Search This Blog

Friday, October 03, 2014

பலி வாங்கும் சுனாமி


‘சுனாமி’. இந்தச் சொல்லைக் கேட்டாலே 2004ம் ஆண்டில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்தச் சுனாமி தமிழகத்தை மட்டுமன்றி 14 நாடுகளைத் தாக்கி, இரண்டரை லட்சம் பேரை பலிகொண்டது. கடலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலேயே சுனாமி தான் மிகப்பெரிய ஆபத்து.

கடலடித் தரைக்குக் கீழே ஏற்படுகிற பூகம்பத்தின் விளைவாகத்தான் சுனாமி தோன்றுகிறது. ஆனால் இப்படியான பூகம்பங்கள் அனைத்துமே சுனாமியை உண்டாக்குவதில்லை. மிகக் கடுமையான கடலடி பூகம்பம் தான் சுனாமியை உண்டாக்குகிறது.

கடலடி பூகம்பம் சில ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் அப்படியான பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற நிலப்பகுதி சுனாமியால் தாக்கப்படலாம்.

சுனாமி ஏற்படும்போது 10 அல்லது 30 மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் பெரும் பிரவாகமாக நிலப் பகுதிக்குள் பாய்கிறது. பின்னர் சற்று நேரம் கழித்து அந்த நீர் வேகமாக வந்த வழியே கடலுக்குத் திரும்புகிறது. இப்படிக் கடல் நீர் திரும்பிச் செல்லும்போது அனைத்தையும் ஒரேயடியாக அடித்துச் செல்கிறது. இதன் விளைவாகப் பெரும் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

சுனாமியிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி உண்டு. சுனாமி தாக்குவதற்கு முன்னர் கடல் நீரானது உள்வாங்கும். கடல் நீர் ஒரேயடியாகப் பின்னுக்குப் போவது என்பது அசாதாரண நிகழ்ச்சி. ஆகவே கடலோரமாக வசிப்பவர்களும் அந்த வட்டாரத்துக்கு வர நேர்ந்தவர்களும் இதை அதிசயமாகக் கருதி வேடிக்கை பார்க்கச் செல்வர். உள்வாங்கிய கடல் பின்னர் வேகத்துடன் கரையை நோக்கிப் பாயும் போது தப்பிப்பதற்கு நேரம் இருக்காது.

ஆகவே கடல் அசாதாரணமான அளவுக்கு உள்வாங்கி அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்படுமானால், திரும்பிப் பார்க்காமல் மேடான இடத்தை நோக்கி அல்லது உறுதியான கட்டடங்களின் மேல் மாடியை நோக்கி ஓடினால் உயிர் பிழைக்கலாம்.

2004ம் ஆண்டில் தோன்றிய சுனாமி தாய்லாந்து நாட்டின் கரையோரப் பகுதிகளையும் தாக்கியது. அப்போது புகேட் என்னுமிடத்தில் கடல் உள்வாங்கியபோது இங்கிலாந்திலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதான டெல்லி ஸ்மித் என்னும் சிறுமி சுனாமி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்து எல்லோரும் ஓடிப் போய்விடலாம்" என்று உஷார் படுத்தவே அவளது குடும்பத்தினரும் மற்றும் பலரும் அவ்விதமே மேடான இடத்தை நோக்கி ஓடி உயிர் தப்பினர். பள்ளியில் அவளது ஆசிரியர் சுனாமி பற்றி சொல்லிக் கொடுத்திருந்ததால் அவளால் மற்றவர்களை எச்சரிக்க முடிந்தது.

சுனாமி அலைகளின் உயரம் இந்த அளவுக்குத் தான் இருக்கும் என்று யாராலும் கணித்துக் கூற முடியாது. ஒருசமயம் அலாஸ்காவைத் தாக்கிய சுனாமியின் உயரம் 524 அடி அளவுக்கு இருந்தது.

