Search This Blog

Wednesday, October 01, 2014

சனீஸ்வரர்

சனி - சூரியன்:

சனியும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் பகைவர்் என்பதால், இந்தச் சேர்க்கை சிலாக்கியம் இல்லை. தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவு சுமுகமாக இருப்பதற்கில்லை. சொத்துக்கள் சம்பந்தமாக கோர்ட்டுக்குச் செல்லவும்கூடும். ஒருவிதத்தில் இந்தச் சேர்க்கையானது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம். சங்கீதத்திலும் கலைகளிலும் ஆர்வமும், அழகாகப் பேசும் திறனும் இவர்களிடம் காணப்படும். அதிக செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்தாலும், கலகம் செய்வதிலும், மற்றவர்களை ஏமாற்றுவதிலும் சாமர்த்தியம் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு சனிதசை சூரியபுக்தி அல்லது சூரியதசை சனிபுக்தி நடைபெறும் காலங்களில், உரிய பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.  

சனி - சந்திரன்:

அழகான தோற்றத்துடன் திடகாத்திரமாகக் காணப்படும் இவர்கள் ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டிருப்பார்கள். மந்தமாகக் காணப்படுவார்கள். மாந்த்ரீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும், அதை வியாபாரரீதியாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் பழங்களைச் சாப்பிடுவதில் பிரியம் அதிகம் இருக்கும். உடல் நலனைப் பராமரிப்பதில் சிரத்தையுடன் இருப்பார்கள். இவர்களில் ஒருசிலர் இளம் வயதிலேயே தாயை இழக்க நேரிடலாம். இயல்பிலேயே சாமர்த்தியசாலிகளான இவர்கள் பகைவர்களை சுலபமாக வெல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.

 சனி - செவ்வாய்:

நீண்ட கைகளைப் பெற்றிருக்கும் இவர்கள் நல்ல கல்வியறிவும், புத்திக்கூர்மையும், திறமையும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள்.எல்லாவிதமான சுகசெளகர்யங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மற்றவர்களால் பெரிதும் புகழப்படுவார்கள். தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உபகாரம் செய்வார்கள். அதேநேரம், தவறு செய்பவர்களைக் கண்டால் தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டார்கள். கெமிக்கல், இரும்பு தொடர்பான தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பார்கள். எப்போதும் சிந்தனைவயப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள்.

 சனி - புதன்:

நிறைந்த கல்வியறிவு பெற்றிருக்கும் இவர்கள், சாஸ்திர ஆராய்ச்சிகளிலும், வாதப் பிரதிவாதங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களைவிடவும் தான் மேலானவன் என்பது போன்ற கர்வமும் இவர்களிடம் காணப்படும். ஆசிரியராகவோ மதாசாரியராகவோ புகழ் பெறுவார்கள். அரசாங்கம் தொடர்பான சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.   எந்தத் துறையாக இருந்தாலும், அதில் அதிகாரம் மிக்க பணியில் இருப்பார்கள். நல்ல தேஜஸுடன் காணப்படும் இவர்களுக்குச் சொந்த வீடு, நிலங்கள் போன்றவை அமைவதுடன், மனைவி வழியிலும் சொத்துக்கள் சேரும்.

 சனி - குரு:

இவர்கள் நிறைந்த கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்தாலும், அதனால் இவர்கள் அடையக்கூடிய பலன்கள் மிகக் குறைவாகவே இருக்கும். தாய்மாமன் வகையில் மிகுந்த ஆதரவு உண்டு. தாயார்வழி மாமாக்களுடைய ஆதரவைப் பெற்றிருப்பர். இந்தச் சேர்க்கையானது புத்திர தோஷத்தையும், புத்திரர்களால் அவப்பெயரையும் ஏற்படுத்தக்கூடும். 30 வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு எதிர்பாராத பதவி கிடைப்பதுடன், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். இவர்களில் பலரும் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பணம் புழங்கக்கூடிய இடங்களிலும் வேலை செய்து பணம் சம்பாதிப்பர். பூமி வகையிலும் இவர்களுக்கு லாபம் உண்டாகும்.  

சனி - சுக்ரன்:

செல்வம், செல்வாக்கு, புகழுடன் திகழ்வார்கள். அந்தஸ்தும் அதிகாரமும் உள்ள பதவிகளில் இருப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருக்கும் இவர்களுக்கு, அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். வைரம், பொன், வஸ்திர ஆபரணங்களுடன் உன்னதமான நிலையில் இருப்பார்கள். பல  ஆட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகார யோகமும் இவர்களுக்கு உண்டு. சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றுப் புகழுடன் திகழ்வார்கள். சாஸ்திரங்களில் உள்ளவற்றை நம்பிக்கையுடன் பின்பற்றுவார்கள். பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கொண்டிருக்கும் இவர்கள், எது நடந்தாலும் நன்மைக்கே என்னும் மனப் பக்குவத்தைப் பெற்றிருப்பார்கள்.  

 சனி - ராகு:

மிகுந்த கல்வியறிவுடன் இருக்கும் இவர்கள் நிலங்கள், வீடு வாசல், மாடு, கன்றுகள், பால்பாக்யம், கீர்த்தி, வண்டி, வாகனங்கள் முதலியவற்றுடன் பலரும் மதிக்கும்படியாக வாழ்வார்கள். அரசருக்கு நிகராக பணியாள்கள் சூழ இருப்பார்கள். பெண்களால் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். இவர்களில் பலர் சட்டம் படித்து, நீதித் துறையில் உயர்பதவி வகிப்பதுடன், நீதியை மிக நேர்மையுடன் கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குச் சகோதர, சகோதரி வகையில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.

சனி - கேது:

இந்தச் சேர்க்கையானது நல்ல இடத்தில் அமையப் பெற்றிருந்தால், ஆன்மிகத்தில் நாட்டமும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள். உடலில் அடர்த்தியான ரோமம் காணப்படும். கோபமும், பிறரை ஏமாற்றும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு காம உணர்ச்சி சற்று மிகுதியாகக் காணப்படும். பெயருக்கு ஆசைப்பட்டு, தான தர்மங்களைச் செய்வார்கள். மற்றவர்கள் வீட்டில் உணவு உண்பதில் பிரியம் இருக்கும். பித்த சம்பந்தமான நோய்கள் இவர்களுக்கு ஏற்படக்கூடும்.

No comments:

Post a Comment