Search This Blog

Saturday, November 20, 2010

நாள்தோறும் 240 கோடி!

பணம் என்று வந்தாலே பேராசை வந்துவிடும் என்பதால்தான் நமது முன்னோர்கள் துறவறத்தையும், எளிமையான வாழ்க்கை முறையையும் வற்புறுத்தி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் சிக்கனம், எளிமை, வசதி வாய்ப்புகளைப் புறக்கணிப்பது, அளவுக்கு அதிகமான வருமானத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படாது என்பது மட்டுமல்ல, சாத்தியமும் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. தனது நியாயமான வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது ஒருவழியில் சம்பாதிப்பது என்பது இன்றைய நடைமுறையில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படும் ஒன்றாகிவிட்டது.

இலவசமாகக் கிடைப்பது மனதுக்கு இன்பத்தை அளிப்பதுபோல, பரிசுகள், அன்பளிப்புகள் போன்றவை மகிழ்ச்சி தருவதுபோல, கையூட்டுப் பெறுவதும்கூடத் தவறில்லை என்கிற மனோநிலை அனேகமாக அரசு ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடமும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது என்பதுதான் எதார்த்த உண்மை. வரி ஏய்ப்பு பற்றிச் சொல்லவே வேண்டாம்.

வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அதற்கான வரி விகிதமும் அதிகரிக்க வேண்டும் என்றிருந்த முந்தைய அரசுகளின் கண்ணோட்டம், பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் கைவிடப்பட்டது. வருமானவரி மிகவும் அதிகமாக இருப்பதால்தான் பலரும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்றும், அதிகபட்ச வருமான வரி 30%-க்கு மேல் இல்லாமல் இருந்தால் எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும் தங்களது வருமானத்தை வெளிப்படுத்தி வருமான வரி செலுத்தி விடுவார்கள் என்றும், புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர்கள் வாதிட்டனர். வரி ஏய்ப்பை முற்றிலுமாக ஒழிக்கவும், கறுப்புப் பணமே இல்லாத பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும் உலக வங்கியின் சார்பில் இவர்கள் முன்வைத்த உத்திதான் இது.

ஆண்டு வருமானம்  5 லட்சம் உள்ளவனுக்கும்,  500 லட்சம் வருட வருமானம் உள்ளவனுக்கும் அதே 30% வருமான வரி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டியவர்களை எள்ளி நகையாடியது புதிய பொருளாதாரக் கொள்கை ஆதரவு கோஷ்டி. என்னவாயிற்று? 30% அதிகபட்ச வரி வரம்பால் பயன்பட்டது என்னவோ பன்னாட்டு நிறுவனங்களும், கோடிகளில் வருமானம் உள்ள பிரிவினரும்தானே தவிர, சாமான்யனுக்கும், அரசுக்கும் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வரி ஏய்ப்பும், கறுப்புப் பணமும் ஒழிந்ததாகவும் தெரியவில்லை.

மாத வருமானம் பெறும் மத்தியதரக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக வரி வலைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது, உண்மை. இவர்கள் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால் நேர்மையாக வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால், வருமான வரி வருவாய் அரசுக்கு அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மை. சரி, பெரு முதலாளிகளின், தொழில் நிறுவனங்களின் கறுப்புப் பணமும், வரி ஏய்ப்பும் இதனால் குறைந்திருக்கிறதா என்றால், இல்லை என்பதும்தானே உண்மை?

வரிவிகிதத்தைக் குறைப்பதால் வரி ஏய்ப்புக் குறைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பே தவறு என்பதற்கு, இவர்கள் முன்னுதாரணம் காட்டும் அமெரிக்காவையே எடுத்துக் கொள்வோம். அங்கேயும், 2% அல்லது 3% கலால் வரி உள்ள பொருள்களில் வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக ஆண்டுதோறும் அபராதம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்கிறதே தவிர குறையவில்லை. வியாபாரி என்பவர் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ, அதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முயற்சிப்பார் என்கிற அடிப்படை உண்மையைக்கூடப் புரிந்துகொள்ளாமல் ஆட்சியாளர்கள் செயல்படத் தொடங்கும்போது, வரி ஏய்ப்பும் கறுப்புப்பண நடமாட்டமும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் அரசுக்கு  1.8 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். ஆனால், திருட்டுத்தனமாக இந்தியாவிலிருந்து வெளியேறும் கறுப்புப் பணமும், லஞ்சப் பணமும், ஊழல் பணமும் எவ்வளவு தெரியுமா? நாள்தோறும்  240 கோடி இந்தியப் பணம் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?

1948-லிருந்து 2008 வரை முறையற்ற வகையில் சேர்த்த செல்வம் ஏறத்தாழ  213 பில்லியன் டாலர்கள் ( 9.7 லட்சம் கோடி) என்றும், அது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கிறது வாஷிங்டனிலிருந்து, நேர்மையான உலகப் பொருளாதார நடைமுறைகளுக்காகச் செயல்படும் ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் தேவ் கார் என்பவர் வெளியிட்டிருக்கும் அறிக்கைதான் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்களைத் தந்திருக்கிறது.

""இந்தியா சராசரியாக 19.3 பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் இழந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2004 முதல் இதன் வேகம் அதிகரித்திருக்கிறது. முறையான பொருளாதாரக் கொள்கைகளாலும், கடுமையான தடுப்பு நடவடிக்கைகளாலும் அரசு முறையற்ற செல்வம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தினாலே, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்கும். வறுமை ஒழிக்கப்பட்டு மிகப்பெரிய முன்னேற்றம் காண முடியும்'' என்கிறது அந்த அறிக்கை.

வெளிநாட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள், முதலாளிகள், சமூக விரோதிகள் மற்றும் நிழல் மனிதர்களின் பணத்தின் மதிப்பு சுமார்  640 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் மொத்த கறுப்புப் பணத்தில் 72% பார்த்தும் பார்க்காமலும் இருக்கும் அரசும், ஆட்சியாளர்களும். கையூட்டுப் பெற்று கறுப்புப் பணத்தை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கும் அதிகார வர்க்கம். இதன் விளைவுதான், வரி ஏய்ப்பின் மூலமும், லஞ்ச, ஊழல் மூலமும், சமூக விரோத நடவடிக்கைகள் மூலமும் கணக்கில் வராத அளவுக்கு அதிகமான பணத்தைச் சம்பாதித்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் போக்கு அதிகரித்து வருவது.

இந்தியாவைவிட்டு வெளியேறி ஸ்விஸ் வங்கிகளிலும், கிழக்குக் கரிபியன் பகுதியான ஆங்கைலானிலும், மத்திய அமெரிக்காவிலுள்ள பெலைசிலும், கேமென் தீவுகளிலும், பனாமாவிலும் ரகசியமாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் ஒவ்வோர் இந்தியனுக்கும் சொந்தமான பணம். இங்கே கஞ்சிக்கு வழியில்லாத கூட்டம் தெருவோரம் தூங்குகிறது. ஆனால், பல லட்சம் கோடிகள் அன்னிய நாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ஒரு பிரச்னையாகக்கூடக் கருதாமல், நாம் இனியும் எத்தனை காலம் மௌனம் சாதிக்கப் போகிறோம்?         

தினமணி  

No comments:

Post a Comment