பயிற்சியின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட 25 பேர்
மட்டுமே, வான் படைப் பயிற்சிக்காக இம்பீரியல் அகடமியில் சேர்க்கப்பட்டனர்.
ஜப்பானிய ராணுவ வீரர்களைவிடத் துடிப்பாகவும் வேகமாகவும், இந்தியத் தேசிய
ராணுவத்தைச் சேர்ந்த டோக்கியோ கேடட்ஸ் சிறப்பாகப் பணியாற்றினர். கேப்டன்
காடோ தலைமையில், பல்வேறு விமானங்களைக் கையாளுவது, ஒளிந்திருந்து தாக்குவது,
இலக்குகளை அடையாளம் கண்டு ஒரே வீச்சில் அழிப்பதுபோன்ற பயிற்சிகள்
அவர்களுக்குத் தரப்பட்டன. பயிற்சி முடிவதற்குள், யுத்த முனையில் ஜப்பான்
தோற்றுப்போய், சரணடைந்தது. ஜப்பானியப் படைகள் சரணடைந்த காரணத்தால்,
பயிற்சியில் இருந்த இந்தியத் தேசிய ராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாகப்
பிடிபட்டனர். இவர்கள் மீதான பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது. முடிவில்,
அந்த வீரர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு போர்க் கைதிகளாக விசாரிக்கப்பட்டு
விடுதலை செய்யப்பட்டனர். வான் படையில் பயிற்சி பெற்ற டோக்கியோ கேடட்ஸ்
வீரர்களில் சிலர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தனர். சிலர் மலேசியா மற்றும்
சிங்கப்பூரில் பணியில் சேர்ந்தனர். தனது டோக்கியோ கேடட்ஸ் அனுபவங்களை ரமேஷ்
பெனகல் விரிவான நூலாக எழுதி இருக்கிறார். சுதந்திரப் போராட்டக்
களத்துக்காகத் தயார் ஆகி தங்களின் முழுத் திறமையைக் காட்டுவதற்குள்
கைதுசெய்யப்பட்டுவிட்டனர் என்பது வரலாற்றுச் சோகம்.
இந்திய சுதந்திரப் போரில் தனது பங்கைப்பற்றி ஒரு
புத்தகம் எழுத விரும்பினார் நேதாஜி. அதற்காக, சுருக்கெழுத்து தெரிந்த ஒரு
பெண்ணை வேலைக்கு வைத்துக்கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் எமிலி.
உதவியாளராகச் சேர்ந்த எமிலி, மிகுந்த பற்றுதலுடன் நேதாஜியைக்
கவனித்துக்கொண்டார். இருவருக்கும் காதல் உண்டானது. 1937-ம் ஆண்டு டிசம்பர்
27-ம் தேதி எமிலியை ரகசியமாகத் திருமணம்செய்துகொண்டார் என்றும் சிலர்
கூறுகின்றனர். இதற்கான நேரடி சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு
அனிதா போஸ் என்ற ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவது உலகப் போர் உருவானதும்,
இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டன் கோரியது. ஆனால், பிரிட்டனின்
காலனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களைத் திரட்டுவதில் நேதாஜி ஈடுபட்டார்.
இதன் காரணமாக, 1940-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நேதாஜியைக் கைதுசெய்து
சிறையில் அடைத்தது. உலகப் போரின் ஆரம்பத்தில், பிரிட்டன் படைகளுக்கு
தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரிட்டனின் எதிரி
நாடுகள் ஒத்துழைத்து, இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்று நேதாஜி
நினைத்தார். அந்த எண்ணத்தை நிறைவேற்ற சிறையில் இருந்து வெளியே வரவேண்டும்
என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
இதனால் விடுதலை செய்யப்பட்ட நேதாஜி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆனால், 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, மாறுவேடத்தில் தப்பினார் நேதாஜி.
கல்கத்தாவில் இருந்து வெளியேறி ரயிலில் பெஷாவர் நகரை
அடைந்து, இந்திய எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார்.
அங்கிருந்து இத்தாலி செல்ல அனுமதி வாங்கினார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச்
செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக
ஹிட்லரிடமிருந்து சிறப்பு அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்ட நேதாஜி, ரயில்
மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போனார்.
