Search This Blog

Sunday, March 17, 2013

சாவேஸ் - ஒரு சகாப்தத்தின் முடிவு!


தம் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவையும், கடைசி இரு ஆண்டுகளில் புற்றுநோயையும் எதிர்த்துப் போராடிய ஹியூகோ சாவேஸ் மார்ச் 5ம் தேதி அதிகாலை மரணமடைந்தார். மிடுக்கான ராணுவ உடையில் உள்ள சாவேஸின் உடலைக் காண அயல் நாட்டுப் பிரதம மந்திரிகளும் அதிபர்களும் இளவரசர்களும் வரிசை வரிசையாகத் திரண்டு வந்திருந்தனர். வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸில், ‘சாவேஸ் உங்களை நேசிக்கிறோம்’ என்று எழுதப்பட்ட பதாகையை உயர்த்தியபடி சாமானியர்கள் ஊர்வலம் சென்றனர். கட்டுப்படுத்தமுடியாமல் பலர் வெடித்து அழுது கொண்டு இருந்தனர்.வெனிசூலாவின் வரலாற்றைத் திருத்தி எழுதிய சாவேஸைப் புதைக்க வெனிசூலாவுக்கு மனமில்லை. எனவே, ஹோசிமினையும் லெனினையும் மாவோவையும் போல் அவரையும் கண்ணாடிப் பெட்டிக்குள் பாடம் செய்து வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிவரை சாவேஸ் எங்களுடன் இருக்கவேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு" என்கிறார் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ. சாவேஸின் மரணச் செய்தியை கண்கள் கலங்கியபடி அறிவித்தவர் இவரே. மக்கள், சாவேஸை இனி எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்" என்கிறார் இவர். தற்போது தாற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றிருக்கும் நிகோலஸ் மதுரோவிடம்தான் சாவேஸ் சிகிச்சைக்கு முன்பு பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார்.

தமக்கு புற்றுநோய் உள்ளதை ஜூன் 2011ல் முதல் முறையாக சாவேஸ் அறிவித்தார். அவருடைய அரசியல் ஆசானும் தோழருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சரியாகி விட்டதாகக் கடந்த ஆண்டு சாவேஸ் அறிவித்தார். கூடவே, ஒன்பது மணி நேரம் தொடர்ச்சியாக உரையாற்றி தம் உற்சாகத்தையும் துடிப்பையும் வெளிப்படுத்தினார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் நம்பிக்கையுடன் சாவேஸுக்கு வாக்களித்து அவரை மீண்டும் பதவியில் அமர வைத்தனர். மக்களின் நம்பிக்கையை சாவேஸ் பொய்யாக்கியது இதுவே முதல் மற்றும் கடைசி முறை.மற்றபடி, ஒரு வாழ்நாளில் சாதிக்க முடியாத பலவற்றை சாவேஸ் தமது 14 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார். சில உதாரணங்கள்: கிட்டத்தட்ட பத்து லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. வீடற்ற ஏழைகளுக்கு இருபது லட்சம் வீடுகள் கட்டப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,20,000 பேருக்கு வீடு கிடைத்துள்ளது. குடிசைகளிலும் சேரிகளிலும் வாழ்வோரின் எண்ணிக்கை முன்பிருந்ததைக் காட்டிலும் 70 சதவிகிதம் குறைந்துள்ளது. வேலையில்லாப் பிரச்னை, வறுமை, குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன.

மருத்துவத்துக்கு கியூபர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார் சாவேஸ். 14,000 கியூப மருத்துவர்கள் வெனிசூலாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 11,000 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. மருத்துவத்துக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான வெனிசூலா ஏழைகள் முதல் முறையாக நவீன மருத்துவ வசதிகள் பெற்றனர்.  மூன்றாம் உலக வறுமை நாடாக இருந்த வெனிசூலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. எண்ணெய் உள்ளிட்ட வளங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றின் பலன்களை மக்கள் நேரடியாக அனுபவித்தனர். சோஷலிசக் கொள்கைகளை உரக்க அறிவித்து மக்களின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்டார் சாவேஸ். இவற்றையெல்லாம் அவர் வோட்டுக்காகத்தான் செய்தார் என்னும் குற்றச்சாட்டை மறுக்கிறார் வரலாற்றாசிரியர் தாரிக் அலி. மேற்கத்திய உலகம் இப்படியொரு தவறான கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. வோட்டுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக அவர் நடந்து கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவுடன் நட்புடன் இருந்திருக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்களை வரவேற்று இருக்க வேண்டும். சாவேஸ் அப்படி செய்யவில்லை" என்கிறார் தாரிக். நேர்மாறாக, ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று ஐ.நா. சபையில் வைத்து அழைக்கும் அளவுக்கு அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சாவேஸ் எதிர்த்திருக்கிறார். சாவேஸின் நோக்கம் ஒன்றுதான். அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தைக் குறைந்த பட்சம் லத்தீன் அமெரிக்காவிலும் முடிந்தவரை உலகம் முழுவதிலும் இருந்து அகற்றவேண்டும். தமது அரசியல் எதிரியை அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் அவர் கையாண்டார். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் அவர் சம்பாதித்துக் கொண்டார்.ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கியூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத் தான் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டனர். மக்களை வழிநடத்த காஸ்ட்ரோவும் சாவேஸும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றுதான். சோஷலிசம். 2002ல் சாவேஸுக்கு எதிரான ஆட்சிக் கலைப்பு அமெரிக்க ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட போது, பெரும் அளவிலான பெண்கள் வீதிகளில் திரண்டு வந்து சாவேஸை ஆதரித்தார்கள். சாவேஸ், பெண்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். ‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு புரட்சியும் வெற்றி பெறமுடியாது.’ எனவேதான், வீட்டில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பெண்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரித்து வயதான காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கான வழிமுறைகளைச் செய்தார் சாவேஸ். 

தமது கடைசி தேர்தலில் ஹியூகோ சாவேஸ் பிரசாரம் செய்யவில்லை. வோட்டுக் கேட்கவில்லை. ஒருமுறைகூட மக்களை அவர் சந்திக்கவும் இல்லை. இருந்தபோதும் இதுவரை இல்லாத பெரும் வெற்றியை மக்கள் அவருக்கு ஈட்டிக் கொடுத்ததற்கு ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஹியூகோ சாவேஸின் வெற்றி என்பது உண்மையில் தமது வெற்றியே என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். சாவேஸின் மரணம் என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதையும் அவர்கள் இப்போது உணர்கிறார்கள்.

மருதன்

1 comment:

  1. அருமையான மனிதரைப் பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete