Search This Blog

Friday, September 30, 2011

காயினாக தங்கம் வாங்கினால் என்ன கஷ்டம்?


தங்க காயின்களை விற்கும்போது கூவிக் கூவி அழைப்பவர்கள், அதை திரும்ப வாங்கிக்கொள்ள மட்டும் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஏன்?

வங்கியில் வாங்கும் காயின்கள்...

நகைக் கடைகளில் தங்க காயின்கள் விற்பனை சூடு பிடிப்பதைப் பார்த்த வங்கிகள், ஒருகட்டத்தில் தாங்களும் காயின்களை விற்கப் போவதாக அறிவித்தது. கடைகளைவிட வங்கிகளில் கிடைக்கும் காயின்கள் தரமானதாக இருக்கும் என்பதால், எதிர் பார்த்த மாதிரியே அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதெல்லாம் வாங்கும் போதுதான்; விற்கச் சென்றால் நிலைமையே தலைகீழ்தான்.

தாங்கள் விற்ற காயின்களை வங்கிகள் திரும்பி வாங்கு வதில்லை. அடுத்து கடை களுக்குக் கொண்டு சென்றால் அங்கேயும் பிரச்னை... அங்கே இந்த  காயின்களை வாங்கிக் கொண்டு பதிலுக்கு அங்கிருக்கும் நகைகளை வாங்கிக் கொள்ளத்தான் அனுமதிக்கிறார்களே தவிர, காயினை எடுத்துக்கொண்டு பணம் தரச் சம்மதிப்பதில்லை. அதாவது, எக்ஸ்சேஞ்ச் மட்டுமே செய்து கொள்ளலாம். அதுவும், ஒரு சில கடைகள்தான் இந்த எக்ஸ்சேஞ்சுக்கும் சம்மதிக் கின்றன. சில பிராண்டட் நகைக் கடைகளிலோ இந்த காயின்களை வைத்து நகையாகவும் வாங்க முடியாது, பணமாகவும் வாங்க முடியாது.

 சரி, விற்கத்தான் முடிய வில்லை, நகைக் கடனாவது பெற முடியுமா என்றால் அதற்கும் வழியில்லை. தற்போதுதான் அதுவும் ஒரு சில வங்கிகள் மட்டும் அவர்களது வங்கியில் வாங்கின காயின் என்றால் மட்டும் நகைக் கடன் கொடுக்கின்றன. மற்ற கடையில், மற்ற வங்கியில் வாங்கிய காயினுக்கு கடன் கொடுப்பதில்லை.  

நகைக் கடையில் வாங்கும் காயின்கள்...

பெரும்பாலான நகைக் கடைகள் தங்களது கடைகளில் வாங்கிய காயின் எனில் அதனைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கின்றன. ஆனால், மற்ற கடைக் காயின் எனில், அதற்குப் பதில் நகைதான் கொடுக்கிறார்களே தவிர, பணமாகக் கொடுப்பதில்லை. அரை கிராம் காயின் என்றாலும் அதை விற்க வேண்டும் என்றால், வாங்கிய கடை எங்கிருக்கிறதோ அங்கே போனால்தான் ஆச்சு என்பதுதான் நிலைமை.

என்ன காரணம்?

 
 நகைக் கடைக்காரர்களிடம் ஏன் தங்க காயின்களை வாங்கிக் கொண்டு பதிலுக்கு பணம் தருவதில்லை என்று கேட்ட போது, ''காயின்கள் என்று இல்லை, தங்க நகையாக இருந்தாலும்கூட அவற்றை வாங்கிக்கொண்டு நாங்கள் பணம் தருவதில்லை. காரணம், விற்க வருபவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா எனத் தெரிய வாய்ப்பில்லை. அவை திருடப் பட்டதாகக்கூட இருக்கலாம். ஒருவேளை அவை திருட்டுப் பொருளாக இருந்துவிட்டால் தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக் கொள்ள வேண்டிய தாகிவிடும். அதனாலேயே நாங்கள் தங்க காயின்களையோ நகைகளையோ பெற்றுக் கொண்டு பணம் கொடுப்ப தில்லை'' என்கின்றனர்.

வங்கிகளில் கேட்டால், ''நாங்கள் தங்க காயின்களை விற்பது வாடிக்கையாளர்களின் முதலீட்டு ஆர்வத்தை வளர்ப்பதற்காக மட்டுமே. எப்படி இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சம்பந்தப்பட்டவற்றை விற்கிறோமோ அதுபோலத் தான் தங்கத்தையும் விற்கிறோம். தங்கத்தை வாடிக்கை யாளரிடமிருந்து வாங்கிக் கொண்டு பணம் கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் நகைக் கடை நடத்தவில்லை'' என்கிறார்கள்.

ஆக, அவசரத்துக்குப் பயன்படும் என்ற நினைப்பில் தங்க காயின்களை வாங்குவதாக இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வதே நல்லது.
அதைவிட, கோல்டு இ.டி.எஃப். மூலம் யூனிட்களை வாங்கிச் சேமிக்கலாம். பணத்தேவை ஏற்படும்போது அந்த யூனிட்டுகளை விற்று எளிதாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் இல்லாமல் டீமேட் கணக்கு கூட தேவைப்படாத கோல்டு சேவிங்ஸ் திட்டம் வந்துள்ளது. இதன் மூலம்கூட முதலீடு செய்யலாம்!

விகடன் 

No comments:

Post a Comment