பறிக்கப்பட்ட அவுரிச் செடியின் இலைகளைப் பதப்படுத்தி
பாளங்களாக மாற்றுவதற்காக, ஆங்கிலம் பேசத் தெரிந்த உயர் வகுப்பு இந்தியர்கள்
தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். நேரடியாக விவசாயப் பணிகளை
மேற்பார்வை பார்க்க ஜமேதார் எனப்படும் நபர் நியமிக்கப்பட்டார். முன்ஷி
எனப்படுபவர் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர். படித்த இந்தியர்களை, ஆங்கிலேயர்
தங்களது விசுவாசிகளாக இந்தத் தொழிலில் இணைத்துக்கொண்டனர். 19-ம்
நூற்றாண்டில் இரண்டு விதமான முறைகளில் அவுரி உற்பத்தி நடந்தது. ஒன்று,
ஜமீன்தார்கள் தங்களுக்கு உரிமையான கிராமங்களில் உள்ள நிலங்களை ஆண்டுக்
குத்தகைக்கு வெள்ளைகாரர்களுக்கு அளித்தனர். ஆண்டுக் குத்தகை வருஷத்துக்கு
ஐந்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை இருந்தது. மற்றொன்று, நில
உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் ஐந்தில் மூன்று பகுதியை அவுரி விவசாயம்
செய்வதற்கு கட்டாய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டனர். இப்படி ஒப்பந்தம்
செய்யப்பட்டவர்களுக்கு பிரிட்டிஷ் கம்பெனி முன்பணம் தருவது உண்டு.
முன்நிர்ணயிக்கப்பட்ட விலைக்குத்தான் விவசாயி தனது
அவுரிச் செடியை விற்க முடியும் என்ற கட்டுப்பாடு காரணமாக, ஏழை விவசாயிகள்
அதிகம் பாதிக்கப்பட்டனர். ஒரு ஏக்கர் அவுரிக்கு 12 ரூபாய் வழங்கி
இருக்கின்றனர். சில இடங்களில் 10 ரூபாய் 7 அணா தரப்பட்டது. இப்படி,
ஆயிரக்கணக்கான ஏக்கரில் அவுரி கட்டாயப்படுத்திப் பயிரிடப்பட்டது.
பிரிட்டிஷ் வணிகர்கள் அவுரிச் செடியை விவசாயம் செய்வதற்குக் கடன் வழங்க
வங்கிகள் முன்வந்தன. குறிப்பாக, ஆக்ரா வங்கி மற்றும் மாஸ்டர்மேன் வங்கி
ஆகியவை குறைந்த வட்டியில் கடன் வழங்கின. இந்தக் கடன்தொகையைக்கொண்டு இவர்கள்
அவுரி பயிடுவதற்கான நிலக்குத்தகை, விவசாயக் கூலி, ஃபேக்டரி நடத்துவது
மற்றும் இதர செலவுகளைக் கவனித்துக்கொண்டனர். இந்தக் கடனைத் திருப்பிச்
செலுத்த 5 முதல் 15 ஆண்டுகள் வரை அவகாசம் தரப்பட்டது.
சந்தையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டுசெல்லப்பட்ட
அவுரிச் செடி, இடைத்தரகர்கள் மூலமே வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு
விற்கப்பட்டது. இந்தத் தரகு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் ஜே தாமஸ் அண்ட்
கம்பெனி மற்றும் மோரோன் கம்பெனி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தக்
கம்பெனிகளுக்கு இரண்டரை சதவிகிதம் வரை கமிஷன் தரப்பட வேண்டும்.
அதன் பிறகுதான் கப்பலில் ஏற்றி இங்கிலாந்துக்கு
அனுப்பிவைக்கப்படும். அங்கும் நேரடியாக யாரும் அவுரியை வாங்க முடியாது.
இஙகிலாந்திலும் இடைத்தரகர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியாவில் இருந்து
கப்பலில் வந்து இறங்கும் அவுரிச் செடியை, உள்ளுர் விற்பனையாளர்கள்
கொள்முதல் செய்வதற்குத் தரகு செய்தனர். அவர்களின் கமிஷன் தொகை இரண்டு
சதவிகிதம். இப்படி, உள்ளூர் மேனேஜர் தொடங்கி இங்கிலாந்து இடைத்தரகர் வரை
அத்தனை பேருக்கும் கொள்ளை லாபம் ஈட்டித்தரும் பொருளாக இருந்தது அவுரிச்
செடி. ஆகவே, அதன் உற்பத்தியை அதிகரிக்க பிரிட்டிஷ் கம்பெனி பல
தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டது.
