இன்றைய
உணவு முறையில் அரிசியின் தாக்கம் எவ்வாறு சர்க்கரை நோய்க்கு வித்திடுகிறது
என்று இதுவரை பர்த்தோம். அரிசிக்கு அடுத்தபடி பெரிய வில்லன்... சர்க்கரை!
தற்கால சர்க்கரையின் வில்லன் முகத்தைச் சொல்வதற்கு
முன், சர்க்கரையைப் பற்றிய சில இனிப்பான வரலாற்று உண்மைகளை முதலில்
தெரிந்துகொள்வோம்.
பல்வேறு தாவர இனங்களில் சர்க்கரை இருக்கிறது என்றாலும்,
அதன் முக்கிய வாசஸ்தலம் கரும்புதான். ஆதிகாலம்தொட்டே கரும்பு இந்தியாவில்
பயிரிடப் பட்டிருக்கிறது. கரும்பின் பூர்விகம் இந்தியாவும், நியூ கினி (New
Guinea) நாடும்தான்.
கிறிஸ்து பிறப்பதற்கு 3,031 ஆண்டுகளுக்கு முன், சேர
இளவரசன் ஒருவன், இன்றைக்கு 'சாலமன் தீவு' என்றழைக்கப்படும் தீவுகளில்
அலைந்து கொண்டிருந்தபோது, காடுகளில் வளர்ந்திருந்த கரும்புகளைப் பார்த்து,
அதை தமிழகத்துக்குக் கொண்டு வந்து பயிர் செய்தான் என்று பன்மொழிப் புலவர்
தேவநாயப் பாவாணரின் ஆராய்ச்சிக் குறிப்புகளில் பார்க்கிறோம்.
![](http://www.vikatan.com/aval/2013/03/nzrint/images/p32%281%29.jpg)
கி.மு. 500 ஆண்டுகளில் இந்தியர்கள் கரும்பைப் பிழிந்து,
அதன் சாற்றைக் கொதிக்க வைத்து, பின் உலரவைத்து, அதில் வரும் கட்டிகளை
'கண்டு’ என்ற பெயரில் எடுத்துச் சென்று கடல் வணிகம் செய்ததாக சீனக்
குறிப்புகள் கூறுகின்றன. புத்த பிட்சுகள்தான் முதலில் இவற்றை சீனாவுக்குக்
கொண்டு சென்றார்கள்.
அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் படையெடுத்தபோது, அமோகமாக
வளர்ந்திருந்த கரும்புச் செடிகளைப் பார்த்தான். 'தேனீக்கள் இல்லாமலேயே
தேனைச் சேகரித்து வைத்திருக்கும் அற்புதப் புல்’ என்று கரும்பை
வர்ணித்தான். அவனுடைய படை வீரர்கள் இங்கிருந்து தாயகம் திரும்பும்போது,
சர்க்கரைக் கண்டுகளை 'இனிக்கும் உப்பு' (Sweet Islands) என்று கூறி அள்ளிச்
சென்றதாக வரலாறு.
1492-ல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன்,
சில நாட்கள் கானரி தீவுகளில் (Canary Islands) தங்கினான். அவனுடன் காதல்
வயப்பட்ட அந்த நாட்டு இளவரசி, அவன் விடைபெறும்போது, காதல் பரிசாகக் கரும்பு
நாற்றுகளை அவனுக்குக் கொடுத்தாள். அதன் மூலமே கரும்பு அமெரிக்காவுக்குள்
நுழைந்தது.
'சர்க்கரை’ என்ற தமிழ்ச்சொல்... சமஸ்கிருதத்தில்
'சர்க்கரா' (Sarkara), கிரேக்க மொழியில் 'சர்க்காரிஸ்' (Sarkaris),
ஆங்கிலத்தில் 'ஜாக்ரி' (Jaggery) என்றெல்லாம் ஒலிமாறி வந்திருப்பதைப்
பார்த்தால், சர்க்கரைக்கும் நாம்தான் பூர்விகம் என்பது நன்கு விளங்கும்.
ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டு வரை, சர்க்கரை ஓர்
ஆடம்பர, பணக்கார உணவாகக் கருதப்பட்டது. 19-ம் நூற்றாண்டில்தான்
ஆங்கிலேயர்கள் சர்க்கரையை ருசி பார்த்தார்கள். இதுவே உலக வரலாற்றைப்
புரட்டிப் போட்டு, காலனி ஆதிக்க சகாப்தத்துக்கு வித்திட்டது. பல்வேறு
தீவுகளையும் நாடுகளையும் வளைத்துப் போட்ட மேலை நாட்டினர், தங்கள் காலனி
நாடுகளில் கரும்பு விவசாயம் செய்வதற்கு, மலிவான கூலிக்கு மக்களைப்
பயன்படுத்தி, லாபத்தை அள்ளிக் குவித்தனர்.
'சில்லறை வணிகத்தில் அந்நிய ஆதிக்கம் நல்லதா...
கெட்டதா?' என்று அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வரும் இந்நேரத்தில்,
நாம் முக்கியமானதொரு வரலாற்று உண்மையை நினைவுகூர வேண்டும். ஆங்கிலேயர்கள்
நம் நாட்டுக்குள் நுழைந்தது படையெடுப்பு மூலம் இல்லை. 'கிழக்கிந்தியக்
கம்பெனி' என்கிற வியாபாரி வேஷத்தில்தான். கடைசியில் ஒட்டுமொத்த
இந்தியாவையும் அபகரித்துக் கொண்டார்கள். சரித்திரம் இப்போது மீண்டும்
திரும்புகிறது... அந்நிய முதலீடு என்கிற பெயரில்.
![](http://www.vikatan.com/aval/2013/03/nzrint/images/p32a.jpg)
நான் அண்மையில் மொரீஷியஸ் நாட்டுக்குச்
சென்றிருந்தபோது, பிரமிப்பான பல உண்மைகளைப் பார்த்தேன். அந்நாட்டின்
பிரதமர் பீகாரைச் சேர்ந்த ஓர் இந்தியர். சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழர்
அப்பதவியில் இருந்தார். பிரதமரின் வீட்டு முன் வாசலில் ஒரு வாட்ச்மேன்கூட
கிடையாது என்பதை தயவுசெய்து நம்புங்கள்!
அந்த நாட்டு பிரஜைகள் பெரும்பாலானோர் நம்மவர்கள்.
பெரும்பாலானோரின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். அந்த நாட்டின் கரன்ஸி
நோட்டில் 'நூறு ரூபாய்’ என்று தமிழில் அச்சடித்திருக்கிறார்கள். அங்கே
இயங்கும் ஒரு மருத்துவக் கல்லூரியின் பெயர், 'அண்ணா மெடிக்கல் காலேஜ்!’
நான் பணிபுரியும் அப்போலோ மருத்துவமனையும் அங்கு ஒன்று உண்டு. போக்குவரத்து
மிக்க முக்கிய வீதி ஒன்றின் நடுவே மகாத்மா காந்தியின் சிலை ஒன்றும் உண்டு.
மொரீஷியஸ் தீவில் விளையும் முக்கிய - ஏன் ஒரே பயிர்
கரும்புதான். அந்தத் தீவின் எந்தப் பகுதியிலும் - காடு, மலை, மேடு, பள்ளம்
எங்கும் - கரும்புதான். சாலைகளின் ஒரங்களில், நம் ஊரில் பார்க்கும் கள்ளிச்
செடிகளுக்கும் கருவேலம் புதர்களுக்கும் பதிலாக, கரும்புதான் மானாவாரியாக
விளைகிறது. கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டின் முன்பாக, ஷாமியானா
பந்தல் ஒன்று இருந்தது. நான்கு பந்தல் கால்களையும் சுற்றி ஏதோ குரோட்டன்ஸ்
செடிகளைப்போல பத்து பதினைந்து கரும்பு நாற்றுகள் வளர்ப்பதைப் பார்த்தேன்.
'கேரள மக்கள் எல்லா இடங்களிலும் மரவள்ளிக் கிழங்குச்
செடிகளை நட்டு வளர்ப்பார்கள். அவர்கள் விட்டு வைக்கும் ஒரே இடம் - ரயில்
பாதையின் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில்தான்!’ என்று என் நண்பர் ஒருவர்
கூறியதுதான் அப்போது ஞாபகத்துக்கு வந்தது!
மொரீஷியஸில் கரும்பின் எந்தப் பகுதியையும் அவர்கள்
விட்டு வைப்பதில்லை. சர்க்கரை ஆலைகள் அமோகமாக இருக்கும் அதேவேளையில்,
அதிலிருந்து மதுபானம், எத்தனால், மின்சாரம் முதலியவையும் உற்பத்தியாகின்றன.
அங்குள்ள வீடுகள், உணவு விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களின் அரங்குகள்
எங்கும் கரும்புத் தோகையைத்தான் கூரையாக வேய்கிறார்கள். அந்நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக நின்று உழைக்கும் நம்மவர்களை, நன்றி
கெட்ட இலங்கை ஆட்சியாளர்களைப் போலன்றி, அவர்கள் நன்றியோடும் கௌரவத்தோடும்
நடத்துகிறார்கள்.
சரி... கரும்புக்குப் பின்னால் இவ்வளவு இனிப்பான
செய்திகளும் வரலாறும் இருக்கும்போது, சர்க்கரையை 'இன்னொரு வில்லன்’ என்று
ஏன் குறிப்பிட்டேன் என்று நீங்கள் கேட்கலாம்.
கரும்புச்சாறு... வெறும் கரும்புச்சாறாகத்தான்
ஆரம்பத்தில் இருந்தது. பின்னர்... அதுவே வெல்லம், நாட்டுச்சர்க்கரை என்று
மாறியது. அப்போதும்கூட பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை. கறுப்புநிற
சர்க்கரைக் கட்டிகள் பழுப்பு நிறமாக மாறி, மஞ்சள் நிறமாக மாறியது. பின்னர்
வெள்ளை நிறத்துக்கு மாறவேண்டுமே என்கிற வெள்ளைக்காரர்களின் ஆசைக்கு அடி
பணிந்து, தீட்டித் தீட்டி பாலிஷ்போட ஆரம்பித்தோம். அப்போதுதான் ஆரம்பித்தது
பிரச்னை.
No comments:
Post a Comment