Search This Blog

Saturday, September 17, 2011

ஜாக்கிசான் - ஹாங்காங்கில் பிறந்தவன்!


1954ஆம் வருடம், ஏப்ரல் ஏழாம் தேதி ஹாங்காங்கில் பிறந்தவர் ஜாக்கிசான். அப்பா பெயர்: சார்லஸ் சான். அம்மா பெயர் லீ-லீ. பிறந்தவுடன் ஜாக்கிசானுக்கு பெற்றோர் வைத்த பெயர் சான் காங்-சாங். அதாவது ‘ஹாங்காங்கில் பிறந்தவன்’ என்று அர்த்தம். பிறக்கும்போதே குண்டு கத்தரிக்காய் போல இருந்த குழந்தை ஜாக்கியின் எடை: 12 பவுண்டு. பருமனான குழந்தையான ஜாக்கிக்கு பெற்றோர் வைத்த செல்லப் பெயர்: குட்டி பீரங்கி. பெற்றோர்களின் ஏழ்மையைப் பார்த்த டாக்டர், “உங்களுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன்; இந்தக் குழந்தையை என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று சொன்னார். ஆனால், அவர் பெற்றோர்கள் உடன்படவில்லை.ஜாக்கிசானின் அப்பா, அம்மா இருவரும் ஹாங்-காங்கில் இருந்த பிரெஞ்ச் தூதரக அதிகாரியின் வீட்டில் வேலை செய்து வந்தார்கள். அப்பா, அந்த வீட்டின்சமையல்காரர். அம்மா, வீட்டு வேலை செய்பவர். வருமானம் மிகவும் குறைவு. குழந்தைக்கு வேண்டிய பால் பவுடர், துணி, மருந்து, மாத்திரைகள் போன்றவற்றுக்குக்கூட பணமில்லாமல் சிரமப்பட்டார்கள்.பள்ளி செல்லும் வயது வந்ததும், அருகில் உள்ள துவக்கப் பள்ளியில் ஜாக்கி சேர்க்கப்பட்டான். ஆனால், ஜாக்கிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை; முதல் வகுப்பில் தேறி, அடுத்த வகுப்புக்குப் போக முடியவில்லை. தன் ஒரே மகன் படிப்பில் சிறந்து விளங்கவில்லையே என்ற ஏக்கம் அவனது அப்பாவுக்கு.


ஜாக்கிக்கு ஏழு வயதான போது, ஆஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்க தூதர் அலுவலகத்தில் தலைமை சமையல்காரர் வேலை கிடைத்தது அவர் அப்பாவுக்கு. கூடவே அம்மாவும் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படத் தயாரானார். அதாவது, ஜாக்கியை ஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு, அவர்கள் இரண்டு பேர் மட்டும் ஆஸ்திரேலியா செல்வது என்று முடிவு செய்தார்கள். ஏழு வயது குழந்தையான ஜாக்கி, ‘சைனா டிராமா அகாடமி’ என்ற உறைவிடப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான்.  அங்கே ஜாக்கிக்கு சொல்லித்தரப்படாத விஷயங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கராத்தே, குங்க்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகள், அக்ரோபாடிக் உடற்பயிற்சிகள், பாட்டு, நடிப்பு என்று பல விஷயங்கள்! சீனாவின் ஓபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள், மிகவும் மாறுபட்டவை. அது நடிப்பு, உடற்பயிற்சிகளின் அடிப்படையிலான அக்ரோபடிக்ஸ், தற்காப்புக் கலைகள் என அனைத்தும் சேர்ந்து உருவாக்கப்படுவதாகும். அந்தத் துறையில் சீனாவில் சிறந்து விளங்கியது ‘பீகிங் ஓபரா’ என்ற அமைப்பு. அதற்குத் தேவையான கலைஞர்களை உருவாக்குவதுதான் சைனா டிராமா அகாடமியின் முக்கிய நோக்கம்.அந்தப் பள்ளியில், தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். நாள் முழுக்க பயிற்சி வகுப்புகள். இரவு படுக்கைக்குப் போகிறபோது நள்ளிரவு ஆகியிருக்கும். தவிர, குழந்தைகளுக்கு வயிறார சாப்பாடு போட மாட்டார்கள். மேலும், அங்கே இருக்கும் ஆசிரியர்கள் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்கள். சிறிய தவறுக்குக்கூட, தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கும். 

என்றாலும், தனக்கு சொல்லித்தரப்பட்ட விஷயங்களை அவன் மிகுந்த ஆர்வத்தோடும், அக்கறையோடும் கற்றுக் கொண்டான். கூடவே அதிர்ஷ்ட தேவதையின் அருளும் இருந்தது. பலன்? எட்டு வயதிலேயே, ஜாக்கிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு, தேடி வந்தது. ‘பிக் அண்டு லிட்டில் வாங் டின் பார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர், விரைவிலேயே ஒரு ஸ்டன்ட் வல்லுனர் ஆனார். பிறகு, ஹாங்காங்கின் சினிமா உலகத்தில் சிறு வேடங்களில் குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில், நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. 1973ல் புரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 19. ஆனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால், தன் பெற்றோர்களின் அழைப்பின்பேரில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கே ஒரு கட்டிடங்கள் கட்டும் வேலை செய்தார். அப்போது சக தொழிலாளி ஒருவர், சான் காங்-சாங் என்ற பெயரை, ‘லிட்டில் ஜாக்’ என்று அழைக்க ஆரம்பித்தார். அதுவே ஜாக்கி என்று ஆனது. சினிமாவில் ஜாக்கி சான் என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.இந்தச் சமயத்தில்தான், வில்லி சான் என்ற சினிமா தயாரிப்பு நிர்வாகியிடமிருந்து, உடனே புறப்பட்டு ஹாங்காங் வரும்படி ஒரு தந்தி வந்தது. ஸ்டன்ட் காட்சிகளில் ஜாக்கியின் திறமையை முன்பே கவனித்திருந்தார் இந்த மனிதர். ஹாங்காங் வந்த 21 வயது ஜாக்கிசானுக்கு, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவர் வாழ்வின் திருப்புமுனை!

2 comments:

  1. ஹாங்காங் வந்த 21 வயது ஜாக்கிசானுக்கு, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவர் வாழ்வின் திருப்புமுனை!/

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திகொள்பவனே சிறந்த மனிதன் . அந்த வகையில் ஜாக்கிசான் கில்லாடிதான் . நல்லத் தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete