Search This Blog

Friday, September 02, 2011

லோக்பால் ஊழலை ஒழிக்குமா? பகுதி-2, ஓ பக்கங்கள் - ஞாநி

லஞ்சம் ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் சட்டம் தேவை என்ற வாதத்தின் அடிப்படை, இப்போதுள்ள சட்டங்கள் போதவில்லை என்பதா? அல்லது அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதா? இரண்டும்தான்.


பொது ஊழியர் (பப்ளிக் சர்வண்ட்) எவரையும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து வழக்குத் தொடுக்க, இந்திய தண்டனைச் சட்டத்திலும், ஊழல் தடுப்புச் சட்டம் (1988) என்ற சட்டத்திலும் வகை செய்யப்பட்டிருக்கிறது. யார் பப்ளிக் சர்வண்ட் என்பதில்தான் எப்போதுமே சர்ச்சை. முதலமைச்சர் பப்ளிக் சர்வண்ட் அல்ல என்று கருணாநிதி எழுபதுகளில் அவர் மீது சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டபோது வாதாடினார். ஆனால் இந்த வாதம் ஏற்கப்படவில்லை. இப்போது ஜெயலலிதா மீது இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு, டான்சி வழக்கு போன்றவற்றிலெல்லாம் முதலமைச்சரும் பப்ளிக் சர்வண்ட்தான். நரசிம்மராவ் அரசு கவிழாமல் காப்பாற்ற எம்.பி.களுக்கு லஞ்சம் தரப்பட்ட வழக்கில், எம்.பி.களும் பப்ளிக் சர்வண்ட் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறது. அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குப் போடுவதற்கு முன்பு அந்த அரசின் (மாநில அல்லது மத்திய அரசின்) அனுமதி பெறவேண்டும். இதேபோல எம்.பி.கள்., எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் வழக்கு தொடுப்பதற்கு முன்பு சபாநாயகர்கள், அவைத்தலைவர்கள் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று சிலர் வாதாடி வருகிறார்கள். சட்டப்படி இது தேவையில்லை என்றும் அவைத்தலைவர்கள், சபாநாயகர்களுக்குத் தகவல் தெரிவித்தால் போதும் என்ற எதிர்க் கருத்து உள்ளது. 

அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குத் தொடுக்க அரசின் அனுமதி என்பது எளிதில் கிடைப்பது அல்ல. டிசம்பர் 2010 வரையில் மொத்தம் 236 அனுமதி கோரும் மனுக்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு வைத்திருக்கிறது. மாநில அரசுகள் முன்பு 84.மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிக்க கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறைகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளது. சுமார் நான்காண்டுகளில் ( 2005-2009) இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு சுமார் 13 ஆயிரம் புகார்களில் துறை ரீதியான தண்டனை வழங்கியிருக்கிறது. இவற்றில் 846 புகார்களில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. தில்லி போலீஸ் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் மத்திய அரசின் சி.பி.ஐ.யும் லஞ்ச ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தொடுக்கிறது.இவை எல்லாவற்றையும் ஒரே லோக்பால் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் லோக்பால் மசோதாவின் நோக்கம். அப்படிக் கொண்டு வரும்போது எந்த ஊழல் புகாரையும் விசாரிக்க அந்தந்த அரசின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. லோக்பால் விசாரித்து முடித்ததும் இதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை தரப்படும். பொய்ப் புகார் கொடுப்பவர்களுக்கு அபராதமோ சிறைத் தண்டனையோ விதிக்கப்படும்.லோக்பால் என்பது ஒரு தனி நபர் அல்ல. ஒரு தலைவரின் கீழுள்ள குழுவாக இருக்கும். இந்த லோக்பால் குழுவை, குடியரசுத் தலைவர் நியமிப்பார். யாரை நியமிப்பது என்பதை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நீதிபதிகள் அடங்கிய குழு முடிவு செய்யும். லோக்பால் குழுவினரை நீக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருடையது. அதை அவர் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் செய்வார்.


மேற்கண்ட விஷயங்களில் எல்லாம் அரசு கொண்டுவந்த லோக்பால் மசோதாவுக்கும் அண்ணா ஹசாரே அணியின் ஜன் லோக்பால் மசோதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முக்கியமான வேறுபாடுகள் பிரதமர், நீதிபதிகள் இருவரும் லோக்பால் விசாரணைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அண்ணா ஹசாரே அணியின் கருத்து. அரசு இதை ஏற்கவில்லை. பிரதமர் பதவியிலிருந்து விலகியபின் அவரை உட்படுத்தலாம் என்கிறது. எம்.பி.கள் அவைக்குள் ஈடுபடும் செயல்கள் தொடர்பாக விசாரிக்க முடியாது என்கிறது அரசு. அவையும் உட்பட்டவையே என்கிறது அண்ணா அணி. பொது மக்களிடமிருந்தோ அரசிடமிருந்தோ பணம் பெறும் அமைப்புகளும் லோக்பாலுக்கு உட்பட்டவை என்கிறது அரசு. இதன்படி தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பல லோக்பாலுக்கு உட்படவேண்டி வரும். அண்ணா ஹசாரே அணி அவற்றை லோக்பாலுக்கு உட்படுத்தவே இல்லையே ஏன்? மத்திய அரசின் லோக்பால் மசோதா அரசு ஊழியர்கள் எல்லாரையும் லோக்பாலுக்கு உட்படுத்தவில்லை. குரூப் ஏ அதிகாரிகளும் அதற்கு மேலுள்ளவர்களும் மட்டுமே லோக்பாலின் கீழ் வருவார்கள். இதர ஊழியர்கள் விஜிலன்ஸ் கமிஷன், துறை விசாரணைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். இதை அண்ணா ஹசாரே அணி ஒப்புக் கொள்ளவில்லை. 