தங்கள் சொந்த உபயோகத்துக்காகவும் உள்ளூர்ச்
சந்தைக்காகவும் பல பயிர்கள் ஒன்றாக விளைந்த இந்திய நிலங்களை, இண்டிகோ போன்ற
ஓரினப் பயிர் தோட்டங்களாக மாற்றி, அயல்நாட்டுச் சந்தையில் அதிக லாபம்
சம்பாதித்து இந்திய விவசாயத்தின் அடிப்படையையே நிர்மூலம் செய்தது
பிரிட்டிஷ் அரசு. சுதந்திரமாக இருந்த விவசாயிகள், பயிர்த் தோட்டத்
தொழிலாளிகளாக மாறுவதற்கு நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர். வங்காளத்தில் உள்ள
விவசாயிகள் அவர்களுடைய நிலத்தின் மூன்று பங்கில் கட்டாயமாக அவுரி
பயிரிட்டாக வேண்டும் என்ற சூழ்நிலை நிலவியது. இன்னொரு பக்கம், அதிகாரத்
திமிர் பிடித்த சாயத் தோட்ட முதலாளிகள் விவசாயிகளை சாட்டையால் அடித்தும்
அவர்களுடைய குடும்பங்களைப் பட்டினி போட்டும் கொடுமைப்படுத்தினர். இதனால்,
ஆத்திரம் அடைந்த விவசாயிகள், அவுரி பயிர் செய்ய மறுத்தனர். இந்தச் சூழலில்
'இண்டிகோ கமிஷன்’ அமைக்கப்பட்டது. அது, பிரிட்டிஷ் வணிகர்களுக்கு மேலும்
சாதகமான பல வழிகளை உருவாக்கித்தந்தது. அதன்படி, அவுரி விவசாயம்
செய்பவர்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டன. வரி செலுத்த முடியாதவர்கள்
கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
பிச்சை எடுத்தாவது வாழ்வோம். ஆனால், அவுரிச் செடி
பயிர்செய்ய மாட்டோம் என்று சொன்ன விவசாயிகள் ஆயுத முனையில்
ஒடுக்கப்பட்டனர். இந்த ஒடுக்குமுறைக்குத் துணையாக ராணுவமும், தனிப்படையும்
ஒன்று சேர்ந்தன. 1910-களில் சம்பரண் மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை
உருவானது. வரிச் சுமையும் பஞ்சமும் ஒன்று சேர சாயத் தோட்ட முதலாளிகளுக்கு
எதிராகக் கலகங்கள் உருவாகின. தீனபந்து மித்ரா என்பவர், அவுரித்
தோட்டங்களில் கஷ்டப்படும் விவசாயிகளின் நிலையை விளக்கி 'நீலதர்பன்’ என்ற
நாடகத்தை எழுதினார். இந்த நாடகம், 1872-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி மேடை
ஏற்றப்பட்டது. இது, அரசு எதிர்ப்பு நாடகம் என்று கருதிய பிரிட்டிஷ்
அதிகாரிகள் அந்த நாடகத்தைத் தடைசெய்தனர். ஆனால், அந்த நாடகம் ஏற்படுத்திய
தாக்கம் அவுரித் தோட்டக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய கிளர்ச்சியை
ஏற்படுத்தியது. விஷ்ணு சரண் தாஸ், திகம்பர் பிஸ்வாஸ் ஆகிய இருவரும் இந்த
எழுச்சிக்குத் தலைமை வகித்தனர்.
முர்ஷிதா பாத், பர்த்வான், குல்னா, பபானா என மக்கள்
எழுச்சி உருவாகத் தொடங்கியது. சாயத் தோட்ட முதலாளிகளாக இருந்த
வெள்ளைக்காரர்கள் தாக்கப்பட்டனர். சிலர், குடும்பத்துடன் தப்பி ஓடினர்.
