Search This Blog

Saturday, November 13, 2010

ராஜா கில்லி!

 ஒரு விளையாட்டுப் போட்டியைக் காரண மாக வைத்து நடத்திய கரன்சிக் கொள்முதல் தொடர்பான காமன்வெல்த் ஊழல் ஒரு புறம்... நாட்டுக்காக உயிரைக் கொடுத்த கார்கில் யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடத்திய விவகாரம் அடுத்தது... மூன்றாவது, ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் டெண்டர் வழங்கியது தொடர்பானது.

முன் சொன்ன இரண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைகள் சம்பந்தப்பட்டவை. மூன்றாவது, தி.மு.க-வை குற்றம்சாட்டுவது. காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக சுரேஷ் கல்மாடிக்கு கல்தா தரப்பட்டுவிட்டது. கார்கில் யுத்த வீடுகள் தொடர்பான புகாரில், மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவானின் பதவி பறிபோயிருக்கிறது. மிச்சம் இருப்பது, ஸ்பெக்ட்ரம் மட்டும்தான். 'இந்தத் துறையின் அமைச்சரான ஆ.ராசாவின் தலை தப்புமா?'  


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க-வை மட்டுமல்ல... ஆளும் காங்கிரஸ் கட்சியையும் மற்ற எதிர்க்கட்சிகள் நம்பத் தயாராக இல்லை. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம், மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை (சி.ஏ.ஜி.) அதிகாரி வினோத் ராய், கடந்த புதன்கிழமை அளித்திருப்பதுதான் இந்த திடீர் பூகம்பத்துக்குக் காரணம். 

''அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, 2001-ம் ஆண்டுக்கான விலை மதிப்பின் அடிப்படையில் 2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை செய்திருக்கிறார்கள்!'' என்று குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை. 

'ஒரு சில நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்காக நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசனைகளை மத்திய அமைச்சர் ஆ.ராசா புறக் கணித்து, தன்னிச்சையாக முடிவெடுத்தார்!' என்றும் இந்த அறிக்கை சொல்கிறது.

''அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்!'' என்பதுதான் இவர்களின் ஒரு வரிக் கோரிக்கை. ''அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகளால்கூட இந்தப் புகாரை நேர்மையாக விசாரிக்க முடியாது. அனைத்துக் கட்சியினரும் இடம்பெறும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவான ஜெ.பி.சி-யின் விசாரணை தேவை!'' என எதிர் காட்சிகள் சொல்கின்றன.

வருகிற 15 மற்றும் 18 ஆகிய தேதிகள், மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சிக்கும் முக்கியமான தேதிகள்..!

பிரதமர்  14-ம் தேதி டெல்லி திரும்புகிறார். இதனால் 15-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இது வரை இந்திய சரித்திரத்தில் இவ்வளவு பெரிய தொகையிலான முறைகேடு ஏற்பட்டதில்லை. 

''காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், ஆ.ராசா மட்டும் ஏன் ராஜினாமா செய்யவில்லை?'' என்று ஒரு நிருபர் கேட்டபோது, ''கூட்டணி தர்மம்!'' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி சொன்னார். இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதுதான் இன்றைய பேச்சு!

''ராசாவின் ராஜினாமாவை இந்த சனி, ஞாயிறுக்குள் உறுதி செய்துவிடும் காங்கிரஸ்!'' என்பதுதான் டெல்லியில் பலமான பேச்சாக இருக்கிறது. ''ராசாவின் ராஜினாமா மூலமாகத்தான் நாடாளுமன்றத்தை நடத்த முடியும், சுப்ரீம் கோர்ட்டை எதிர்கொள்ள முடியும், சி.பி.ஐ-யின் தலைகுனிவை தடுக்க முடியும்...'' என்று காங்கிரஸ் எம்.பி-க்கள்  பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  இவர்களுக்கு தி.மு.க. என்றாலே ஆகாது. 17 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு 7 மத்திய மந்திரிகளை வாங்கிய தி.மு.க. மீது இவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபத்துக்குக் கணக்குத் தீர்க்கும் காலமாக இதை வடஇந்திய எம்.பி-க்கள் நினைக்கிறார்கள்.

No comments:

Post a Comment