Search This Blog

Monday, September 05, 2011

குருவின்றி அமையாது உலகு! - ஆசிரியர் தினம்


குரு என்ற சொல்லை உலகுக்கு அளித்தது இந்தியாதான். இப்போது உலக மொழிகளில் எல்லாம் ஆசான், முன்னோடி ஆகிய பொருள்படும்படி இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். மாணவர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக வகுப்பு ஆசிரியர்களுக்கு மலர்க்கொத்து கொடுப்பதும், இனிப்பு வழங்குவதும், சில இடங்களில் பாராட்டு விழாக்களுமாக நடைபெறும் இந்த வேளையில், இன்றைய நவீன காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் என்பவரை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.


எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். ஆனால், இன்று எல்லா வீடுகளிலும் ஆண்களும் பெண்களும் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே எழுத்துகளை, ஆங்கிலம், தமிழ் என அறிமுகம் செய்கிறார்கள். பொம்மைகளை, படங்களைக் கொடுத்துக் கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் வீட்டுப் பாடங்களைக்கூட சொல்லித் தருவதும், தானே போட்டுத் தருவதுமான வேலைகளையும் செய்யும் பெற்றோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவர்களே குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகிவிடுகிறார்கள். இதனாலேயே பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரிகளாக, எதிர் ஆளுமைகளாக மாறிப்போகிறார்கள்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி எல்லாமும் இப்போது தாய், தந்தை, ஆசிரியர் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாடம் முழுவதையும் சொல்லித்தர குறுந்தகடுகள் வந்தாகிவிட்டன. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் அதே பாடங்களை அப்படியே நடத்தும் அளவுக்கு இதன் தரம் இருக்கிறது. மேலும் ஒரு வகுப்பறையில் இருந்துகொண்டு, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் வகையில் கணினியுடன் கூடிய வகுப்பறைகள் இன்று அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. 


அப்படியானால் யாரை ஆசிரியர் யாரை நல்லாசிரியர் எனக்கொள்வது?

ஒரு மாணவர் பள்ளியை விட்டு வெளியே சென்று சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆசிரியர்களின் பெயரை நன்றியுடன் நினைவுகூர்கின்றாரோ, எத்தனை பேரை அவர் திசை நோக்கி வணங்க நினைக்கின்றாரோ, தன் குழந்தைகளை ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கும்போது தனக்கு வாய்த்த ஆசிரியர் போல தன் மகன், மகளுக்கும் கிடைக்கமாட்டாரா என்று எந்த ஆசிரியரை நினைத்து மனம் ஏங்குகின்றதோ அவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். இந்த அளவுகோலில் வருவோர் மட்டுமே நிஜமான, நிச்சயமான நல்லாசிரியர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் நிச்சயமாக மத்திய, மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களைப் போன்றவர்களால்தான் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் நன்றி சொல்லிக்கொண்டு முன்னேறிச் செல்கிறது.இந்தவிதமான ஆசிரியர்களை ஒரு மனிதன் பின்னாளில் நினைக்கக் காரணம் என்ன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவரா அல்லது அவரது வகுப்பு வந்தாலே பயங்கர ஜாலி என்பதாலா அல்லது அவர் அன்பாகப் பழகினாரா, எதனால் அவரை மனம் தேடுகிறது?எல்லா ஆசிரியர்களும் கற்பித்தல் பணியைச் செய்தாலும் ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது. 

அறிவை வழங்குபவர், அறிவைப் புகட்டுபவர், அறிவைத் துலக்குபவர்.அறிவை வழங்கும் ஆசிரியர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடத்தைத் திரும்பவும் அதே அளவில், அதே தரத்தில் மாற்றமின்றி மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அறிவைப்புகட்டுபவரின் பணி இன்னும் சுவையானதாக , பிடிக்காத உணவையும் ஊட்டி விடும் சாமர்த்தியம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வகை ஆசிரியர்கள் ஒரு மாணவரின் உள்ளே இருக்கும் திறமையை அவரே பார்க்கும்படியாகத் துலக்கி, பளபளப்பாக்கி விடுவார். அந்தத் தன்னொளி வழியில் அந்த மாணவர் நடந்து வாழ்க்கையில் பலபடி மேலே செல்வார். அப்படியாக ஒவ்வொருவரும் தனது அறிவின் ஒளியைத் துலக்கிக் காட்டியவர்களை எண்ணிப் பார்க்கிறார்கள். இது பள்ளி வகுப்பறையில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. இவர்கள்தான் உண்மையிலேயே குரு. ஒரு மனிதனை அவருக்கே அடையாளம் காட்டுவதுதான் குருவின் பணியாக இருக்கிறது.இத்தகைய ஆசான்கள்தான் ஒரு மனிதன் தன் தாய் தந்தையை மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதும், சமூகத்தில் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் அறவாழ்வு வாழ்வதும், அனைவரையும் அன்பு செய்வதும் நமக்கு உள்ளே எப்போதுமே இருந்து வருகின்ற ஒளி என்பதை, அறிவைத் துலக்கி வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள் .இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

தினமணி 

3 comments:

  1. ஒரு தமிழனால் ஆசிரியர்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை நினைத்து பெருமிதம் அடைவோம்...

    ReplyDelete
  2. நல்லாசிரியர் பற்றிய உங்களுடைய கருத்து தான் என்னுடைய கருத்தும்.
    மிக தெளிவாக இருக்கிறது.


    //ஒரு மாணவர் பள்ளியை விட்டு வெளியே சென்று சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆசிரியர்களின் பெயரை நன்றியுடன் நினைவுகூர்கின்றாரோ, எத்தனை பேரை அவர் திசை நோக்கி வணங்க நினைக்கின்றாரோ, தன் குழந்தைகளை ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கும்போது தனக்கு வாய்த்த ஆசிரியர் போல தன் மகன், மகளுக்கும் கிடைக்கமாட்டாரா என்று எந்த ஆசிரியரை நினைத்து மனம் ஏங்குகின்றதோ அவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் //

    ReplyDelete
  3. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றனர் # ஆதலால், இதனால் சகலமானவர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete