Search This Blog

Tuesday, September 06, 2011

விளையாட்டு செய்திகள்


ஃபெடரர், நடாலுக்குப் பிறகு டென்னிஸ் உலகை ஆளப்போகிறவர் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் என்றுதான் எல்லோ ரும் நினைக்கிறார்கள். ஆனால், முன்னாள் டென்னிஸ் சாம்பியன் சாம்பிராஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த 22 வயது டெல் பொட்ரோவைக் கை காண்பிக்கிறார். 2009 யு.எஸ். ஓபன் போட்டியில் நடால், ஃபெடரர் இருவரையும் தோற்கடித்து, பட்டம் வென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த பொட்ரோ, “எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் நிச்சயம் என்னால் முதலிடம் வரமுடியும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.


மார்ச்-ஏப்ரலில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்ற மைதானங்கள் பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் மைதானம் உலகத் தரத்துடன் கூடிய வசதிகள் கொண்டுள்ளது என்று பாராட்டியுள்ளது. மேலும், காலிறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.  



“இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணிக்கு ஓய்வு எதுவும் தராததால் டெஸ்ட் போட்டிகளில் முழுத் திறமையும் பயன்படுத்த முடியாமல் போனது,” என்று கேப்டன் தோனி பேட்டியளித்தார். இதனால் வருங்காலத்தில் முக்கியமான தொடர்களின்போது வீரர்களுக்குப் போதிய ஓய்வும் குறைந்தபட்சம் இரண்டு பயிற்சி ஆட்டங்களும் அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக பெண்கள் குத்துச்சண்டை போட்டியைச் சேர்த்திருப்பது நிச்சயம் இந்தியாவுக்குப் பலனளிக்கப் போகிறது. மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். “லண்டன் ஒலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன். அதற்கான கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்,” என்று சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார் மேரி கோம்.


2014 கால்பந்து உலகக்கோப்பை பிரேஸிலில் நடக்கிறது. ஆனால், மைதானங்கள் கட்டுவதிலும் இதர வசதிகளிலும் பல குறைபாடுகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேஸில் கால்பந்து பிதாமகனான பீலே இத்தகவலை மறுக்கிறார். “உலகக்கோப்பைக்குத் தயாராவதில் சில தடைகள் இருந்தாலும், போட்டி ஆரம்பிப்பதற்குள் நாங்கள் எல்லா வேலைகளையும் சிறப்பாக முடித்துவிடுவோம். நிச்சயம் மற்ற எல்லா உலகக்கோப்பைப் போட்டிகளையும் நாங்கள் ஓரங்கட்டுவோம். பிரேஸிலின் பெருமை, இப்போட்டியை வெற்றி பெற வைப்பதில்தான் இருக்கிறது,” என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். 


இந்தியக் கால்பந்துக்குப் புதிய பயிற்சியாளராக கோவாவைச் சேர்ந்த ஆர்மண்டோ கோலகோ நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய பயிற்சியாளர் பாப் ஹாட்டன், “இந்தியா பலம் பொருந்திய நாடுகளுடன் ஆடினால் தோல்வியினால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்,” என்பார். ஆனால், கோலகோவின் செயல்திட்டம் வேறு. “எத்தனை தோல்விகள் அடைந்தாலும், பலம் கொண்ட அணிகளோடு ஆடினால்தான் நம் திறமையை சீர்தூக்கிப் பார்க்க முடியும்,” என்கிறார்.

No comments:

Post a Comment