Search This Blog

Wednesday, November 03, 2010

அமெரிக்காவை வீறிடவைக்கும் விக்கிலீக்!

அமெரிக்க ராணுவத்தின் அராஜக தர்பாரைத் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திப் பதறவைக்கிறது, லண்டனின் 'விக்கிலீக்' இணையதளம். லேட்டஸ்ட்டாக, கடந்த அக்டோபர் 22-ம் தேதி, இந்த இணையதளம்... 2004-ம் ஆண்டு முதல் 2009 வரையில், ஈராக் போர் தொடர்பான மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 831 நேரடி ராணுவக் கள அறிக்கைகளை வெளியிட்டது. இது அமெரிக்காவை மட்டுமல்ல, உலகையே அதிரவைத்தது! 

ஈராக் போர்க் களத்தில்... தாக்குதல் நடந்த இடம், எந்த வகையான தாக்குதல், யார் நடத்தியது, எத்தனை பேர் உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் எத்தனை, அதில் குழந்தைகள் எத்தனை எனப் பலவற்றையும் பகிரங்கப்படுத்தி இருக்கிறது விக்கிலீக் இணையதளம். கடந்த ஜூலை மாதத்தில் 'ஆப்கானிஸ்தான் வார் டைரி' என்ற பெயரில், ஆப்கான் போர் அறிக்கைகளை இந்தத் தளம் வெளியிட்டு அமெரிக்காவுக்கு முதல் அதிர்ச்சியை அளித்தது. இப்போது... ஈராக் தகவல்கள்! இது மாதிரியான கொடூரங்கள் நடந்தன என்று மனித உரிமையாளர்கள் பொதுவாகச் சொல்லிப் பதறுவார்களே தவிர, அதற்கான ஆதாரங்களை வெளியே கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல! 

அப்படியிருக்க, ''உலக ராணுவ வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக இப்படி பெரும் ரகசியம் வெளியாகி இருக்கிறது...'' என்று இதைச் சொல் கிறார்கள்.

விக்கிலீக் வெளிப்படுத்தி வரும் முக்கியத் தகவல்கள் இவைதான்...

ஈராக் போரின்போது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டனர். இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள் (இவர்களை கலகக்காரர்கள் என்கிறது அமெரிக்கா!). ஈராக் படையைச் சேர்ந்தவர்கள் 15 ஆயிரத்து 196 பேர். கூட்டுப் படை களைச் சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 771 பேர். மிகக் கொடுமையான சித்ரவதைகள் மூலமாக இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கக் கூட்டுப் படைகளால், ஈராக்கியர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட ஆயிரக்கணக்கான சித்ரவதை, பலாத்காரம் மற்றும் கொலைகளை அமெரிக்கா மூடி மறைத்ததும் தெரிய வந்திருக்கிறது.
முன்னாள் அதிபர் புஷ் பதவியில் இருந்த வரையில், 'ஈராக்கில் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள்பற்றிய எந்தக் கணக்கும் இல்லை' என்றே கூறிவந்தது. ஆனால், 'ஈராக் பாடி கவுன்ட்' என்ற அமைப்பு, 'ஒரு லட்சத்து 22 ஆயிரம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்...' என்று சொல்லி வந்தது. கிட்டத்தட்ட அந்தக் கணக்கு விக்கிலீக் ஆவணங்களிலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும், '2007-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பாக்தாத் நகரில் ஹெலிகாப்டர் தாக்குதலில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். சரண் அடைய வந்த நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவர் குடும்பத்தினரை செக் போஸ்ட் அருகில் வைத்து சித்ரவதை செய்து கொன்றனர். இதனால், 'போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக, அமெரிக்காவை சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்!' என்ற கருத்து, பல நாடுகளில் இருந்து வலுப்பெற்று வருகிறது. தவிர, ஈராக் போராளிகளுக்கு ஈரான் நாடும் ராக்கெட் லாஞ்சர், கார் குண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுத உதவிகள் அளித்ததும் தெரியவந்துள்ளது. 

அமெரிக்க ராணுவ ரகசியத்தை பொட்டென்று போட்டு உடைத் ததால் கோபப்படும் அமெரிக்கா, இந்த இணையதள நிறுவனர் ஜூலியனை வலை வீசித் தேடி வருகிறது. எந்த நேரத்திலும் அமெரிக்காவால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தால் அவர், மாறுவேடத்தில் சுற்றி வருகிறார். கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், இருக்கும் இடம் தெரிந்துவிடும் என்பதால், நண்பர்களிடம் பணமாக வாங்கித்தான் செலவு செய்கிறாராம்!
அமெரிக்காவுக்கு உதவியவர்களுக்கும், ஜூலியனால் வேறு விதமான மண்டையிடிகள் முளைத்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களையும், ஈராக் அரசையும் தூக்கி எறிய அமெரிக்காவுக்கு உதவியவர்களின் உயிர், எந்த நேரத்தில் போகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. காரணம், சமீபத்தில் வெளியான ஆப்கானிஸ்தான் போர் குறித்த விக்கிலீக் ஆதாரங்கள், அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளுக்கு உதவிய, 1,800 பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளது. அந்தப் பெயர்களைக் கண்டறிந்து, 'அவர்களில் யார் யார் எல்லாம் அமெரிக்காவுக்கு உதவினார்கள்' என்பதை சல்லடை போட்டுத் தேடும் வேலையில் இறங்கி இருக்கும் தாலிபன், இதற்காக 9 பேர்கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. ''அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதை தாலிபன் நீதிமன்றம் முடிவு செய்யும்!'' என்று அதன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அறிவித்து உள்ளார். 

அதேபோல், ஈராக் போரில் அமெரிக்காவுக்கு உதவியவர்களின் பட்டியலை அல்கொய்தா ரெடி செய்து, தண்டனை தர முடிவெடுத்து உள்ளதாம். இதனால், ஈராக்கைவிட்டு அமெரிக்கா முழுமையாக வெளியேறினால், 'தங்களது நிலை என்ன ஆகுமோ?' என்ற கொலை பயத்தில் உள்ளனர் பல அமெரிக்க ஆதரவு ஈராக்கியர்கள். 

இந்த விஷயத்தால் பெரும் தலைவலிக்கு ஆளாகி இருக்கும் அமெரிக்கா, விக்கிலீக் வெளியிட்டுள்ள ஆவணங்களை வரிக்கு வரி படித்து, அதில் தங்களுக்கு உதவியதாக வெளியாகி உள்ள 200-க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களின் பெயர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறதாம். சுருக்கமாகச் சொன்னால், உலக உருண்டைய ஒரு சுற்று உலுக்கிப் பார்த்துவிட்டது இந்த துப்பறியும் இணையதளம்!

3 comments:

  1. dai gopi... nee un blog-la kavithai-nu solli podura mokkai ellam vikadanla irunthu than copy adikuriya???

    ReplyDelete