நிஜமான மநுஷ்யர்களாக நல்லபடி வளர்ச்சி பெறாமல் தாங்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற கவலை, தாபம், விசாரம் மட்டும் வாலிபர்களுக்கு இருந்து விட்டால் போதும்; பிரியப்பட்டு மூக்கணாங்கயிறு போட்டுக் கொண்டு விடுவார்கள்; மற்றவர்கள் போடுவதற்கும் இஷ்டப்பட்டு விட்டுவிடுவார்கள்.
அவர்களுக்கு இந்தக் கவலையை எப்படி உண்டு பண்ணுவது? பெரியவர்கள்தான் விடாமல் பிரியத்துடனும் பொறுமையுடனும் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படிச் சொல்லவேண்டுமானால் சொல்பவர்களும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய வாயுபதேசத்துக்கு என்ன மதிப்பு இருக்கும்? அதற்கு யார் காது கொடுப்பார்கள்? அதுவும் generation gap என்று நன்றாகவே ஊறிப்போய்விட்ட இளந்தலைமுறைக்காரர்கள் கேட்பார்களா? அவர்களுக்காகவே gap தெரியாவிட்டாலும் இக்காலச் சிந்தனையாளர்களும், மனோதத்வ ஆராய்ச்சியாளர்களும் நவநாகரிகர்களும் சொல்லிக் கொடுத்தாவது இப்படி ஒரு gap-ஐ தெரிந்து கொண்டு விட்ட இளந்தலைமுறைக்காரர்கள் கேட்பார்களா?
தற்காலத்திலுள்ள பெரும்பாலான பெரியவர்கள் இந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தும் விஷயத்தில் கேள்விக்குரியவர்களாகத்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய வார்த்தைக்கு என்ன ‘வால்யூ’ இருக்கும்? ஆகையினால் இளம் தலைமுறையினரை உத்தேசித்தாவது வயதான தலைமுறையினர் நன்னெறிகளில், - நல்லொழுக்கங்கள் என்கிறவற்றில் - கட்டுப்பட்டு வாழ ஆரம்பிக்க வேண்டும். அதை அடுத்த தலைமுறையினருக்கும் உரிய முறையில் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
இப்படி மற்றபேர்தான் தங்களை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வாலிபர்கள் விட்டுவிடாமல் தாங்களாகவே நல்வழிப்படுவதுதான் அழகும், கௌரவமும். பெரியவர்கள் இவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்குப் பதில் இப்போதுள்ள ஸ்திதியில் இவர்களே பெரியவர்களுக்கு உதாரணம் காட்டும்படி தங்களை உசுப்பி எழுப்பிக் கொண்டால் அதுதான் யௌவன சாகசங்களில் ரொம்பவும் விசேஷமான ‘க்ரெடிடபி’ளான சாகசமாக இருக்கும்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment