Search This Blog

Saturday, March 23, 2013

எனது இந்தியா (இண்டிகோ புரட்சி !) - எஸ். ரா

காலனி ஆதிக்கம் இந்திய மக்களின் அடிப்படைப் பண்புகளில் பலவற்றை மாற்றி அமைத்திருக்கிறது. பல்வேறு வித உணவுப்பயிர்களை விளைவித்துவந்த இந்திய விவசாயிகளை வற்புறுத்தி, பணப்பயிர்​களை பயிரிடவைத்தது பிரிட்டிஷ் அரசு. நீலச் சாயம் எடுப்பதற்காக வங்காளத்தில் பல்லாயிரக்​கணக்கான ஏக்கர் நிலத்தில் அவுரிச் செடியை கட்டாயப்படுத்திப் பயிரிடச் செய்தனர். அதுதான், இந்திய விவசாயம் பணப்பயிரை நோக்கி வைத்த முதல் அடி. அதற்கு முன், விவசாயிகள் எவரும் பணம் கிடைக்கும் என்பதற்காக மட்டும் எந்தப் பயிரையும் விளைவிக்கவில்லை. நிர்ப்பந்தம் காரண​மாக விவசாயம் செய்யவும் இல்லை.  

இந்தியாவில் ஆறு லட்சம் ஏக்கரில் அபினிச் செடிகளை விளையச்செய்து சீனாவுக்கு அனுப்பிக் கொள்ளை லாபம் சம்பாதித்த பிரிட்டிஷ் அரசு, அடுத்த இலக்காகக் களம் இறக்கியது சாயம் தயாரிக்கப் பயன்படும் அவுரிச் செடியைத்தான்! நீலப் போராட்டம் எனும் அவுரி விவசாயப் பிரச்னை இந்தியாவின் காலனிய வரலாற்றில் மிக முக்கியமானது. இண்டிகோ விற்பனையில் கொள்ளை லாபம் அடைந்த பிரிட்டிஷ் வணிகர்கள், பணப்பயிரான அவுரியை மட்டுமே பயிரிடும்படி விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினர். இதற்காக, ஏழை விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்பட்டது. சீரான விவசாயமற்ற காரணத்தால் உணவுப் பயிர்​களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கைப் பஞ்சம் உருவானது.


இங்கிலாந்தின் லாபத்துக்காக இந்திய விவசாயி​கள் அல்லல்பட்ட இண்டிகோ உற்பத்தி, வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பாடம். அவுரி எனும் குறுஞ்செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்காளத்திலும் அதிகமாகப் பயிராகும் தாவரம். அவுரிச் செடி சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். அதன் இலைகள் ஆவாரம்பூ செடியின் இலையைப் போல இருக்கும். அதன் பூக்கள், வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கறுப்பு நிறமாகவும் இருக்கும். அவுரி​யின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டவை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், நெல் அறுவடைக்குப் பிறகு அந்த நிலத்தில் அவுரி பயிரிடுவார்கள். மீண்டும் உழவு ஆரம்பிக்கும்போது, அவுரியையும் சேர்த்து உழுவார்கள். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம்.

அப்படிப்பட்ட அவுரிச் செடியில் இருந்துதான் நீலச் சாயம் தயாரிக்கப்படுகிறது. பருத்தித் துணிகளுக்கு அடர் நீல வண்ணச் சாயம் ஏற்ற அவுரிச் செடியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே இண்டிகோ ஏற்றுமதிப் பொருளாக இருந்திருக்கிறது. கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து இண்டிகோ ஏற்றுமதி செய்யப்பட்டதைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.

நீலச் சாயம் இடப்பட்ட துணிகள், கடற்கரைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ஏற்றது. குளிர்ச்சி தரக்​கூடியது என்பதுடன் அது பல நாடுகளில் சீருடையாக இருந்தது. நீல நிறத் துணிகளுக்கு பெரும் கிராக்கி இருந்தது. ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நீல நிறச் சாயமிட்ட துணிகளை அதிக அளவில் இறக்கு​மதி செய்தன. இவர்களுக்கான இண்டிகோ இந்தியா, ஜாவா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து கிடைத்தன.

அந்தக் காலத்தில் சிவப்பு, கறுப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களே சாயமிடுவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றில், அவுரிச் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் நீலச் சாயத்துக்கு பெரும் கிராக்கி இருந்தது. தொழிற்புரட்சி காரணமாக உருவான நெசவு ஆலைகள், துணி உற்பத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இங்கிலாந்தின் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்யும் அளவுக்கு இந்தியாவில் அவுரிச் செடி உற்பத்தி செய்யப்படவில்லை. எனவே, அதற்காக நிறைய நிலங்களைக் கையகப்படுத்தி அவுரிச் செடி விவசாயத்தைப் பிரதான தொழிலாக மாற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக, நான்கு மாவட்டங்களை முதன்மையான களமாக அடையாளம் கண்டனர். பீகார் மாநிலத்தில் முசாபர்பூர், தர்பாங்கா, சம்பரான், சரண் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் அவுரி​யின் சாயம் மிகவும் உயர்தர சாயமாகக் கருதப்​பட்டது. ஆகவே, இந்த மாவட்டங்களில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி அங்கு சாயத் தோட்டங்களை பிரிட்டிஷ்காரர்களே உருவாக்கினர். அதற்குத் துணையாக உள்ளூர் ஜமீன்தார்களை இழுத்துக்கொண்டனர்.

ஒரு சாயத் தோட்டம் என்பது 1,000 முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. நான்கு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாவட்டங்களில் அவுரி பயிரிடப்பட்டது. இதில், உள்ளூர் விவசாயிகள் ஒன்றரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அதை நிர்வகிக்க 700 பிரிட்டிஷ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் விளைவித்துத் தரும் அவுரி மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் 16 பிரிட்டிஷ் வணிகக் கம்பெனிகளுக்கே போய்ச் சேர்ந்தன. எங்கோ இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் முதலாளி, கொள்ளை லாபம் சம்பாதிக்க, இந்திய விவசாயிகள் அவுரி விவசாயம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவுரி செடி பயிரிட மறுத்த விவசாயிகளின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. சிலரைக் கொடூரமான முறையில் துன்புறுத்திக் கொலை செய்தனர்.
அவுரிச் செடியைப் பயிரிட்டு அதில் இருந்து சாயம் தயாரிப்பது ஏழை விவசாயிகள் என்றாலும், அதை நிர்வாகம் செய்வது பிரிட்டிஷ் அதிகாரிகள்தான். தேயிலைத் தோட்டங்களைப் போலவே, அவுரித் தோட்டங்களும் ஒட்டுமொத்தமாக பிரிட்டிஷ் வணிகர்களின் கைகளில் இருந்தன. ஒரு சாயத் தோட்டத்தின் அதிகாரி மேனேஜர் என்று அழைக்​கப்பட்டார். அவர்தான் தோட்டத்தின் பொறுப்பாளர். அவரே விவசாயத்தை நேரடியாகக் கண்காணிப்பவர். அவருக்குக் கீழே ஏஜென்ட் எனபடும் உதவி அலுவலர் இருப்பார். அவரும் இங்கிலாந்தில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்ட வெள்ளைக்கார இளைஞராகத்தான் இருந்தார். இருவரும் இணைந்து அவுரிச்செடி விவ​சாயத்​தை மேற்பார்வைசெய்வர்.

