Search This Blog

Monday, November 22, 2010

ராசா இப்போ..பரிவாரங்கள் எப்போ? - ஓ பக்கங்கள்

கடைசியில் ஆ.ராசாவைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டியதாகிவிட்டது. ஒரு வருடம் முன்னாலேயே செய்திருக்க வேண்டியதை சோனியாவும் மன்மோகன்சிங்கும் தாமதமாகச் செய்திருக்கிறார்கள். இப்போது செய்ய முடிந்ததற்குக் காரணம் இன்னும் ஆறு மாதங்களில் வரப் போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உறவைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருப்பதால், இப்போது அது பணியவேண்டியதாயிற்று. இல்லையென்றால், தி.மு.க நிச்சயம் ராசாவை ராஜினாமா செய்யவைத்திருக்காது. காங்கிரஸ் தலைமையும் கடுமையாக நடந்துகொண்டிருக்காது.

ராசாவை நீக்க, நிச்சயம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு ஒரு காரணம். ஆட்சியை தி.மு.க கவிழ்த்துவிடும் என்ற பயம் இல்லாமல் நீக்குங்கள்; நிபந்தனையற்ற ஆதரவை நான் தருகிறேன் என்று ஜெயலலிதா அறிவித்தது நிச்சயமாக காங்கிரசின் கையை பலப்படுத்தியது. நீ இல்லாவிட்டால் அவர் என்ற சாத்தியம் இருக்கும்போது கருணாநிதியிடம் அடித்துச் சொல்லும் தைரியம் காங்கிரஸுக்கு கிடைத்தது. 

இதனால் தேர்தலில் அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் அணி சேர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி அதிகரித்துவிட்டது. தேர்தலில் அதிக இடங்கள், ஆட்சி அமைத்தால், எத்தனை மந்திரி பதவிகள், துணை முதல்வர் பதவி உண்டா இல்லையா என்பதையெல்லாம் அடித்துப் பேசி வாங்கும் சக்தி அதிகமாகியிருக்கிறது. காங்கிரஸ் விரும்பும் அளவை தி.மு.க தர மறுத்தால், நிச்சய்ம் நஷ்டம் தி.மு.கவுக்குத்தான். ஏனென்றால் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். காங்கிரஸ் ஜெ அணிக்குச் செல்லுமானால், கூடவே நிச்சயம் பா.ம.கவும் சென்று விடும். விஜய்காந்தும் அங்கே செல்வார். பதிலுக்கு வைகோவும் இடதுசாரிகளும் தி.மு.கவுக்கு சென்றாலும் கூட, எண்ணிக்கை செல்வாக்கு பலம் காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் இருக்கும். எனவே மறுபடி ஆட்சியைப் பிடிக்க ஜெயலலிதாவுக்குக் காங்கிரஸ் தேவைப்படும் அதே அளவுக்குக் கருணாநிதிக்கும் தன் ஆட்சியை மறுபடியும் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவின் அறிக்கையால் நிகர லாபம் காங்கிரசுக்குத்தான். அதன் அடையாளம்தான் ஆ.ராசாவுக்குக் கொடுத்த கல்தா.

ஸ்பெக்ட்ரம் 2ஜி முறைகேட்டில் ராசா செய்ததாக கணக்குத் தணிக்கைத் தலைவர் அறிக்கையில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம். ப்ழைய முறைப்படியே முதலில் விண்னப்பிப்போருக்கு ஒதுக்கிடு என்ற அடிப்படையைப் பின்பற்றியது தவறு. ஏனென்றால் ஸ்பெக்ட்ரம் உரிமத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் பழைய விலைக்கே விற்றிருக்கிறார். வேண்டிய கம்பெனிகளுக்குக் கொடுபபதற்காக, விண்ணப்ப தேதியை திடீரென முன்னதாக மாற்றியிருக்கிறார். இப்படிச் செய்யாமல் ஏலத்தில் விட்டிருந்தால் , அரசுக்கு பல கோடி ரூபாய்கள் லாபம் கூடுதலாக கிடைத்திருக்கும். 

பழைய விதிகளை அப்படியே பின்பற்றினேன். அதிலென்ன தவறு என்பது ராசா, கருணாநிதி வாதம். நிர்வாகத்தில் செய்பவை செய்யத் தவறுபவை இரண்டுமே முக்கியமானவை. செய்யத் தவறிய குற்றம் இது. அதனால் பெரும் நஷ்டம் என்பது வெறும் யூகம்தான் என்பது ராசா-கருணாநிதியின் இரண்டாவது வாதம்.

இதுவும் சரியல்ல. ஏனென்றால் உரிமத்தை 1651 கோடி ரூபாய்களுக்கு ( சுமார் 40 கோடி டாலர்) அரசிடம் வாங்கிய கம்பெனிகள் தங்கள் பங்குகளை வெளியாருக்கு விற்றிருக்கின்றன. ஸ்வான் 45 சத பங்குகளை 90 கோடி டாலருக்கும், யூனிடெக் 60 சதப் பங்குகளை 136 கோடி டாலருக்கும், எஸ்டெல் 49 சதப் பங்குகளை 22.5 கோடி டாலருக்கும் டாட்டா 26 சதப் பங்குகளை 27 கோடி டாலருக்கும் விற்றிருக்கின்றன. அதாவது 40 கோடி டாலருக்கு வாங்கியதைப் பயன்படுத்தி 275 கோடி டாலருக்குப் பங்கு விற்றிருக்கிறார்கள். ஏழு மடங்கு லாபம் அவர்களுக்கு. அது அரசுக்கு நஷ்டம். தணிக்கைக் குழு வெவ்வேறு மதிப்பீடுகளின்படி நஷ்டம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என்று கூறுகிறது. 

அந்தக் கம்பெனிகளுக்கு லாபம் செய்து கொடுத்ததற்கு, பதிலுக்கு அதில் எவ்வளவு பங்கு அரசியல்வாதிகளுக்குக் கிடைத்தது என்பதுதான் முக்கியமான கேள்வி. இவ்வளவு கோடி ரூபாய்கள் சமபந்தப்படும் ஒரு விஷயத்தை ராசா தனியே தன்னந்தனியே செய்ய வாய்ப்பில்லை. நிச்ச்யம் கட்சியும் தலைமையும் கட்சிக்குள் ராசாவின் புரவலர்களும் சம்பந்தப்படாமல் இருக்க முடியாது. அந்த சம்பந்தம் இருப்பதனால்தான் கடைசி நிமிடம் வரை ராசா குற்றமற்றவர் என்றுகருணாநிதியும் கனிமொழியும் மீடியாவிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் தில்லுமுல்லுவில் லாபமடைந்தவர்கள் தி.முகவில் உள்ளவர்கள் மட்டுமா, அல்லது கூட்டணிக்கட்சியான காங்கிரசிலும் உண்டா எனப்தெல்லாம் இனிமேல்தான் துருவப்படவேண்டும்.

முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்படவிலலையென்றால் ராசாவை எப்போதோ பலி கொடுத்திருக்கலாம். ஒரே ஒரு டெலிபோன் பேச்சுக்காக தமிழகத்தில் பூங்கோதையை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார் கருணாநிதி. தன் உறவினர் மீதான லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் டெலிபோனில் பேசியதுதான் பூங்கோதையின் குற்றம். 

ராசா தொடர்பான இரண்டு டெலிபோன் பேச்சுகள் ஏழு மாதங்கள் முன்னால் மே மாதத்தில் அம்பலமாகின. இரண்டும் சி.பி.ஐ பஅதிவு செய்த பேச்சுகள். டெல்லியில் அதிகாரமையங்களுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் தொடர்புகொண்டு காரியமாற்றும் பிரபல தரகரான நீரா ராடியா என்ற பெண்மணியுடன் கனிமொழியும் ராசாவும் பேசிய பேச்சுகள் இவை. ராடியாவை சி.பி.ஐ கண்காணித்து வந்தது. ஆகஸ்ட் 2008 முதல் 300 நாட்களுக்கு அவர் போனை ஒட்டுக் கேட்டது.

ஹெட்லைன்ஸ் டுடே சேனல் அம்பலப்படுத்திய பேச்சுகளில் சில பகுதிகள் மட்டும் 

இதோ:
பேச்சு 1. கனிமொழியுடன் – மே 21, 2009, காலை 8:41
கனிமொழி : ஹலோ
ராடியா : வேலை இன்னும் உறுதிப்படவில்லை. பிரதமர் இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான் இருக்கிறார்.
கனிமொழி : தொலைத்தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் ஏதாவது மாற்றங்கள் . . .
ராடியா : என்ன?
கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் மீடியாவில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார். (‘அவர்’ என்பது தயாநிதி மாறன்தான் !)

பேச்சு இரண்டு: மே 24, 2009 காலை: 11:05
ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?
ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.
ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?
ராடியா : தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.
ராசா : இல்லை, இருவருமே நுழையலாம்.
ராடியா : இருவருமா? பாலுவால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.
ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே .
ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணரமுடிகிறது . . .
ராசா : பொறுத்திருந்து பார்ப்போம். நாம் போராடிப் பார்ப்போம்.

இந்த இரண்டு டேப்களுக்கு இன்றளவும் பிரதமர் முதல் கருணாநிதி வரை விளக்கம் தரவில்லை. போன் குரல்கள் எங்களுடையதல்ல என்றால் டெஹல்கா விவகாரம் போல கோர்ட்டுக்குப் போய் டேப்பை சோதனையிட்டு நிரூபிக்க சேனல் தயாராக இருந்தது. இப்படி ஒரு டேப்பில் ஜெயலலிதா சிக்கியிருந்தால், கருணாநிதி வானத்துக்கும் பூமிக்குமாக எம்பிக் குதித்து மாபெரும் மீடியா தாண்டவமே ஆடியிருப்பார்.

பூங்கோதைக்கு ஒரு நீதி; ராசாவுக்கு இன்னொரு நீதி என்று கருணாநிதி நடந்துகொண்டது ஏன்? ராசா மீதான சி.பி.ஐ விசாரணை ஏன் ஒரு வருடமாகியும் தாமதம், என்று உச்ச நீதி மன்றம் கடிந்துகொண்டபின்னரும் அவர் ராசாவை ஏன் விலகச் செய்யவில்லை?

அரசியல் சட்டப்படி சுயேச்சையான அமைப்பாக இருக்கும் கணக்குத் தணிக்கை அதிகாரி பற்றி கருனாநிதி அடித்த கமெண்ட் படு கேவலமானது. பிரதமர், அமைச்சர்கள் பத்தியெல்லாம் அவங்க எப்பிடி ரிப்போர்ட் எழுதறாங்கன்னு எங்களுக்குத் தெரியும். என்றார். இவரேதான் 1989ல் ஆடிட்டர் ரிப்போர்ட்டை தெருத்தெருவாக எடுத்துக் கொண்டு போய் பேசி இன்றைய நண்பர் சோனியாவின் கணவர் ராஜீவ் காந்தி ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் செய்ததாக கடும் பிரசாரம் செய்தார். அதன் பயனாகத்தான் தேசிய முன்னணி ஆட்சி ஏற்பட்டு மத்தியில் மந்திரி பதவி அடையும் முதல் வாய்ப்பு தி.மு.கவுக்கு வந்தது. ராஜீவுக்கு எதிராக ஆடிட்டர் ரிப்போர்ட்டை நம்பி பிரசாரம் செய்ததற்கு இப்போது சோனியாவிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்பாரா ?

ராசாவின் விலகலுக்கு இப்போது சொல்லியிருக்கும் காரணம்தான் சூப்பர் நகைச்சுவை. இந்த விவகாரத்தால் சில எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்குகிறார்களாம். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ராஜினாமாவாம். அவையை முடக்குபவர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்றால் அதை எதிர்க்காமல் அடங்கிப் போவது எப்படி தீர்வாகும் ? இது போல ஒவ்வொரு முறையும் ஒரு சிலர் அவையை முடக்கினால் இதே போல ராஜினாமாக்கள் செய்வார்களா? குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வாதாடுகிறார் கருணாநிதி.

மக்களைப் பொறுத்தமட்டில் ராசாவின் நீக்கம் தீர்வல்ல. இது ஓர் ஆரம்பமாக மட்டுமே இருக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் லாபமடைந்த ராசாவின் கூட்டாளிகள் யார் யார் என்பது அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் எதிர்கால அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் பயம் இருக்கும்.இல்லாவிட்டால் ராசா ராஜினாமா ஊழலை அமுக்க நடந்த உத்தியாக முடிந்துவிடும். 

இந்த வாரப் பூச்செண்டு
பல லட்சம் பட்டதாரிகளும் ஆசிரியர்க்ளும் அலட்சியமாக இருக்கும்போது, சமூகப் பொறுப்புடன் தங்களை மேலவை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டிருக்கும் தமிழகப் பட்டதாரிகள் 3 லட்சத்து 11,681 பேருக்கும் ஆசிரியர்கள் 72 ஆயிரம் பேருக்கும் இ.வா.பூ.

கல்கி 20.11.2010

2 comments:

  1. Ivanukku yaru machi gnani-nu peru vachathu... ivane vachikitana..??!!! yenda abdul kalam kooda avaru oru gnani-nu solrathu illa...ivanunga appappo cinema review eluthura pasanga machan...

    ReplyDelete
  2. Machi, he is some what differ from others doi

    ReplyDelete