Search This Blog

Wednesday, November 17, 2010

ஆங் சான் சூகி...

உலகிலேயே அரசியல் காரணங்களுக்காக அதிக நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி ஆங் சான் சூ கி! புரட்சித் தலைவியாக வீட்டுச் சிறையில் இருந்த இவரை, ஒருவழியாக விடுவித்திருக்கிறது மியான்மார் அரசு. 

சூ கியின் தந்தை ஆங் சான்தான், பர்மாவை பிரிட்டிஷ் அரசிடமிருந்து மீட்பதற்கான 'மாடர்ன் பர்மிய ஆர்மி' என்ற ராணுவ அமைப்பு உருவாகக் காரண மானவர். இவர் பின்னர்  சதியால் கொல்லப்பட்டார். அப்போது சூ கியின் வயது இரண்டு. பிற்பாடு இவருடைய இரண்டு அண்ணன்களில் ஒருவர் இன்யா ஏரியில் மூழ்கி இறந்துவிட, ஒரு அண்ணன் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார்.

புதிய பர்மிய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் புள்ளியாக இவருடைய அம்மா கின் கி உருவெடுக்க... பிறகு, இந்தியா, நேபாள நாடுகளுக்கான பர்மியத் தூதராகவும் நியமிக்கப்பட்டார். அம்மாவோடு சேர்ந்து இருந்தபோது இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக பல ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தார் சூ கி. 

உடல் நலம் மிகவும் குன்றிய தன் தாயைப் பார்ப்பதற்காக 1988-ல் தன் தாய் நாடான மியான்மாருக்கு திரும்பியபோதுதான், பொது வாழ்க்கைப் போராட்டம் இவரை உள்ளே இழுத்தது. அந்த சமயம் பார்த்து நாட்டில் எதிர்பாராத வரலாற்று சம்பவங்கள் நடந்தன. 1988 ஆகஸ்ட் 8-ம் தேதி ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கோரிக்கையுடன் நடத்தப்பட்ட போராட்டங்கள் ராணுவத்தால் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டன. அதற்கு '8.8.88 எழுச்சி' என்று பெயர். அதே வருடத்தில் ஜனநாயகத்துக்கான 'தேசிய முன்னணி' என்ற கட்சி உருவானது.

ஆங் சான்சூ கியின் தீர்க்கமான பேச்சையும் கருத்துத் தெளிவையும் பார்த்து அவரைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள்.  இந்த நிலையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைந்தது. ஜுன்டா ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. நாட்டில் நடக்கும் அத்தனை போராட்டங்களையும் முடக்க வேண்டு மானால், சூ கியை முதலில் முடக்கியாக வேண்டும் என்று ஜுன்டா ராணுவம் நினைத்தது. 1989 ஜூலை மாதம் சூ கி சிறைப்படுத்தப்பட்டார். அப்போது மியான்மாரின் ராணுவ ஆட்சி இந்த ஜனநாயகப் போராளிக்கு ஓர் 'அரிய கையூட்டு வாய்ப்பு' கொடுத்தது. அதாவது, 'நாட்டைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டால் விடுதலை' என்பதே அந்த வாய்ப்பு.

'சுதந்திரப் பறவையாக நான் என் நாட்டைவிட்டு வெளியேறுவதைக் காட்டிலும் சிறைப் பறவையாக என் மண்ணிலேயே இருந்து போராட விரும்புகிறேன்' என்றவர் 15 ஆண்டுகள் வீட்டு சிறைவாசத்திலேயே கழிக்க நேர்ந்தது.

சூ கி-யின் கணவர் திபெத் கலாசாரத்தில் முனைவரான ஏரிஸ். இவர் 1995-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதும், அவருக்கு மியான்மாரில் நுழைய விசா மறுத்தது ராணுவ சர்வாதிகார ஆட்சி.'சூ கி வேண்டுமானால், லண்டனுக்குச் சென்று அவர் தம் கணவரை சந்திக்கட்டும். இங்கு மியான்மாரில் அவருடைய கணவரைக் கவனிக்கப் போதுமான வசதிகள் இல்லை' என்ற போலிக் காரணத்தையும் அந்த ராணுவம் கூறியது. தன்னை நாட்டைவிட்டுப் போக அனுமதித்துவிட்டு, அதன் பிறகு மீண்டும் தாய் மண்ணை மிதிக்கவே அனுமதிக்காமல் தடுத்துவிடுவார்கள் என்று யூகித்த சூ கி இந்த ஐடியாவை நிராகரித்தார். 1999-ல் கணவர் இறந்தபோதும் கடைசியாக ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க முடியாமலே போனது.

கடந்த 15 ஆண்டுகளாக தன் குழந்தைகளிடம் இருந்தும் பிரிந்தே இருந்தார். 1990-ல் ராணுவ ஜுன்டா அரசு தேர்தலை அறிவித்தபோது, தேசிய முன்னணியும் தேர்தலில் பங்கேற்று 50 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 80 சதவிகித நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. ராணுவ சர்வாதிகாரம் இன்றி அந்த நாடு இருந்திருக்குமானால், அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகி இருப்பார் சூ கி.

அக்டோபர் 24, 2007-ல் இவரின் 12 ஆண்டு கால வீட்டுச் சிறைவாசத்தைத் தொடர்ந்து உலகெங்கும் 12 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மே 3-ம் தேதி 2009-ல் ஜான்யெட்டா என்ற அமெரிக்கர் எவருடைய அழைப்புமின்றி, இன்யா ஏரியை நீந்திக் கடந்து, ஆங் கான் சூ கி-யின் சிறை வீட்டை அடைந்தார். மூன்று நாட்கள் கழித்து திரும்ப நீந்திக் கடக்க அவர் முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார். அனுமதி இன்றி ஒருவரை வீட்டில் அனுமதித்த குற்றத்துக்காக மே 13, 2009-ல் ஆங் கான் சூ கி மீண்டும் கைது செய்யப்பட்டு இன்கெய்ன் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆங் சான் சூ கிக்கு மூன்று ஆண்டு தண்டனையோடு, கடுமையான உடல் உழைப்புகொண்ட வேலைகளை செய்ய வேண்டும் என்ற கட்டளையும் போடப்பட்டது. பின்னர் அது 18 மாதத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

அமெரிக்காவும் சூ கி உட்பட 2,100 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தது. மியான்மாரையும் உறுப்பினராகக் கொண்ட தெற்காசிய நாடுகளுக்கான அமைப்பு, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், மேற்கத்திய நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவையும் தமது கண்டனத்தை வலுவாக முன்வைத்தன.

இதன் காரணமாக, 2009 இறுதியில் இருந்து, ஆங் சான் சூ கி-யின் மீதான வீட்டுச் சிறைக் காவல் கட்டுப்பாட்டை சிறிது சிறிதாக ராணுவ அரசு தளர்த்தியது. நவம்பர் 13-ம் தேதி மாலை மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையில் விடுதலை பெற்றார் சூ கி.

மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டக் கொள்கைகளையும், புத்த மதக் கருத்துகளையும் தனதாக்கிக்கொண்டவர் இந்த வீரப் பெண்மணி. அமைதிக்கான நோபல் பரிசையும், ஐரோப்பிய நாடுகளின் ராஃப்டோ பரிசையும்...தனது தியாகத்துக்காகா பெற்று இருக்கிறார் சூ கி.

No comments:

Post a Comment