Search This Blog

Tuesday, October 14, 2014

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

மேட் இன் அமெரிக்கா, மேட் இன் ஜெர்மனி என்கிற வார்த்தைகள் ஒரு காலத்தில் நம்மவர்கள் இடையே படுபிரபலம். இதனை உணர்ந்த பிரதமர் மோடி இதே பாணியில் மக்களைக் கவரும் விதமாக  சமீபத்தில் அறிவித்திருக்கும் திட்டம் தான் ‘மேக் இன் இந்தியா’. உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருளைத் தயாரித்து, அதை உலகம் முழுக்க கொண்டு சென்று விற்கலாம். இதன்மூலம் பல கோடி வேலைவாய்ப்பு களை உருவாக்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை முழுமையாக விளக்கும் வகையில் ஒரு தனி இணையதளத்தையே திறந்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

 

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளை அந்த இணையதளத்தில் பரிந்துரை செய்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் துறைகள் இன்றைக்கு இந்தியாவில் எப்படி இருக்கிறது, ஏன் இந்தத் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங் களையும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இணையதளத்தில் சொல்லப்பட்டு இருக்கும் முக்கிய விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

1ஆட்டோ மொபைல் துறை யில் ஆண்டுக்கு 21.50 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கிறது நம் இந்தியா. உலக அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா 4-வது பெரிய நாடாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிலுக்குத் தேவையான கட்டமைப்பு இருப்பதால், இந்தத் தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொடங்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 2020-ல் வருடத்துக்கு 60 லட்சம் வாகனங் களை விற்பனை செய்யும் அளவுக்கு இந்தியா வளரும்; அடுத்த 20 வருடத்தில் உலகின் மிகப்  பெரிய ஆட்டோமொபைல் ஹப்பாக இந்தியா இருக்கும். 

2 ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறை 2012-13-ல் மட்டும் 39.7 பில்லியன் டாலர் வருவாயைப் (சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய்) பெருக்கியுள்ளது. தற்போது உலகின் நான்காவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உள்ள இந்தியா இன்னமும் இரண்டு ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உருவாகும்.

3உள் கட்டமைப்புத் துறையில் 2017-ம் ஆண்டு வரை 1,000 பில்லியன் டாலர் அளவிலான திட்டங்களுக்குத் தேவை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 650 பில்லியன் டாலர் (சுமார் 39.65 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு முதலீடு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கட்டுமானப் பணிகள் இந்திய ஜிடிபியில் 10 சதவிகிதப் பங்களிப்பை அளிப்பதால், இந்தத் துறையில் முதலீடு வரவேற்கப்படுகிறது.

4  கனிமவளத் துறையில் இந்தியா உலக அளவில் ஆறாவது இடத்திலும், இரும்பு உலோக இருப்பில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும் இருக்கிறது.
இந்தியாவில் இன்னமும் 302 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதால், அடுத்த 20-30 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடும் அளவுக்கு சக்தி உள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது மின்சாரம் மற்றும் சிமென்ட் துறையை அதிகம் சார்ந்துள்ளதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

5 துறைமுகங் களைப் பொறுத்த மட்டில், 2009-ம் ஆண்டு 575 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த சரக்கு பயன்பாட்டு வசதி தற்போது 800 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 43,000 கோடி ரூபாய்  அளவிலான முதலீடு கள் 2014-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளதும் இந்தத் துறையில் முதலீடு செய்யக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 87 துறைமுகங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், பார்மா, மாற்று எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுற்றுலா போன்ற துறைகளில் உள்ள சிறப்பம்சங்களையும் மோடி அரசு முன்வைத்து இந்தத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. 

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, ஆஹா, அற்புதம் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால், இவையெல்லாம் நிறைவேறும் சாத்தியம் கொண்ட திட்டங்கள்தானா, சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் இன்றைக்கும் நம் நாடு எங்கே இருக்கிறது என்கிற கேள்விகள் முக்கியமானவை. உலகில் உற்பத்திரீதியாக முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் இந்தியா 134வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு வெறும் 16%தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34% பங்களிப்பை கொண்டுள்ளன. நம் அண்டை நாடு களான பாகிஸ்தானும், பங்களாதேஷும் நம்மைவிட அதிக பங்களிப்பைதான் ஜிடிபிக்கு வழங்குகின்றன.

2022-ல் நமது மொத்த ஜிடிபியில் 25 சதவிகித பங்களிப்பை உற்பத்தித் துறை செய்ய வேண்டும் என்கிற இலக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை நம்மால் அடைய முடியுமா என்றால், கடினம்தான்.

 இந்தியாவில் தொழில் துவங்க 12   முக்கிய அனுமதி பெற வேண்டும். இதற்கு 27 நாட்கள்  செலவாகும்.  கட்டுமான அனுமதி பெற 35 அனுமதி பெற வேண்டும். இதற்கு 168 நாட்கள் செலவாகும். ஆக மொத்தம், அனைத்து அனுமதிகளையும் பெற 1,420 நாட்கள் (அதாவது, 3 ஆண்டுகள் 89 நாட்கள்) தேவைப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் 10 கோடி புதிய வேலைகளை எப்படி உருவாக்க முடியும்  என்கிற கேள்வி எழவே செய்கிறது.

இருப்பினும் தொலைதொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு களில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை யும், பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி தந்திருப்பது இந்தத் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. தவிர,  பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் எதாவது ஒரு திட்டம் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதால், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிக்கு  வழிவகுக்கும்.

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமானது கேட்பதற்கு உற்சாகம் தரு வதாக இருந்தாலும், இதைச் செயல்படுத்த தேவையான நிலங்கள், மின்சாரம் போன்றவை பெரும் தட்டுப்பாடாகவே  உள்ளன. இந்தத் தடைகளை தகர்க்க மத்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.






No comments:

Post a Comment