அவுரி தொழிற்சாலைகளுக்குத் தீ வைக்கப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட
ஊர்களில் வெள்ளைக்கார ஏஜென்ட்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக உருவான
கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது பிரிட்டிஷ் அரசு. ஆனாலும், அவுரி
விவசாயிகளின் பிரச்னை தீரவில்லை. அவுரி உற்பத்தி மீது விதிக்கப்பட்ட
வரியைச் செலுத்த முடியாது என்று, மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். தென்
ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய காந்தி, 1917-ம் ஆண்டு
சம்பரான் கலவரம் பற்றிக் கேள்விப்பட்டு நேரடியாகக் களம் இறங்கினார். இந்தப்
போராட்டம் குறித்து எழுதியுள்ள ராஜேந்திர பிரசாத், ''எந்தத் தலைவரும்
பீகாருக்குள் செல்ல அனுமதிக்கப்படாத சூழலில், காந்தி துணிச்சலாக சம்பரான்
மக்களைத் தேடிச் சென்றதும் அந்த மக்களுடன் இணைந்து நின்று வரிகொடா என்ற
இயக்கத்தை ஆரம்பித்ததும் மகத்தான செயல். அது, உண்மையான மக்கள் போராட்டம்.
காந்தி, கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்துக் கஷ்டங்களைக்
கேட்டறிந்தார். குப்பை படிந்துகிடந்த வீதிகளை, வீடுகளை, காந்தி உள்ளிட்ட
சேவா சங்கத்தினர் சுத்தம் செய்தனர். அந்த எளிய செயல் மக்கள் மத்தியில்
காந்தியை மகத்தான தலைவராக உயர்த்தியது'' என்கிறார்.
சம்பரணில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அந்தப் பகுதி
மக்கள் அரசுக்கு வரி கொடுக்காமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு
ஊக்குவித்தார். அதன்படி, மக்களும் வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே
கலகத்தைத் தூண்டினார் என்று குற்றம் சாட்டிய பிரிட்டிஷ் அரசு, காந்தியைக்
கைதுசெய்து சிறையில் அடைத்தது. ஆனால், வரிகொடாப் போராட்டம் வலுவடைந்த
காரணத்தால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்.
முடிவில், பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி
விகித உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டன. அவுரி பயிரிடுவோருக்கு உரிய பணம்
கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அறவழிப் போராட்டமே காந்தியின் முதல்
வெற்றி. 1880-ல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட செயற்கைச் சாயம் காரணமாக,
இண்டிகோ ஏற்றுமதி குறையத் தொடங்கியது. ரசாயனப் பொருட்களைக்கொண்டு
தயாரிக்கப்பட்ட சாயத்தின் விலை மிகக் குறைவாக இருந்த காரணத்தால், இயற்கைச்
சாயமான அவுரி உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான விலை வீழ்ச்சி
காரணமாக அவுரி உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில்,
பணப்பயிர் என்ற அந்தஸ்தை அவுரிச் செடி முற்றிலும் இழந்தது.
இன்றும் மருந்துப் பொருளாக அவுரி வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதியாகிறது என்றாலும், பிரிட்டிஷ் காலத்தில் நடந்ததுபோல லட்சக்கணக்கான
டன் ஏற்றுமதி ஆவதில்லை. காந்தியின் முதல் அறப்போருடன் தொடர்புடைய இந்த
அவுரி விவசாயிகளின் போராட்டம் காலமாற்றத்தில் கவனம் பெறாமலேயே போய்விட்டது.
ஆனால், அன்று தொடங்கிய விவசாய மாற்றம் அதன் உச்சபட்சமாக தனது சொந்த
விதைகளை இழந்து ஒட்டு ரகங்கள், வெளிநாட்டு விதைகள், மிதமிஞ்சிய பூச்சி
மருந்துகள் என்று இந்திய விவசாயம் அதன் இயல்பான வளமையை இழந்துவிட்டது.
பணப்பயிருக்கான விவசாயம் என்பது முதன்மையானதோடு
விளைநிலங்கள் பிளாட்டுகளாக விற்பனையாகும் மோசமான நிலைக்கு இந்திய விவசாயம்
தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வீழ்ச்சியின் முதற்புள்ளி என்ற அளவில், அவுரி
விவசாயம் ஏற்படுத்திய நிகழ்வுகள் வரலாற்றின் எச்சரிக்கை மணியாகும்.
good info....
ReplyDelete