 'தாம்பத்ய வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது பெண்ணியத்தைக் கேலிசெய்வதாகும்'' என, அதைக் கண்டித்து எழுதினார். 'மாடர்ன் ரிவ்யூ’  இதழில் 'சர்க்கா வழிபாடு’ என்ற தலைப்பில் தாகூர் எழுதிய கட்டுரையில், 'கைராட்டையை அதன் குறிப்பிட்ட தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்​சியும் ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால், இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கியப் பணிகளில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். செக்குமாடுபோல சர்க்காவை ஒரே மந்தகதியில் சுழற்றிக்கொண்டிருப்பது சாவுபோன்ற வெறுமையே ஆகும். அது, புத்தியை மழுங்கச்செய்யும் காரியம் என்பதே எனது துணிபு'' என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதி​லளித்து 'கவியும் சர்க்காவும்’ என்ற தலைப்பில் காந்திஜி தமது 'யங் இந்தியா’ பத்திரிகையில் பதில் அளித்தார். அதில், 'மகாகவியின் கண்டன விமர்சனம் கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம். அதை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப்போனால், சூரியனும் கிரகங்களும் ஒரே மாதிரியான இயந்திர கதியில்தான் இயங்குகின்றன. பாதை தவறினால் அதோ கதிதான்... தினமும் அரை மணி நேரமேனும் ஓர் யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறிவருகிறேன். நாள் முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே கைராட்டை. கிராமங்களில் சர்க்கா நிலைபெற்றால் பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு எல்லாமே மேம்படும்'' என்றெல்லாம் காந்திஜி பதில் வாதம் செய்தார்.

1934-ல் பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தைப் பற்றி குறிப்பிட்ட காந்தி, ''அது, மக்களின் பாவத்துக்கு கடவுள் அளித்த தண்டனை'' என்று கூறியதைப் பகிரங்கமாகக் கண்டித்த தாகூர், மகாத்மா பட்டத்துக்கு காந்தி தகுதியானவர் அல்ல, அதைத் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் இருவரும் பரஸ்பரம் அன்பும் அக்கறையும்கொண்டவர்களாகவே விளங்கினர். 'மனிதாபிமானி காந்தி’ என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில், ''காந்திஜி இந்திய மக்களின் பெருந்தலைவர். மானிட வர்க்கத்தின்பால் அவர்கொண்டுள்ள பேரன்பு அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது'' என்று மனம் திறந்து பாராட்டினார். 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, தாகூர் மறைந்ததையட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச் சிறந்த கவியை மட்டும் இழக்கவில்லை, அபரிமிதமான மனிதாபிமானியையும் ஆர்வமிக்க தேசியவாதியையும் இழந்துவிட்டோம். அவரது சக்திமிக்க தனித்தன்மை, தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதும் இல்லை. சாந்திநிகேதனிலும், ஸ்ரீநிகேதனிலும், நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர் மரபுரிமைச் செல்வத்தை அளித்துச் செல்கிறார்''’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறையில், மாணவனது உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க-ஆன்மிக வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றுசேர வளர்ச்சியடையும் என்று தாகூர் நம்பினார். அதன் விளைவாக உருவான சாந்திநிகேதன் நூற்றாண்டைக் கடந்து இன்றும் வங்காளத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், கல்வி வணிகமாகி, சிறைக்கூடங்களைப்போல இறுக்கமான அறைகளில் மாணவர்கள் பாடம் கற்கும் இன்றைய சூழலில் தாகூரின் கல்விக் கனவு இந்தியாவின் பிற பகுதிகளில் பின்தொடரப்படாமல் காற்றோடு கரைந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது.

No comments:

Post a Comment