மாநில அரசு ஊழியர்கள் பற்றி இரு லோக்பால் மசோதாக்களும் நேரடியாக எதுவும் சொல்வதில்லை. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசும் அண்ணா ஹசாரே அணியும் சொல்கிறார்கள். அந்த லோக் ஆயுக்தாக்கள் எல்லாரும் மத்திய லோக்பாலின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அண்ணா அணியின் கருத்து. இதை மத்திய அரசும் ஏற்கவில்லை. மாநில அரசுகளும் எதிர்க்கின்றன. லோக் ஆயுக்தா நியமிக்கும்படி மாநிலங்களை வற்புறுத்த முடியாது என்று மத்திய அரசும், எங்கள் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று மாநில அரசுகளும் எதிர்க்கின்றன.  நடைமுறையில் அண்ணா ஹசாரே அணியின் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டால், சி.பி.ஐ, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எல்லாமே லோக்பாலின் கீழ் இயங்கும் அமைப்புகளாகிவிடும். நாடு முழுவதும் லோக்பால் இயங்குவதற்கு, சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் தனியே தேவை. இவர்களைக் கண்காணிப்பது இன்னொரு தலைவலி. அவர்கள் மீது புகார் செய்தால் அந்தப் புகார் ஒவ்வொன்றும் குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் விசாரிக்கப்பட்டுதான் முடிவெடுக்க வேண்டி வரும். லோக் ஆயுக்தாக்களும் லோக்பாலின் கீழ் இருந்தால், மாநில அரசுகளுக்கும் லோக்பாலுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகளும் லோக்பாலின் கீழ் வருவார்கள் என்று அண்ணா ஹசாரே அணி சொல்லும்போது உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வரை இருக்கும் எல்லா நீதிபதிகளுமா என்று தெளிவாகச் சொல்லவில்லை.


ஆனால், அருணாராயின் ஆலோசனைகள் ஓரளவு மேலானவை. அவர் ஒற்றை பெரிய அமைப்பை உருவாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார். பொய்ப் புகாரானால் புகார் கொடுத்தவருக்கு அபராதம் தண்டனை என்பது புகார்கள் வரவிடாமல் தடுத்துவிடும். எனவே புகார் கொடுத்தவர் வேண்டுமென்றே தெரிந்தே பொய்யாகப் புகார் செய்தார் என்பதை நிரூபித்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்கிறார் அருணாராய். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.கள், பிரதமர் ஆகியோருக்கு லோக்பால். இதர அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன். நீதித்துறைக்கென்று தனியே ஜுடீஷியல் கமிஷன் என்ற அமைப்பு, மாநிலங்களில் தனியே லோக் ஆயுக்தா என்று நான்காகப் பிரிப்பதுதான் நல்லது என்பது அருணாராயின் கருத்து. இது தவிர லஞ்சம் ஊழலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அமைப்பினையும் உருவாக்கக் கோருகிறார் அருணாராய். லஞ்சம் ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்குப் பாதுகாப்பு வழங்கவும் தனிச் சட்ட மசோதாவை ஏற்கெனவே மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.தவிர, இன்னும் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் போல அரசியல் சட்டப்படி சுயாட்சி உடைய லோக்பால் கமிஷனை நியமிக்க வேண்டும் என்று சொன்னது சாத்தியமா என்பது முதல் அம்சம். இதே கருத்தில் முன்னாள் தேர்தல் கமிஷன் தலைவர் டி.என்.சேஷன் கொடுத்துள்ள மசோதாவும் பரிசீலிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு என்பது சுவாரஸ்யமானது. ஏனென்றால் சகல அதிகாரங்களும் சுயாட்சியும் உடைய தேர்தல் ஆணையத்துக்கு என்று தனியே பெரும் ஊழியர் படை எதுவும் கிடையாது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதும் அதன் பணிக்கென்று ஒதுக்கப்படும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் எல்லாரும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். இதேபோல லோக்பாலை அமைக்க முடியுமானால் நன்றாகத்தானிருக்கும். ஒரு புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும் விசாரிப்பதற்கும் வழக்குத் தொடுக்கவும் தனக்குத் தேவைப்படும் ஊழியர்களை அரசிடமிருந்தே அது பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் அதன்பின் லோக்பாலுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகிவிடுவார்கள். இப்படிச் செய்ய முடிந்தால், நேர்மையான அரசு ஊழியர்கள் எலெக்‌ஷன் டியூட்டி மாதிரி லோக்பால் டியூட்டிக்குச் செல்ல முடியும். 