அவர், ஜெர்மனி வந்து சேர்ந்த தகவலை மார்ச் 28-ம் ந்தேதி ஜெர்மனி
பத்திரிகைகள் முகப்புச் செய்தியாக வெளியிட்டன. அப்போதுதான், அவர்
இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற விஷயம் வெள்ளை அரசுக்குத் தெரிந்தது.
ஹிட்லரை, நேதாஜி சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைப்
போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நேதாஜி நம்பினார்.
ஆனால், அவர் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை. நீர்மூழ்கிக் கப்பல் மூலம்
ஜப்பான் சென்ற நேதாஜி, ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல்
இருந்த இந்தியத் தேசிய ராணுவத்தை மீள்உருவாக்கம் செய்து, அதன் தலைவராகப்
பொறுப்பேற்றுக்கொண்டார். 1943-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிங்கப்பூரில்
நடந்த மாநாட்டில் நேதாஜி சுதந்திர அரசுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
டிசம்பர் 29-ம் தேதி தேசிய அரசின் தலைவராக, தேசியக் கொடியை ஏற்றினார்.
அவரது தேசிய அரசை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள்
ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தனது இந்தியத் தேசிய ராணுவத்தை இந்தியாவை
நோக்கி நகர்த்தினார்.
இந்தியத் தேசிய ராணுவத்துக்கும், பிரிட்டிஷ்
படைகளுக்கும் இடையே இந்திய-பர்மா எல்லைப் பகுதியில் எட்டு இடங்களில் கடும்
போர் தொடங்கியது. ஏப்ரல் 14-ம் தேதி, கர்னல் எஸ்.ஏ.மாலிக் தலைமையிலான படை,
மணிப்பூரில் உள்ள மொய்ராங் என்ற இடத்தைக் கைப்பற்றி அங்கு இந்தியத்
தேசியக் கொடியைப் பறக்கவிட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த மொய்ராங்,
ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியத் தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் பகுதியாகப்
பெருமைகொண்டது. ஏப்ரல் 8-ம் தேதி, நாகாலாந்து மாநிலத்தின் கொஹிமா நகரம்
இந்தியத் தேசிய ராணுவம் வசமானது. அடுத்த சில நாட்களில், இம்பால் நகரைச்
சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. இந்தியத் தேசிய ராணுவத்தின் தாக்குதலைச்
சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஆனால்,
தென்மேற்குப் பருவமழை யுத்த நிலையை தலைகீழாக மாற்றியது. இடி, மின்னல்,
பலத்த மழை, வெள்ளப்பெருக்கு, அதன் காரணமாக உருவான தகவல் துண்டிப்பு ஆகியவை
பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மழைக்குப் பிறகு, பரவிய காலரா,
வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காததால்,
ராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.
இந்தச் சூழலில், ஜப்பான் சரணடைந்த செய்தி நேதாஜிக்கு
தெரிவிக்கப்பட்டது. நேதாஜியைப் பத்திரமாகக் காப்பாற்றி தங்களது
கட்டுப்பாட்டுக்குள் உள்ள மஞ்சூரியாவுக்கு அழைத்துச் செல்ல ஜப்பான்
உத்தரவாதம் அளித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம்
தேதி காலை, சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நோக்கி விமானத்தில் சென்றார்
நேதாஜி. பாங்காக்கில் இருந்து சைகோன் புறப்பட்டுச் சென்றார். அவருடன்
கர்னல் ஹபிபூர் ரஹ்மான், கர்னல் குல்சாரா சிங், கர்னல் பிரீதம் சிங்,
மேலும் அபித் ஹாசன், தேவ்நாத் தாஸ், எஸ்.ஏ.அய்யர் ஆகியோரும், ஜெனரல் இஸோடா,
ஹக்கீயா, நெகிஷி ஆகிய ஜப்பானியர்களும் இரண்டு விமானங்களில் சென்றனர்.
சைகோனில் இறங்கிய நேதாஜியை ஏற்றிச் செல்ல ஜப்பானியர்களின் குண்டுவீச்சு
விமானம் ஒன்று தயாராக இருந்தது. அது சிறிய விமானம் என்பதால், அதில்
ஒருவருக்கு மட்டும்தான் இடம் இருந்தது. அதில் ஏறித் தப்பிச் செல்வதா என்ற
சந்தேகம் நேதாஜிக்கு ஏற்பட்டது. முடிவில், கர்னல் ஹபிபூர் ரஹ்மான் உடன்
செல்வதென முடிவு செய்யப்பட்டது. இருவரையும் ஏற்றிக்கொண்டு ஜப்பானிய விமானம்
விண்ணில் பறந்தது.
நேதாஜி பயணம் செய்த போர் விமானம், ஃபார்மோசா
தீவுகளுக்கு அருகே விபத்தில் சிக்கியது என்ற தகவலை ஜப்பானிய வானொலி
அறிவித்தது. ஆகஸ்ட் 18-ம் தேதி நேதாஜி விமான விபத்தில் இறந்துபோனதாக
அறிவிக்கப்பட்டது. நேதாஜி மரணத்தை மக்கள் நம்பவில்லை. அவர் தப்பிச்
சென்றிருப்பார் என்றும் இது பிரிட்டிஷ் படைகளை ஏமாற்றுவதற்கான உத்தி என்றே
மக்கள் நினைத்தனர். ஆனால், நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய
ஹபிபூர் ரஹ்மான், நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என்னுடைய கண்களால்
பார்த்தேன் என்று கூறினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956-ம் ஆண்டு ஏப்ரல்
மாதம், பாரதப் பிரதமர் நேரு, நேதாஜியின் மரணம் பற்றிய உண்மைகளைக் கண்டறிய
மூவர் கொண்ட ஷா நவாஸ் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, டோக்கியோ,
சைகோன், பாங்காக் உட்பட பல இடங்களுக்குச் சென்று விசாரித்தது. விமான
விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர்
சொன்னார்கள். டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி
பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினரான
சுரேஷ் சந்திரபோஸ், அதை ஏற்க மறுத்து தனி அறிக்கை சமர்ப்பித்தார்.
பிறகு, 1970-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்திரா காந்தி
பிரதமராக இருந்தபோது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
ஜி.டி.கோசலாவைக் கொண்ட 'ஒரு நபர் விசாரணை ஆணையம்’ அமைக்கப்பட்டது. அவரும்,
விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று அறிக்கை சமர்ப்பித்தார். அதன் பிறகு,
1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், முகர்ஜி தலைமையில் ஒரு கமிட்டி
அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி, ஏழு ஆண்டுகள் மிக விரிவான ஆய்வுசெய்து
அறிக்கை சமர்ப்பித்தது. அதிலும், விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார்
என்றே கூறப்பட்டு இருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் 1985-ம் ஆண்டு வரை வாழ்ந்த
'பகவான்ஜி’ என்ற துறவிதான் நேதாஜி என்ற சந்தேகத்தை, முகர்ஜி கமிட்டி
முழுமையாக ஆராய்ந்தது. அதாவது, நேதாஜிதான் பகவான்ஜியாக ஒளிந்து வாழ்கிறார்
என்பதை ஆராய்ச்சி செய்ய பகவான்ஜியின் கடிதங்களை நேதாஜி கையெழுத்துடன்
ஒப்பிட்டுப் பார்த்தனர்.
டி.என்.ஏ. சோதனையும் செய்யப்பட்டது. அதில், லால் என்ற
வல்லுனர் இரண்டு கையெழுத்துக்களும் ஒன்றுபோல இருக்கிறது. பகவான்ஜியாக
வாழ்ந்தவர் நேதாஜிதான் என்றார். ஆனால், மற்ற வல்லுனர்கள் டி.என்.ஏ. மற்றும்
கையெழுத்து ஆகியவை நேதாஜியோடு பொருந்தவில்லை என்றனர். 1945-ம் ஆண்டில்
இருந்து இன்று வரை டோக்கியோவில் உள்ள ரங்கோஜி ஆலயத்தில் நேதாஜியின் அஸ்தி
பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவந்து இறுதிச்
சடங்கு செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இன்று
வரை அது சாத்தியமாகவில்லை. நேதாஜி சென்ற விமானம் ஏன் திடீரென விபத்துக்கு
உள்ளானது என்ற கேள்விக்கான உண்மை இன்றுவரை அறியப்படவே இல்லை. மரணம் ஒரு
முற்றுப்புள்ளி அல்ல. மக்கள் மனதில் போராளிகள் என்றும் வாழ்ந்துகொண்டுதான்
இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
Miga arumaiyaana padhivu...salute to the great warrior NETHAJI.....
ReplyDelete