Search This Blog

Monday, March 04, 2013

தனிநபர் வருமான வரிச் சலுகை இல்லை..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் இது. அதனால் சாதாரண மக்களுக்கு அதிக வருமான வரிச் சலுகையை வாரி வழங்குவார் நிதி அமைச்சர் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வரியைக் குறைப்பதற்கு பதில், வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

 வரிச் சலுகை இல்லை..! 

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அடிப்படை வருமான வரி வரம்பான ரூ.2 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை. பிறகு என்னதான் சலுகை என்கிறீர்களா?

ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு ரூ. 2,060 வரி தள்ளுபடிதான் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, அடிப்படை வரம்பு ரூ. 2 லட்சம் என்பதைரூ. 2.2 லட்சம் ரூபாயாக அதிகரித்தால், அனைத்து வரிதாரர்களுக்கும் 2,060 ரூபாய் வரி மிச்சமாகும். இதைத் தவிர்க்கும்பொருட்டு 5 லட்சம் ரூபாய் என்கிற உச்சவரம்பை புத்திசாலித்தனமாக நிதி அமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்.

.

வீட்டுக் கடனுக்கு சலுகை..! 

வங்கி அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்குவோருக்குக் கூடுதலாக ரூ. 1 லட்சம் வரிக் கழிவு அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.

ஏப்ரல் 1- 2013லிருந்து 2014, மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ. 25 லட்சத் துக்குள் கடன் பெற்று ஒருவர் வீடு வாங்கும் முதல் வீட்டுக்கு, அவர் செலுத்தும் வட்டிக்கு கூடுதலாக ரூ. 1 லட்சம் வரை வரிக் கழிவைப் பெறலாம். ஒருவேளை மேற்கண்ட காலகட்டத்தில், இந்த வரிக் கழிவை முழுமையாகப் பெற முடியாவிட்டால், மீதி வரிக் கழிவை 2015-2016-ல் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகையுடன், கூடுதலாக இந்த ரூ. 1 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும் என்பது அடுத்த நிபந்தனை. இந்தக் கூடுதல் வரிச் சலுகை 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். 40 லட்சம் ரூபாய்க்குள் பெருநகரங்களில் வீடு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத நிலையில், இச்சலுகை சிறு நகரங்கள் மற்றும் புறநகர்களில் வீடு வாங்குபவருக்கு மட்டுமே பயன்படும்.

ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்..! 

ராஜீவ்காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான,
10 லட்சம் ரூபாய் வருமான வரம்பு 
ரூ12 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையிலான தொகைக்கு 50% சலுகை அளிக்கப்படுகிறது. வருமான வரி விகிதாச்சாரத்துக்கு ஏற்ப 2,500 முதல் 7,500 ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் ரூ. 50,000 முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டிலும் வருமானத்திலிருந்து ரூ.25,000த்தை கழித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment