Search This Blog

Tuesday, October 14, 2014

மிஸ்டர் கூல் தோனி !

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,  தோற்றால் வருத்தம் அடைவது  சாதாரண மனிதனின் இயல்பு. இதனை மாற்றி எந்தநிலையிலும் நிதானமாகச் செயல்படுபவர்களே சிறந்த தலைவர்களாக மாறுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி.

ஜூலை 7, 1981-ல் ராஞ்சியில் பிறந்த தோனி, சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஒருநாள் அவரது நண்பர்கள் விளையாடும் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட, தோனி விக்கெட் கீப்பராக அழைக்கப்பட்டார். அதிலிருந்து கிரிக்கெட் ஆர்வம் அவரைத் தொற்றிக்கொண்டது. பீகார் அணியில் இடம்பிடித்த தோனி, நன்கு ஆடினாலும், அவரது அணி தோல்வியைச் சந்தித்த தால், தோனியின் திறமை வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது.


இந்திய ஏ அணியில் இடம் பிடித்த தோனி, கென்யாவுக்கு எதிராக அடித்த சதம் அப்போதைய கேப்டன் கங்குலியின் கண்ணில் பட்டது. பங்களாதேஷ் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கினார் கங்குலி. முதல் ஆட்டத்தில் ‘டக் அவுட்’ ஆகி தோனி வெளியேற, இனி அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கனவுதான் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பாகிஸ்தான் தொடரில் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட தோனி 148 ரன்களையும், இலங்கைக்கு எதிராக 183 ரன்களையும் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார்.


பின்னர் டி20 உலகக் கோப்பையிலிருந்து முக்கிய வீரர்கள் விலக, தோனி கேப்டன் ஆனார். 2011-ல் ஒருநாள் போட்டிக்கான  உலகக் கோப்பையை வென்றார். அடுத்து அவர் தலைமையில்தான் இந்திய அணி அதிகளவில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் வீரரான தோனி, இந்தியாவில் கால் பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த மாதம் தொடங்க இருக்கும் ஐஎஸ்எல் போட்டியில் விளையாடும் சென்னை அணியில் முதலீடு செய்து இணை உரிமையாளராக ஆகியுள்ளார். தோல்வியோ, வெற்றியோ நிதானமாகச் செயல்பட்டால் தலைவனாகலாம் என்பதற்கு ‘மிஸ்டர் கூல் தோனி’ மிகச் சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment