இந்தியாவில் பிறந்த இங்கிலாந்து எழுத்தாளர், ஜோசப்
ருட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling). இவர் எழுதிய புகழ்பெற்ற
படைப்பு, ஜங்கிள் புக்.
இந்தியக் காடு ஒன்றில் தவறவிடப்படும் ‘மோக்லி’ என்ற
சிறுவனை, விலங்குகள் எடுத்து வளர்க்கின்றன. கரடி, ஓநாய், கருஞ்சிறுத்தை,
மலைப்பாம்பு போன்ற பயங்கர விலங்குகள் எல்லாம் மோக்லியின் உயிர் நண்பர்கள்.
அவனுடன் ஆட்டம் பாட்டமாக இருப்பவர்கள். அதே சமயம், புலி மற்றும் குரங்குக்
கூட்டங்களால் தொந்தரவும் உண்டாகும். கானகத்தை ஒட்டியிருக்கும் கிராமத்து
மக்களுக்கும் அவனுக்கும் ஏற்படும் தொடர்பு, சில மனிதர்களால் உண்டாகும்
பிரச்னைகள் என விறுவிறுப்பும் நகைச்சுவையும் போட்டிபோடும்.

அன்பு, ஒழுக்கம், பிறருக்கு நன்மை செய்தல் என நன்னெறி
விஷயங்களை அடிப்படையாகக்கொண்ட கதைகளின் தொகுப்பு இது. அதனாலேயே, பிற சாகசக்
கதைகளில் இருந்து வேறுபட்டது. உலக அளவில், சாரணச் சிறுவர்களுக்கு இந்தப்
புத்தகம் அளிக்கப்படுகிறது.
காமிக்ஸ், தொலைக்காட்சித் தொடர், சினிமா எனப் பல
வடிவங்களில் ஏற்கெனவே வெளியாகி, உலகச் சுட்டிகளை ஈர்த்துள்ளது. இப்போது,
மனிதர்கள் மற்றும் அனிமேஷன் கலந்த பிரமாண்டமான 3D படமாக, டிஸ்னி
தயாரிப்பில் உருவாகிவருகிறது.

இதில், மோக்லி வேடத்தில் நடிப்பது, ‘நீல் சேத்தி’ (Neel
Sethi) என்ற 10 வயது சிறுவன். நியூயார்க்கில் வசிக்கும் இவன், இந்திய
வம்சாவளியைச் சேர்ந்தவன். படத்தில், விலங்குகள் எல்லாம் அனிமேஷனில் வரும்.
‘பகீரா’ என்ற கருஞ்சிறுத்தைக்குக் குரல் கொடுப்பவர், பென் கிங்ஸ்லி (Ben
Kingsley). பாலூ (Baloo) கரடிக்குக் குரல் கொடுப்பவர், பில் முர்ரே (Bill
Murray). அயன் மேன் 1&2 படங்களை இயக்கிய, ஜான் ஃபேவ்ரூ (Jon Favreau)
இந்தப் படத்தை இயக்குகிறார்.
No comments:
Post a Comment