Search This Blog

Friday, September 09, 2011

”பொன் ஓணம் காணாம்!” - கேரளத்து தீபாவளி!


காணம் (சொத்து) வித்தும் ஓணம் உண்ணணும்!" என்பது பிரபலமான மலையாளப் பழமொழி. எப்பாடுபட்டாவது ஓணத்தன்று விருந்து மிகச் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் என்பதாகவே ஒவ்வொருவரும் நினைப்பர்.

கேரள நாட்டை ‘மகாபலி’ என்ற அசுரன் ஆண்டு வந்தான். கொடுங்கோலான அவனது கர்வத்தை அடக்க, திருமால் வாமனனாக அவதாரம் செய்தார். வாமன உருவத்துடன் சென்ற திருமால், மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்க, அசுரனும் வரத்தைக் கொடுத்தான். அந்தக் கணத்திலேயே, ஸ்ரீதிருமால், ஓங்கி உலகளந்த உத்தமனாகி, ஓரடியால் மேல் உலகங்களையும், மற்றொரு அடியால் கீழ் உலகங்களையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அழுத்தி, அவனைப் பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.

திருமால் வாமனராக அவதரித்த நாள் ஆவணி மாத சுக்கில பட்ச துவாதசியான, திருவோண நட்சத்திரத்தன்றுதான்.கேரள மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் பெய்ய ஆரம்பிக்கும் தென்மேற்குப் பருவ மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் ததும்பி வழியும். எங்கு பார்த்தாலும் பசுமை பூத்து நிற்கும். வண்ண வண்ண மலர்களும், கனிகளுமாக பூமி செழிப்பாக இருக்கும். அறு வடையான தானியங்களும், அம்பாரமாகக் குவிக்கப்பட்டுள்ள காய்-கனிகளுமாக விவசாய மக்களின் வீடுகளும் நிறைந்து காணப்படும். மழை ஓய்ந்து, இளம் வெயில் இன்பம் தரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஓணப் பண்டிகை வருகிறது.


அத்த நட்சத்திரன்று ஓணப் பெருவிழா ஆரம்பமாகிறது. அன்றிலிருந்து பத்தாவது நாள் திருவோணப் பண்டிகை. ‘அத்தம்’ தொடங்கி பத்தாம் நாள் வரை’ கேரளாவில் விழா கோலம்தான்!வயற்காடுகளில் குவிக்கப்பட்டுள்ள தானியக் குவியல்களுக்கு தனி பூஜை செய்யப்படும்.வயலில் குவிக்கப்பட்டுள்ள தானியத்துக்கு ‘நிறைபொலி’ என்று பெயர். முதல் அளப்பு கோயில்களுக்குக் காணிக்கையாக அனுப்பப்படும். அது ‘அம்பலப் பொலி’ எனப்படும்.வீட்டுக்குக் கொண்டு வரும் தானியம் ‘இல்லம் நிற!’ எனப் படும் (வீடு நிறைந்திருக்க வேண்டும்.) அடுத்து, எடுத்துக் கொட்டும் போது கூடை நிறைந்து இருக்க வேண்டும் என்பதால் ‘வல்லம் நிற!’ வீட்டில் தானியக் குதிரில் சேரும்போது அது ‘பத்தாயம் நிற’வாக ஆகிவிடும். ஆண்டு முழுவதும் கொல்ல நிறவாக, வற்றாத செல்வமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட, விவசாய மக்களின் பிரார்த்தனையின் வெளிப்பாடே ஓணம் பண்டிகை.


தன் மக்களைத் தேடி வருகின்ற மகாபலி அரசனை, கேரள மக்கள் புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக வரலாறு. அதனால் அன்று அத்த பூக்கோலம்’ எனப்படுகின்ற வண்ண மலர் கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வரைந்து சிறப்பு வரவேற்பு அளிக்கிறார்கள்.வண்ண மலர்கள், தழைகள், தானியங்கள், கனிகள், காய்கள் கொண்டு மிக அழகான கோலங்களை உருவாக்குவார்கள். அதன் நடுவே அழகிய கேரள குத்து விளக்குகள் வைத்து மங்களகரமாக அலங்கரிப்பார்கள்.ஓண நாட்களில் பெண்கள் ‘ஓணக்களி’ என்று அழைக்கப்படும் பாரம்பரிய விளையாட்டுகளில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வர். அதில் மிகப் பிரபலமானது ‘ஓண ஊஞ்சல்’ என்பது. நெடிய மரங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டு, அதில் இளம் பெண்கள் ஏறி அமர்ந்து வீசி வீசி ஆடி மகிழ்வார்கள். ‘கை கொட்டிக்களி’ என்பது ஓணம் பாட்டுக்களைப் பாடி கும்மி அடித்து ஆடுவது. அத்தப் பூ கோலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, வாமன ரூபத்தைப் போற்றியும், கேரள நாட்டை வர்ணித்தும் ஆடிப்பாடி மகிழ்வர். இதற்குப் பின்னணியில் கேரள ஜன்டை வாத்தியங்கள் முழங்கும்போது, நடனத்தின் வேகமும் அதிகரிக்கும். ‘வல்லக் களி’ எனப்படும் படகு விளையாட்டுகளும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும். 


அதற்கு அடுத்து ‘ஓண சத்யா’ எனப்படும் சிறப்பு விருந்து. பால் இல்லாத டீயும், கப்பங் கிழங்கும் மட்டுமே சாப்பிட்டு வாழும் எளியவர்கள்கூட, தினுசு தினுசாக விருந்து சமைத்து உண்பர். பால் பிரதமன், பால் அடை, சக்கப் பிரதமன், அவியல், ஓலன், காளன், எரிசேரி, புளிசேரி, வறுவல், பழப்பச்சடி என சிறப்பு விருந்து செய்வதில் சிரத்தை எடுத்துக் கொள்வர்.

எல்.சங்கமித்ரா

1 comment: