முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை எட்டிய முதல்
நாடு, முதல் ஆசிய நாடு, செவ்வாயை அடைந்த நான்காவது நாடு... எனப் பல
சாதனைகளைப் படைத்து, இந்தியாவுக்குப் பெருமை பெற்றுத்தந்துள்ளது
மங்கள்யான்.
பூமியில் தொடங்கி செவ்வாயை அடைந்தது வரையிலான
நிகழ்வுகள், சாதனை படைத்த விஞ்ஞானி களுக்குப் பாராட்டுக்கள் என, பரபரப்பான
மகிழ்ச்சி நாட்களாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மங்கள்யான் சாதனை.
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் செலுத்தப்பட்டது, அது செயல்படும் விதம் பற்றி சில துளிகள்...
மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு,
பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. ஆனால், விண்வெளிக்குச்
சென்றபின் விண்கலத்தை இயக்க, LAM (Liquid Apogee Moto) எனப்படும் சிறப்புத்
திரவ இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. 440 நியூட்டன் விசை தரும் இந்த
இன்ஜினைக் கொண்டுதான், கோள்களுக்கு இடையேயான விண்வெளிப் பயணத்தையும்
செவ்வாய் கிரகத்தின் பாதையில் புகுவதையும் இஸ்ரோ விஞ்ஞானி கள்
செயல்படுத்தினர். இந்த இன்ஜின், இஸ்ரோ மையத்தில் உள்ள இந்திய விஞ்ஞானிகளால்
உருவாக்கப்பட்டது.
செவ்வாயில் இறங்கியதும், உறக்கத்தில் இருந்த இந்த
இன்ஜின், திட்டமிட்டபடி செப்டம்பர் 22-ம் தேதி, விழித்துக்கொண்டு
செயல்பட்டது. முக்கிய LAM இன்ஜின் தவிர, மங்கள்யானில் எட்டு சிறிய நெக்கி
இன்ஜின்கள் (Thrusters) இருக்கின்றன.
அது என்ன நெக்கி இன்ஜின்கள்?
விண்வெளியில், ஆன்டெனாவை பூமிக்கு நேரே வைக்க,
விண்கலத்தைத் திருப்ப வேண்டும். தரையில் ஒரு காரையோ, ஆகாயத்தில் ஒரு
விமானத்தையோ இயக்க, உராய்வு விசை பயன்படும். ஆனால், விண்வெளியில் காற்றும்
இல்லை, உராய்வும் இல்லை. அந்தச் சவாலை சந்திக்கத்தான் இந்த நெக்கி
இன்ஜின்கள்.
காற்றடைத்த பலூனில் இருந்து அழுத்தக்காற்று
வெளிவரும்போது, பலூன் எதிர்த்திசையில் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி
செல்வதுபோல, இந்த இன்ஜினிலிருந்து அழுத்தவாயு பீய்ச்சிக்கொண்டு வெளியாகும்.
விண்கலம் எதிர்த்திசையில் நெக்கித் தள்ளப்படும். இவ்வாறுதான், விண்கலத்தை
விண்வெளியில் திருப்ப முடியும்.
செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான் புகுந்த அன்று
நடந்த இயக்கங்கள், சாகசம் நிறைந்தவை. அன்று இன்ஜின் இயங்கி, விண்கலத்தின்
விசையைச் சரியான அளவு குறைக்க வேண்டும். இன்ஜின் வாயை விண்கலம் போகும்
திசையில் இருக்கும்படி செய்ய, விண்கலத்தில் உள்ள நெக்கி இன்ஜின்களை இயக்கி,
விண்வெளியில் அதை பல்டி அடிக்கும்படிச் செய்தார்கள்.
முதலில் LAM இன்ஜின் தொடர்ந்து 23.18 நிமிடங்கள்
எரிந்து, விசை தந்தது. அவ்வாறு இன்ஜின் இயங்கும்போது, முதல் 4 நிமிடங்களே
பூமியின் பார்வையில் இருக்கும். பின்னர், செவ்வாய் கிரகத்தின் பின்புறம்
விண்கலம் சென்றுவிடும். விண்கலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது.
எனவே, விநாடிக்கு 1,098 மீட்டர் என்ற எதிர் கதிவேகம் அடைந்ததும், இன்ஜின்
தானாக நின்றுவிடும்படி ஆணைகளை விண்கலத்தில் ஏற்றியிருந்தனர்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்களே அதுபோல, கதிவேகம்
கூடினால், விண்கலம் செவ்வாயின் பிடியில் இருந்து நழுவிவிடும். கதிவேகம்
குறைந்தால், செவ்வாய் கிரகத்தில் மோதி, சுக்குநூறாக உடைந்துவிடும்.
செவ்வாயை நெருங்கிய மங்கள்யான், முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது,
செவ்வாயின் பின்புறம் சென்றுவிட்டது. எனவே, விண்கலத்தோடு உள்ள ரேடியோ
தொடர்பு அறுந்துவிட, ‘்குருட்டு’ நிலை எனப்படும் நிலையில்தான் விண்கலத்தை
வெற்றிகரமாக இயக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
அதுமட்டுமா... அன்று, விண்கலம் சுமார் 223 மில்லியன்
கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எனவே, ரேடியோ தகவல் வர 12 நிமிடங்கள் ஆனது.
எனவே, விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பின்புறத்தில் இருந்து 7:47-க்கு
வெளிவந்தாலும், சுமார் 8 மணிக்குதான் பூமியில் ரேடியோ சிக்னல் கிடைத்தது.
அதன் பின்னரே, திட்டம் வெற்றி என அறிவித்தனர்.
மங்கள்யானில் மொத்தம் ஐந்து அறிவியல் கருவிகள்
இருக்கின்றன. இதில், கேமரா அன்றே இயக்கப்பட்டு, சோதனை படங்கள்
எடுக்கப்பட்டுள்ளது. தற்செயலாக, ‘சைடிங் ஸ்ப்ரிங்’ எனும் வால்மீன்,
செவ்வாய் கிரகத்துக்கு அருகே அக்டோபர் 18 அன்று செல்ல இருக்கிறது. அதனையும்
கூடுதலாக மங்கள்யான் மூலம் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
கிங் ஆஃப் இந்தியாவாக செவ்வாய் கிரகத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள மங்கள்யான், மேலும் பல சாதனைகள் படைப்பது நிச்சயம்!
No comments:
Post a Comment