Search This Blog

Monday, October 20, 2014

ஸ்கந்த சஷ்டி

‘சஷ்டி’ என்றால் ஆறு என்று பொருள். திதிகளில் ஆறாவது என்பதால் அதற்கு ‘சஷ்டி’ என்றும் பெயர். ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறுமுகப்பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகும். ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களையும் முருக பக்தர்கள் விரத நாட்களாகக் கருதி வழிபடுகின்றனர்.

கூர்கொண்ட வேலன், போர் பூண்ட காலன், ஆறிரு தடந்தோளன் ஆறுமுகனுக்கு ஆயிரமாயிரம் கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் தனிச்சிறப்பு வாய்ந்தது. முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் மட்டுமே கடற்கரைக் கோயில். ‘திருச்சீரலைவா’ என அழைக்கப்பட்ட திருச்செந்தூரில் அமைந்துள்ள இக்கோயில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது. இங்கு கொண்டாடப்படும் ‘ஸ்கந்த சஷ்டி’ விழா உலகப் பிரசித்தி பெற்றது. பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் இங்கு முருகப்பெருமான் நிகழ்த்தும் சூரசம்ஹார வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

மங்கலங்களையே விரும்புவது மனித மனம். மங்கலங்களை நமக்களிப்பது போதுமென்ற மனம். போதுமென்ற மனத்தை அடையத் தடையாக இருப்பது ஆசை. அதுபோன்றே, பரம்பொருளாம் இறை பதம் சென்றடைய ஆணவம், கன்மம், மாயை போன்றவை தடைகளாக உள்ளன. இம்மும்மலங்களின் மொத்தத் தோற்றமே சூரபத்மன். அதர்மத்தின் வித்தான இவனது கொடுமையால் விளைந்தது தேவர்களின் சிறைவாசம். தேவர்தம் குறை தீர்க்கும் பொருட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றமானான் கந்தப்பெருமான்.

ஆறுமுகன் தரிசனம் வேண்டி, தேவ குரு பிரகஸ்பதி செந்தூர் தலத்தில் தவமிருக்க, அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் இங்கேயே தங்கினார். தேவ குரு மூலம் சூரபத்மனின் கொடுங்கோல் பின்னணியையும் தெரிந்து கொண்டார். அவனைத் திருத்தி ஆட்கொள்ள சமாதானம் வேண்டி தமது படைத்தளபதி வீரவாகுவைத் தூதாக அனுப்பினார்.

அசுர குணமல்லவா? ஆண்டவன் அருட்குணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. போருக்குக் கிளம்பி வந்த சூரபத்மனை வெற்றி கொண்டான் முருகப் பெருமான். இது, ‘ஆணவம்’ எவ்வகையில், எத்தனை முறை தலையெடுத்தாலும் அது பூண்டோடு அழிக்கப்பட்டே தீரும் என்பதை உணர்த்துவதாகும். இறுதியில் சூரபத்மனை வாஞ்சையோடு ஆட்கொள்ளவும் செதார் சிவனார் மைந்தன்.

எப்படி? முருகப்பெருமான் சூரபத்மனை கொல்ல வில்லை. மாறாக, மாமரமாக உருமாறி எதிர்த்த சூரபத்மனை தமது வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். இருகூறாகப் பிளந்த மாமரம், சேவலாகவும், மயிலாகவும் மாறியது. அசுர சுபாவத்தால் எதிர்க்கவும் முனைந்தது. தம் அருட்பார்வையை அவற்றின்மீது செலுத்தி ஆட்கொண்டார் முருகப்பிரான். கொடியவனான சூரன் சேவல் கொடியானான்; வேலவனைத் தாங்கும் வாகனமும் ஆனான்.

தேவர்களைப் பொறுத்தவரை நடந்தது சம்ஹாரம் என்றாலும், சூரபத்மனைப் பொறுத்தவரை அவனுக்கு நிகழ்ந்தது மங்கலமே. அனைவரையும் அலற வைத்தவன், அனைவராலும் வணங்கப்படுபவனாக ஆனது, எவ்வளவு பெரிய மாற்றம்?! ஆறுமுகனல்லவா இந்தப் பேற்றை அவனுக்கு அருளினான்.

ஸ்கந்த சஷ்டியன்று, யானை முகன், சிம்ம முகன், சூரபத்மன் என மூன்று ரூபங்களில் வரும் அசுரர்களை வதைக்கிறார் முருகப்பெருமான். இம்மூன்று அசுரர்களும் முறையே மாயை, கன்மம், ஆணவம் போன்றவற்றை உணர்த்துகின்றன. மாயையை உணர்த்தும் யானை முகன் முதலில் வதைக்கப்படுகிறான். மாயை ஒழிந்தால் கன்மம் தானாகவே தொலையுமாதலால் அடுத்து, சிம்ம முகனை வதைக்கிறார். மூன்றாவதாக, ஆணவ மலமானவன் சூரபத்மன். ஆணவ மலம் ஒடுங்குமே தவிர, அழியாது. எனவே, சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் ஒடுக்கிப் பணிகொண்டார் முருகப்பெருமான். இதுவே ஸ்கந்த சஷ்டி நமக்கு உணர்த்தும் தத்துவப் பொருளாகும்.

மனிதத் தலைகளாய் அல்லது கடல் அலைகளாய் என வியப்புறும் வண்ணம் லட்சோப லட்சம் மக்கள் பங்கு பெற்று களிப்புறும் திருச்செந்தூர் ஸ்கந்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ளப்பட்டு, முடிவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பின்பு, ஏழாம் நாள் முருகப்பெருமான் - தெய்வானை திருக் கல்யாண வைபவம். அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை சாதிக்கிறார். எதிர்த்து நின்றவனையும் ஏற்றுக் கொள்ளும் அம்பிகையின் அருமந்த புதல்வனின் அருட்திறத்தைத் தான், திருச்சீரலைவாயின் கடலலைகள் இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment