நல்ல விளம்பர உத்தி தான் ஒரு படத்தை கடை கோடி ரசிகனுடன் கொண்டு போய் விடும். எப்போ இந்த படத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் சொன்னோரோ அப்போவே இந்த படத்தின் மேல் லேசாக கவனம் திரும்பியது. அப்புறம் அனைத்து முன்னணி தமிழ் பட இயக்குனர்கள் மைனா  மைனா என கூறி      எதிர்பார்பை அதிகரித்தார்கள் .


காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா.


 

மேக்கப் இல்லாத முகங்கள், புதுமையான லொகேஷன், வித்தியாசம் என்கிற வார்த்தைக்கு மரியாதை செய்கிற வகையில் ஒரு க்ளைமாக்ஸ் என மைனா தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் முக்கியமான படைப்பாக விளங்குகிறது. 

தீபாவளிக்கு முன் தினம்… போலிஸ் அதிகாரிகள் பாஸ்கர், ராமைய்யா இருவரும் தப்பி ஓடிய கைதி சுருளியை தேடி தேனி அருகில் மூணாறு மலை அடிவாரத்தில் இருக்கும் குரங்கணி மலைக் கிராமத்துக்கு போகிறார்கள். தப்பி ஓடிய சுருளி யாரு?


கதைச்சுருக்கம்

கதை பெரியகுளம் பக்கத்தில் உள்ள  குரங்குனி என்ற மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கிறது. மனைவியையும் சிறுவயது மகளையும் (நாயகி) ஒரு குடிகார கணவன் கைவிட்டுவிட அவர்களது தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான் ஒரு சின்னப்பையன்--
சுருளி (நாயகன்). 

மைனாவும் சுருளியும் காதல் பறவைகளாய் குரங்கணி மலையில் வளம் வருகிறார்கள். மைனாவுக்கு கல்யாண வயசு வருகிறது. மைனாவும் சுருளியும் காதலிக்கிற விஷயம் மைனாவின் அம்மாவிற்கு தெரியவர, மைனாவிற்கு வேறொரு மாப்பிளை பார்க்கிறார்.சுருளியும் பணியாரக் கடைக்காரி மைனாவின் அம்மாவும் முடியைப்பிடித்து சண்டைப் போடும் அளவற்கு பெரிய ரகளை நடக்கிறது. 

இதனை  காரணம் கட்டி மைனாவின் அம்மா போலீஸ்ல குற்ற பதிவு செய்து  சுருளி சிறையில் அடைக்கப்படுகிறார். மைனாவிற்கு கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க, செய்தி அறிந்ததும் சுருளி சிறையில் இருந்து தப்பி வருகிறார். தலை தீபாவளி கூட கொண்டாடாத கடுப்பில் ஜெயில் அதிகாரி பாஸ்கரும், ராமையாவும் சுருளியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் குரங்கணி கிராமத்திற்கு போக மலை ஏறுகிறார்கள். 

ரத்திரியாகிவிட மலையில் வழி தெரியாமல் அலைந்து திரிந்து பல சிரமங்களுடன் ஒரு வழியாக அடுத்த நாள் காலை சுருளியை கைபற்றுகிறது போலிஸ். சுருளி போலீஸ் உடன்  வரும்போது மைனாவும் சுருளியுடன் வந்துவிடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சுருளி ஜெயிலுக்கு போய்விடுவார், அப்போ மைனா? இந்த இடத்தில் இடைவேளை…


மீண்டும் மலை பாதையில் சென்று கொண்டு இருக்கையில் யானைகள் இவர்களை துரத்துகிறது. இதனால்  பாதை தெரியாமல் போய்விடுகிறார்கள், ஒரு கட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் பாஸ்கரையும் ராமையாவையும் பஸ் விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் சுருளி. உயிரைக் காப்பாற்றிய அக்யூஸ்ட் சுருளி போலீஸ்க்கு  கடவுளாக தெரிகிறார். 

சுருளி விடுதலையானதும் தானே கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறார் போலீஸ் பாஸ்கர். நிறைவான சந்தோஷத்தோடு தேனி வந்தடைய… ஒரு கொடுமையான க்ளைமாக்ஸ்! நீங்கள் எதிர்பார்ப்பது எதுவுவே கிளைமாக்ஸாக இருக்க முடியாது.

படத்தின் ஒரு காட்சிக் கூட காரணம் இல்லாமல் காட்டப் படவில்லை.

சுருளியாக வரும் வித்தார்த், மைனாவாக வரும் அமலா பால் என எல்லோரும் கதா பாத்திரமாகவே வாழ்ந்திருகிறார்கள். ராமைய்யாவாக வரும் தம்பி ராமைய்யாவிற்கு ஒரு தனி பாராட்டு. காமெடி, வில்லத்தனம், கண்ணீர் என எல்லாம் கலந்த குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருகிறார். இவர் தான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை எடுத்தவர் என இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்.


ஜிங்கி ஜிங்கி... என்று ஆரம்பிக்கும் பாடல்  செம குத்து .அதற்க்கு அடுத்து வரும் அந்த பஸ் விபத்தும் அருமை ஆன கவிதை. நெகட்டிவான க்ளைமாக்ஸை தவிர்த்து இருக்கலாம். திரைக்கதையை காமெடி கலந்து விறுவிறுப்பாகவும், காதலை மெதுவாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

என்னை பொறுத்தவரை முதல் பாதி மிக மெதுவாக செல்கிறது. முதல் நாற்பது நிமிடம் ரொம்ப நாடகத்தனம். ரெண்டாம் பாதி இழுத்து பிடித்து தம்பி ராமையா கொண்டு செல்கிறார். 

மைனா - ஒரு தடவை பார்க்கலாம், எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால்...