லோக்பால் என்ற அமைப்பே தனியே தேவைதானா என்பது இரண்டாவது அம்சம். அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு மிடில் க்ளாஸ் மக்களின் தார்மிக ஆதரவு இந்த அளவு கிடைத்ததற்கு முக்கிய காரணம் அண்மையில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ் என்ற இரு பெரும் ஊழல்கள் மக்கள் மனத்தில் பெரும் அருவருப்பை ஏற்படுத்தியதுதான். அந்த இரு ஊழல்கள் தொடர்பாக இரு அமைச்சர்கள், ஒரு பெரும் கட்சித்தலைவரின் மகள், பல அரசு, தனியார் உயர் அதிகாரிகள் எல்லாரும் சிறையில் இருக்கிறார்கள். எந்த ஒரு புது சட்டமும் இதைச் செய்ய தேவைப்படவே இல்லை. இருக்கும் சட்டங்களின் கீழ்தான் அவர்கள் உள்ளே போயிருக்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் இருக்கும்;  சட்டத்தைக் கறாராகப் பயன்படுத்தும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் சில நீதிபதிகளுமே இதை சாதித்தார்கள். எனவே நமது தேவை மேலும் மேலும் சட்டங்களல்ல. இருப்பவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் மனிதர்கள்தாம்.


ஆனால் ஒவ்வொரு பொறுப்புக்கும் செய்யும் நியமனங்களே கவனமாகக் கறாராக அணுக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் மேலே சொன்னவை எல்லாம் ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டபின்தான் எதையும் செய்ய வேண்டும். அண்ணா ஹசாரே அணி தாங்கள் எழுதி வைத்திருக்கும் மசோதாவை அட்சரம் பிசகாமல் அப்படியே பதினைந்தே நாட்களுக்குள் நிறைவேற்றியாக வேண்டுமென்று அடம் பிடித்தது எவ்வளவு அபத்தமானது! கடைசியில் வென்றது அவர்களின் அடம் அல்ல. எல்லாருடைய கருத்தையும் கேட்டு விவாதித்துதான் சட்டம் போட முடியும் என்ற அரசின் நிலைதான்; அரசியல் கட்சிகளின் நிலைதான் ஜெயித்திருக்கிறது. பாராளுமன்றத்தில் போட்ட தீர்மான வாசகங்களுக்குள் வெகு புத்திசாலித்தனமாக அந்த நிலைதான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு சாக்குதானே வேண்டும். இதோ இந்தா பிடி என்பதுதான் அந்தத் தீர்மானம். கொண்டாடிக் கொள்ளுங்கள். 

ஆனால், லோக்பாலால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை இப்போது அண்ணா ஹசாரே அணியும் சேர்ந்து பேச வேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தி விட்டது. 

(விவாதம் தொடரும்)

இந்த வாரக் கேள்விகள்


ராஜீவ் கொலை வழக்கில் மூவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென்று இப்போது குரல் எழுப்பியிருக்கும் கருணாநிதி, 2000மாவது வருடத்தில் அவர்களைத் தூக்கிலிட ஒப்புதல் அளித்ததற்கு, ஜெயலலிதா பெயரில் பழிபோடுவது மழுப்பல்தானே! தான் அப்போது செய்தது தவறு என்று ஏன் இப்போதுகூட கருணாநிதியால் சொல்ல முடியவில்லை? 


ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கும் ஜெயலலிதா நாளைக்கு தர்மபுரி மாணவிகளை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினருக்குக் கருணை காட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருவாரா? வந்தால், அதை எத்தனை அரசியல் கட்சிகள் ஆதரிப்பார்கள்? ஏன் தமிழகச் சட்டமன்றம் மரண தண்டனையையே இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போடத் தயங்குகிறது?  
இந்த வார எச்சரிக்கை


உணர்ச்சியைத் தூண்டும்விதத்தில் பேசிவிட்டு, தூண்டப்பட்ட இளைஞர்கள் தீக்குளித்தபின் மலர் வளையமும் வைத்து விட்டு, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடவேண்டாமென்று பொய்யாகப் பேசும் தலைவர்கள் பற்றி, தமிழக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தத் தலைவர்கள் வீட்டுக் குழந்தைகளோ உறவினர்களோ ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பதே இல்லை என்பதை, தமிழ் இளைஞர்கள் கவனிக்க வேண்டும். 


 www.gnani.net



No comments:

Post a Comment