Search This Blog

Wednesday, November 03, 2010

ஒபாமாவை வரவேற்கும் இந்தியா!

காமன் வெல்த் போட்டிகளுக்கு அடுத்து, இப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை 
வரவேற்கும் பரபரப்பில் இருக்கிறது இந்தியா!

நவம்பர் 6-ம் தேதி இந்தியா வரும் ஒபாமாவின் முதல் விசிட்... மும்பை!
மும்பையில் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்று, 2008-ல் தீவிரவாதிகளால் தாக்கு தலுக்கு உள்ளான இடங்களையும் பார்த்துவிட்டு, பிறகே டெல்லிக்குப் போகிறார் ஒபாமா.

டெல்லி சர்தார் பட்டேல் மார்க்கில் உள்ள இரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் 
ஒபாமா மற்றும் அவரது குழுவுக்காக இப்போதே ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில், அதிபர் தங்கப்போவது மௌர்யா ஷெராட்டன் ஹோட்டலில். இந்த ஹோட்டலில் உள்ள மொத்த அறைகளும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் வந்துவிட்டன. அந்த நாட்டின் எஃப்.பி.ஐ. மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லிக்கும் மும்பைக்கும் முன்னரே வந்துவிட்டனர். ஒபாமா தங்கும் நவம்பர் 7, 8 தேதிகளில் இந்த ஹோட்டலுக்குள் மற்ற விருந்தினர்களுக்கோ, உள்ளூர் அதிகாரிகளுக்கோ, டெல்லி போலீஸாருக்கோகூட அனுமதி இல்லை!


18 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், 70-க்கும் மேற்பட்ட கார்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. இவை, மும்பையிலும் டெல்லியிலும் தயாராக இருக்கின்றன. அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான பிரத்தியேக சாட்டிலைட் ஒன்றும் வாஷிங்டனில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு உள்ளதாம்.

''இந்திய - அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பங்கேற்கிறார். அமெரிக்கத் தொழில் அதிபர்களைத் தன்னோடு அழைத்துவரும் ஒபாமா, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்வதில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, அந்தந்தத் துறைகளில் அமெரிக்கத் தொழில் அதிபர்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டு உள்ளார். 

அமெரிக்கத் தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் அவரது பயணத்தின் முக்கிய நோக்கம்.

இதே மாதிரி, இந்தியத் தொழில் அதிபர்களும் குறிப்பாக ஐ.டி. நிறுவனத்தினரும், ஒபாமா விஜயத்தைப் பயன்படுத்தி, பலனடையும் முயற்சியில் உள்ளனர். ஐ.டி. துறையில் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்குத் தரப்படும் வேலைகளை கட் செய்ய அமெரிக்கா நினைக்கிறது. இதனால், பெருமளவில் இந்தியர்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்த சில முக்கியமான விவரங்களை இந்தியத் தொழில் அதிபர்கள் அமெரிக்க அதிபருக்குத் தெளிவுபடுத்தும் திட்டத்தோடு இருக்கின்றனர். இது தவிர அரசாங்கரீதியில், இந்தியாவுக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் சப்ளை செய்வது மற்றும் ரயில்வே இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது போன்ற விஷயங்களும் நடக்கும்.

 மிக முக்கியமான அணுசக்தி விபத்துப் பாதுகாப்பு சட்டங்கள் போன்ற வற்றிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன. அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பிரச்னைகளே... ஒபாமாவுக்கு இந்தியாவோடு இருக்கும் முக்கிய அஜெண்டா!'' 

ஒபாமாவின் டெல்லி நிகழ்ச்சிகளில் முக்கியமானது, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இருப்பது. இதையட்டி, நாடாளுமன்றத்தின் மைய அவையில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி சுமார் 20 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசுவார். 'கோல்டன் புக்'கில் கையெழுத்திடுவார். பின்னர், எம்.பி-க்களுடன் கை குலுக்குவார். இது அதிகபட்சமாக ஒரு மணி நேர நிகழ்ச்சி என்றாலும், அவரது வருகையை ஒட்டி பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக வண்ணம் பூசி, மேஜை - நாற்காலிகளை சரிசெய்து, புல்லட் ஃபுரூப் கண்ணாடிக் கூண்டுகள் ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகின்றன.

பில் கிளின்ட்டன் 2000-ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றினார். பின்னர் 2006-ல் ஜார்ஜ் புஷ் வந்தபோது, நம் நாடாளுமன்றத்தில் பேசவைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. ஆனால், இடதுசாரிகளின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இந்த முறையோ ஒபாமாவின் உரையின்போது, இடது சாரிகளும் பங்கேற்கின்றனர்.

ஒபாமா விசிட்டில் வேறு எந்த ஊருக்கும் டூர் இல்லை. வெளி நாட்டுத் தலைவர்கள் தவறாமல் விசிட் செய்யும் தாஜ்மஹாலைக்கூட அவர் பார்க்கப் போவதில்லை யாம்!

ஒபாமாவின் இந்த இந்திய விஜயத்தை வைத்து, பாகிஸ் தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் சில எதிர்பார்ப்புகளில் இருந்தனர். ஒபாமாவின் ஆதரவு இந்த விசிட்டின்போது தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், இந்த விவகாரங்கள் பற்றி எதுவும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்பதே இப்போதைய தகவல். 

No comments:

Post a Comment