இந்தப் பணியில் விவசாயி​களை ஒத்துழைக்கவைக்க, ஜமீன்​தார்களின் ஆதரவு முக்கியத் தேவையாக இருந்தது. அதற்குப் பிரதிஉபகாரமாக இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மது, துப்பாக்கி மற்றும் பட்டம், பதவிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கப்பட்டன. இண்டிகோ மேனேஜர் எப்போதும் ஒரு சர்வாதிகாரிபோல நடந்துகொள்வார். விவசாயிகள், கொத்தடிமைகள்போல நடத்தப்பட்டனர். விவசாயிகளுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க வேண்டி பிரிட்டிஷ் வணிகர்​கள் 400 பேர் கொண்ட ஒரு குதிரைப் படையும் இருந்தது. அந்தப் படை அவுரித் தோட்டங்களில் ரோந்து சுற்றிக்​கொண்டே இருக்கும். ஏதாவது பிரச்னை என்றால், அதை வன்முறையால் அடக்கி ஒடுக்குவார்கள். பங்களா, 24 வேலை​யாட்கள்,  பல்லக்கு, வேட்டையாடத் துணைக்கு ஆட்கள், கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடும் மைதானம் ஆகிய வசதிகள் மேனேஜருக்கு செய்து தரப்பட்டு இருந்தது. மேனேஜர்களில் சிலரே குடும்பத்துடன் சாயத் தோட்ட பங்களாவில் தங்கி இருந்தனர். மற்றவர்கள், தனியாக வசித்தனர். சிலர், இந்தியப் பெண்களில் சிலரை ஆசைநாயகியாக வைத்துக்கொண்டிருந்தனர்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், அறுவடை செய்துவைத்திருந்த அவுரிச் செடி இலைகள் விற்பனைக்காக கல்கத்தா கொண்டுசெல்லப்பட்டன. அதுதான் மையச் சந்தை. இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் அங்கு விற்பனைக்கு வரும் அவுரிச் செடியை வாங்குவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வணிகர்கள் கல்கத்தாவில் குவிந்து இருப்பார்கள். உற்பத்திச் செலவைவிட, 200 மடங்கு லாபம் சம்பாதித்து தரும் பொருளாக அவுரிச் செடி விளங்கியது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்  நிலத்தை ஆழமாக உழுது அவுரி விதைப்​பார்கள். இதற்கான விதைகள் வெளி மாவட்டங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படும்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் அவுரி வளர்ச்சி அடையும். முதல் அறுப்பு ஜூன் மாதமும் அடுத்த இரண்டு அறுப்புகள் அடுத்த மாதங்களிலும் நடக்கும். இப்படிச் சேகரிக்கப்பட்ட அவுரியை மூட்டையாகக் கட்டி மாட்டு வண்டிகளிலும் படகிலும் ஃபேக்டரிக்குக் கொண்டுசெல்வார்கள். அங்கே அது பதப்படுத்தப்பட்டு கெட்டிப் பாளங்களாக மாற்றப்பட்டு கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கப்படும். சாயத் தோட்ட ஏஜென்ட் எனப்படும் துணை மேலாளர் பதவிக்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ரெயிட் என்பவர், நினைவுக் குறிப்பு நூல் ஒன்று எழுதியிருக்கிறார். அதில், ''சாயத் தோட்ட ஏஜென்ட் என்பது கௌரவமான பதவி. இந்த வேலையைச் சிறப்பாக செய்து, மேனேஜர் பதவியை அடைந்துவிட்டால் கொழுத்த பணம் எனக்குக் கிடைக்கும். அதை வைத்து இங்கிலாந்தில் பெரிய தொழிற்சாலையை என்னால் தொடங்க முடியும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அவுரித் தோட்டங்களின் முக்கியப் பிரச்னை ஆட்கள் தட்டுப்பாடுதான். ஆகவே, கிராமவாசிகள் வேறு எந்த வேலையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவுரி விவசாயத்தில் வேலைசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 10 வயது சிறுவன் முதல் 80 வயது முதியவர் வரை, அனைவருக்குமே கட்டாய வேலை வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக டச்சு வணிகர்களும் இண்டிகோ விற்பனையில் ஈடுபட்ட​தால், அவர்கள் விவசாயிகளை விலைக்கு வாங்க முயன்றனர். இந்த வணிகச் சண்டையில் பலியானது ஏழை விவசாயிகள்தான்.

'காலச்சுவடு’ இதழில் வெளியான 'பசுமைப் புரட்சியின் கதை’ என்ற கட்டுரையில் ஆய்வாளர் சங்கீதா ஸ்ரீராம், ''1750-களில் இங்கிலாந்து ஆலை​களில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவுகளில் தேவைப்பட்டது. அதுவரை, இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்ட பிறகு, இந்தியாவில் அவுரி விளைவிப்பது அவசியமானது. வங்காள விவசாயிகள்​தான் மீண்டும் கையில் சிக்கினர்.

உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர்​செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, அபினிக் கதையைப் போலவே விவசாயிகளின் மீது பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக அவுரி விளைச்சலைப் பெருக்கிக்​கொண்டனர். 19-ம் நூற்றாண்டில், இண்டிகோ உற்பத்தியில் உலகிலேயே மிகப் பெரிய மாநிலம் வங்காளம்தான் என்ற அளவுக்கு இந்தப் பயிர் அங்கு பயிரிடப்பட்டது. வங்காளத்தில் உள்ள ஃபரித்பூர் மாவட்ட நீதிபதி​யான இ.டி லதூர், 1848-ல், 'இங்கிலாந்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மீதும் மனித ரத்தக் கறை படிந்து இருக்கிறது. பல விவசாயிகளின் உடல்​களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டு இருக்கின்றன. பலர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்​கின்றனர். இவ்வாறு இண்டிகோ வியாபாரம் செய்​வது, ரத்தம் சிந்தவைக்கும் கொடூரமான முறை என்றே நான் கருதுகிறேன்'' என்கிறார். நிலைமை மிகவும் மோச​மானதும் 1868-ம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. அதே சமயம், 1880-ல், ரசாயன நீலச் சாயம் உற்பத்தி செய்யும் முறை கண்டறியப்பட்டது. பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது. அதை நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895-96ல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06-ல் 5 லட்சம் ஏக்கராக குறைந்தது. அவுரித் தோட்டத் தொழிலாளிகள் பலர் வறுமையில் வாடிச் செத்தனர்'' என்கிறார் சங்கீதா ஸ்ரீராம்.

No comments:

Post a Comment