Search This Blog

Tuesday, September 06, 2011

மயக்கம் அடைந்தால் - முதலுதவி

முதலில் இந்த பதிவை எழுத வேண்டாம் என்று தன யோசித்து வைத்து இருந்தேன். ஆனால், இன்று எனக்கு ஏற்பட்ட இந்த  மயக்கம் ( ஏன் என்பதை தனியாக பின்னர் எழுதுறேன் ) நாளை வேற யாருகாவது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம் .

முதலுதவி

மயக்கம் அடைந்தால்...?

மயக்கத்தில் இரு வகை உண்டு. குறு மயக்கம், நெடு மயக்கம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மூர்ச்சை அடைந்து தரையில் விழுவதைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பாகப் பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும்போது, மாணவர்கள் இவ்வாறு மூர்ச்சை அடைவது வழக்கம். இதனைக் ‘குறு மயக்கம்’ (Syncope) என்று கூறுகிறோம்.

 இதற்குக் காரணம் என்ன?

காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது முதற்காரணம். இதனைப் ‘பசி மயக்கம்’ என்று கூறுகிறோம். இரவுத் தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது அடுத்த காரணம். ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மூன்றாவது காரணம். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நின்றால் உண்டாகும் உடற்சோர்வு, இந்த மயக்கத்தை ஏற்படுத்தும்.அளவுக்கு அதிகமாக விளையாடுதல், உடற்பயிற்சி செய்தல், ஓடுதல் போன்றவற்றாலும் குறு மயக்கம் வரும். உணவு புரையேறுதல், தொண்டை அடைத்துக் கொள்ளுதல் முதலிய காரணங்களும் இவ்வகை மயக்கத்தை உண்டுபண்ணும். காற்றோட்டம் குறைந்த இடங்களில் வெகு நேரம் இருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வெகு நேரம் இருந்தாலும் இந்த மயக்கம் வரக்கூடும்.


உளவியல் காரணங்கள்:

வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் பள்ளிக்கு வருவதால் ஏற்படும் பயம், தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம் போன்ற காரணங்களாலும் இது ஏற்படுவதுண்டு. கவலை, இழப்பு,சோகம், திகில் போன்ற உளவியல் காரணங்களாலும் குறு மயக்கம் ஏற்படுகிறது. அதிர்ச்சி தரும் செய்திகளைக் கேட்டதும் மயக்கம் வருவது இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அடுத்து,நீண்ட நேரம் அழும்போது ஏற்படும் குறு மயக்கமும் இதைச் சேர்ந்ததுதான். மரணம் அடைந்தவர் வீடுகளில் இந்த நிகழ்வினை சகஜமாகக் காணலாம்.
நோய்களும் காரணமாகலாம்:

இடைவிடாத இருமல் சில நிமிடங்களுக்கு நீடிக்கும்போது இந்தக் குறு மயக்கம் வருவதுண்டு. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்து முடிந்ததும் இந்த வகை மயக்கம் வரும். கழுத்து எலும்புப் பிரச்னை உள்ளவர்கள் தலையை ஒரு பக்கமாகச் சாய்க்கும்போதும், வலிப்பு நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இந்த மயக்கம் வரலாம். அதிக வலி, சத்துக்குறைவு, ஒவ்வாமை ஆகிய காரணங்களாலும் இது ஏற்படும்.


என்ன அறிகுறி?

நின்ற நிலையிலோ உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நொடிகளில் அல்லது நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். படுத்த நிலையில் உள்ளவர்களுக்கு இந்த மயக்கம் ஏற்படுவதில்லை. மயக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் சில நிமிடங்களுக்குக் கைகால்களில் நடுக்கம் இருக்கலாம். தசைத்துடிப்புகள் காணப்படலாம். 

எச்சரிக்கை அறிகுறிகள்:

சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு படபடப்பு ஏற்படுவது, அடிக்கடி கொட்டாவி வருவது, வாயைச் சுற்றி மதமதப்பு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இவை ஏற்பட்டவுடன் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் குறு மயக்கம் வராது.

மயக்கம் ஏற்படுவது எப்படி?

மூளைக்குத் தேவையான அளவு ரத்தம் செல்லாததுதான் இதற்கு அடிப்படைக் காரணம். அதனால், ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்பின் கீழ் நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கி விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகிவிடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது. 

முதலுதவி என்ன?

மயக்கம் அடைந்தவரை உடனடியாக, காற்றோட்டமான இடத்துக்கு அப்புறப்படுத்துங்கள்.

ஆடைகள் இறுக்கமாக இருந்தால், தளர்த்திவிடுங்கள்.

இடுப்புக் கச்சையை அகற்றுங்கள்.

தரையில் படுக்க வையுங்கள்.

தலை கீழேயும் கால்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு படுக்க வையுங்கள். 

சில நிமிடங்களுக்குக் கால்களை உயர்த்திப் பிடித்துக் கொள்வது நல்லது. 

இதனால் மயக்கம் உடனடியாகத் தெளியும்.

தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக்குழாய் அடை படாமல் இருக்கும். 

தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது.

தலையணையைப் பாதங்களில் வைத்துக் கொள்ளலாம்.

முகத்தில் ‘சுளீர்’ என்று தண்ணீர் தெளியுங்கள். அப்படிச் செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படுவதால், மூளை நரம்புகளும் விரைவாக வேலை செய்யும். அப்போது மயக்கம் உடனே தெளியும். 

மயக்கம் தெளிந்தபின், குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து குடிக்கத் தரலாம்.

மூன்று நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால், மருத்துவர் உதவியை நாடுங்கள்.

மயக்கம் - உண்மையா? நடிப்பா?

சிலர் வீட்டிலோ, வேலை செய்யும் இடங்களிலோ ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது, அதிலிருந்து தப்பிக்க மயக்கம் ஏற்பட்டுள்ளதுபோல் நடிப்பார்கள். அப்போது அந்த மயக்கம் உண்மையில்லை என்று எப்படித் தெரிந்து கொள்வது? 

அவருடைய கண் இமைகளை மேல்நோக்கி இழுங்கள். அவர் உண்மையிலேயே மயக்க நிலையில் இருந்தால், இமைகளை நீங்கள் மேல்நோக்கி இழுக்க முடியும். மயக்கம் அடைந்தது போல் நடிக்கிறார் என்றால் இமைகளை நீங்கள் மேலே இழுக்கும்போது அவர் இமைகளைத் திறக்கவிடமாட்டார். உண் மையில் மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது. மயக்கம் போல் நடிப்பவர்களுக்கு இமைகளுக்குள் விழிகள் இங்கும் அங்கும் சுழலும். இவற்றிலிருந்து மயக்கநிலை உண்மையா, நடிப்பா என்று தெரிந்து கொள்ளலாம்.

தடுக்க 6 வழி!

முதல்முறை மயக்கம் வந்ததுமே முழுமையான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். 

மயக்கத்துக்கான காரணம் கண்டறிந்து, உரிய சிகிச்சையை மேற் கொள்வதால், இதைத் தடுக்க உதவும்.

பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக, மயக்கம் வருபவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் மன பலத்தை உண்டாக்கவும் தியானம் மற்றும் யோகாசனம் பயில்வது உதவும்.

பள்ளி மாணவர்கள் எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

அடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள், ‘ஜிம்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. 
 

 டாக்டர் கு.கணேசன்
      

1 comment: