Search This Blog

Monday, October 20, 2014

புரூஸ் லீ!

குங் பூ என்றதுமே இன்றைக்கும் பலரது நினைவுக்கு வருவது புரூஸ் லீதான். இவரது சண்டைகள் எப்படி கடினமானவையோ அதுபோல, அவரது வாழ்க்கையும் கஷ்டங்கள் நிறைந்தது. 

நவம்பர் 27, 1940-ல் கலிஃபோர்னியா வில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார் லீ. இவர் பிறந்த மருத்துவமனை யில் வேலை பார்த்த நர்ஸின் பெயரையே அவருக்கு முதல் பெயராக வைத்தனர். இதனோடு அவரது தந்தையின் பெயரான லீயும் சேர்ந்தது.

லீயின் தந்தை ஒரு திரைப்பட நடிகர்.  சிறுவயதிலேயே குங் பூ கற்றுத் தேர்ந்தார். ஆனால், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதைக் கண்ட அவரது தந்தை லீயை நியூயார்க் நகரத்துக்கு அனுப்பி வைத்தார்.


தனது அன்றாட வாழ்க்கைக்காக குங் பூ கற்றுத் தருவதைத் தொழிலாக்கினார். அப்போது வோங் ஜாக்மேன் எனும் குங் பூ வீரர், “ஆசியாவைச் சேராத மக்களுக்கு குங் பூ கற்றுத் தராதே” என்றார். ‘‘கலை எல்லோருக்கும் பொதுவானதுதானே’’ என்று லீ சொல்ல, அவரை சண்டைக்கு அழைத்தார். இந்தச் சண்டையில் தோற்றால், குங் பூ சொல்லித் தருவதை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், அந்தச் சண்டையில் லீ வென்றார்.

குங் பூ கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்த லீ, டிவி ஷோக்களிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அனைவரையும் அசரவைத்தார். லீயின் வலதுகால் இடதுகாலைவிட சற்று உயரம் குறைவு. அதை ஒரு குறையாகக் கருதாமல் தன் பாணியில் சண்டையிட்டு கலக்கினார். இவரது வேகத்தை ஒரு நொடிக்கு 24 பிரேம்களால் படம் பிடிக்க முடியவில்லை; இன்னமும் 10 பிரேம்கள் கூடுதலாகத் தேவைப்பட்டன.

1973-ம் ஆண்டு சீனாவில் எடிமா நோயால் இறந்தார் லீ. தனது முதுகு வலிக்கு எடுத்துக்கொண்ட மருந்துதான் லீயின் மூளையைப் பாதித்து அவரைக் கொன்றுவிட்டது என்றனர் சிலர். மேலும் சிலர், அவரது மரணத்தில் சர்ச்சை இருப்பதாக கூறினர். 32 வயதில் புரூஸ் லீ இறந்தாலும், தடைகளைக் கடந்து செல்லும் மன தைரியத்தை அவரிட மிருந்து எல்லோருமே பெறலாம்!

ஸ்ரீராம்

No comments:

Post a Comment