ஜப்பானில் கிழக்குக் கரை ஓரமாக அமைந்த புகு ஷிமா நகரை 2011ம் ஆண்டில் ஒரு சுனாமி தாக்கியது. இதன் விளைவாக அங்கிருந்த அணுமின் சார நிலையத்திலும் கடல் நீர் புகுந்து விபரீத விளைவுகள் ஏற்பட்டன. சுனாமியின் விளைவாக பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் வேதனை என்னவென்றால் கடலில் தடுப்புச் சுவர்களை எழுப்பினால் சுனாமியைத் தடுத்து விடலாம் என்று கருதி கரையோரமாகக் கடலின் நடுவே நெடுக 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்புச் சுவர்களை எழுப்பியிருந்தார்கள்.சுனாமி அலைகள் 15 மீட்டர் உயரத்துக்கு இருந்ததால் தடுப்புச் சுவர்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.  தடுப்புச் சுவர்களால் பலன் இல்லாமல் போகலாம் என்று பல நிபுணர்கள் ஏற்கெனவே கூறியிருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் இந்தச் சுவர்கள் எழுப்பப்பட்டன. அது மட்டுமன்றி தடுப்புச்சுவர்கள் கட்டுவதில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டதாக விழாவும் கொண்டாடினர்.தமிழகத்தைத் தாக்கிய சுனாமி எப்படி நிகழ்ந்தது என்பதைக் கவனித்தால் சுனாமி பற்றி மேலும் நன்கு அறிந்துகொள்ள இயலும்.அந்தமான் தீவுகளுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் அடி நிலப் பாறைகள் பூமிக்குள் இறங்கின. 1300 கிலோ மீட்டர் நீளத்துக்கு இவ்விதம் பாறைகள் உள்ளே இறங்கியபோதுதான் கடலடியில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு கடலடித் தரை பல மீட்டர் உயரத்துக்கு மேல் எழும்பிக் கீழே இறங்கியது. கடலடித் தரை இவ்விதம் மேலே எழும்பியபோது அங்கு கடல் நீரும் மேலே எழும்பியது. இதுவே சுனாமி அலைகளை உண்டாக்கியது.கடலுக்கு அடியில் பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள் பூமிக்குள் ஏன் இறங்க வேண்டும் என்பதைப் பின்னர் கவனிப்போம்.ஜப்பான் நாடு அடிக்கடி சுனாமியைச் சந்திக்கிற நாடு. மக்கள் அனைவருக்கும் சுனாமி என்றால் என்ன என்று நன்கு தெரியும். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டால் அதை மதிப்பவர்கள். ஆனால் பெரும் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் காப்பாற்றி விடும் என்று நம்பியதால் 2011ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பெரும் சேதத்தை உண்டாக்கியது.

சுனாமி அலைகள் விசித்திரமானவை. 2004ம் ஆண்டில் கடல் தரைக்கு கீழே 30 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த இடம் சென்னையிலிருந்து சுமார் 2700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகும். அந்த இடத்துக்கும் சென்னைக்கும் இடையிலான கடல் பகுதியில் இருந்த கப்பல்கள் எதுவும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் சுனாமி அலைகள் தமிழக் கரையை நோக்கிச் செல்கிறது என்பது கூட கப்பலில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்காது.கடலில் கடும் புயல் உருவாகும்போது தோன்றுகிற அலைகளுக்கும் சுனாமி அலைகளுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் உண்டு. புயலின்போது நடுக்கடலில் அலையின் உயரம் 10 மீட்டர் அளவுக்கும் இருக்கலாம். கப்பல்கள் புயல் பகுதியில் சிக்கிக்கொண்டால் கப்பலின் தளத்தின் மீது பயங்கர அலைகள் தாக்கும். இத்துடன் ஒப்பிட்டால் நடுக்கடலில் சுனாமி அலைகளால் கப்பல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நடுக்கடலில் சுனாமி அலையின் உயரம் 30 செண்டி மீட்டருக்கு மேல் இருக்காது. சுனாமி அலைகள் கரையை அடையும்போதுதான் பயங்கர வடிவை எடுக்கின்றன. கரையை அடையும்போது அலையின் உயரம் 30 மீட்டராகக் கூட இருக்காலாம்

சுனாமி தாக்குதல் ஏற்படலாம் என்று தோன்றினால் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் சுனாமி ஆபத்திலிருந்து தப்பிக்க நடுக்கடலுக்குச் சென்றுவிடும்.

என்.ராமதுரை

No comments:

Post a Comment