அண்ணா ஹசாரேவின் போராட்டம் உச்சத்தில் இருந்த போது, டி.வி.சேனல்கள்
கிளப்பிய பரபரப்பில் இன்னும் சில நாட்களில் லோக்பால் வந்துவிடும்; ஊழல்
ஒழிந்துவிடும்
என்று உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட, இப்போது லோக்பால்
மட்டும் போதாது; அது ஓர் ஆரம்பம். மற்றவற்றைப் பற்றியும் பேச வேண்டும்
என்கிறார்கள்.லோக்பால் எப்படி இருக்க வேண்டும்? தன்னுடைய மசோதாதான் அடுத்த ஒரு
மாதத்துக்குள் சட்டமாக வேண்டுமென்று அடம்பிடித்த அண்ணாவின் மசோதாவை இப்போது
முழுமையாக ஆதரிக்கப் பலரும் தயங்குகிறார்கள். மாநிலங்களுக்கான லோக்
ஆயுக்தாவை, மத்திய லோக்பாலின் கீழ் கொண்டுவரவேண்டுமென்று முழங்கியவர்கள்
எல்லாம்,
குஜராத் நிகழ்ச்சிக்குப் பிறகு தயங்குகிறார்கள். சுமார் ஏழரை வருடங்களாக
லோக் ஆயுக்தா நியமிக்கப்படாமலிருந்த குஜராத்தில், இப்போது ஆளுநர் தமக்குள்ள
அதிகாரத்தைக்
கொண்டு நியமித்திருக்கும் நபர், தம் அரசுக்கு எதிரானவர் என்று
ஆட்சேபிக்கிறார் முதலமைச்சர் நரேந்திர மோடி. லோக்பால்-லோக் ஆயுக்தா
சட்டங்களில் மத்திய-மாநில அரசுகளின்
அதிகார வரம்புகள் முக்கியமான பிரச்னையாக உள்ளன.
அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு மாபெரும் அந்தஸ்து கிடைக்க, அரசின்
தவறுகள் முக்கிய காரணமாக இருந்தன. முதல் தவறு, லோக்பால் மசோதாவைத்
தயாரிக்கும்
மத்திய அமைச்சர்கள் குழுவில் சிவில் சொசைட்டி உறுப்பினர்களைச் சேர்க்க
வேண்டும் என்று அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் சொன்ன
உறுப்பினர்களை
மட்டும் அதில் சேர்த்துக் கொண்டதாகும். அப்போதே நாட்டின் பல்வேறு
பகுதிகளிலும் இருக்கும் அறிஞர்கள், தலித், பெண்கள் பிரதிநிதிகள் என்று
பலரையும் சேர்த்திருந்தால்
அதை அண்ணா ஹசாரேவால் ஆட்சேபித்திருக்க முடியாது. அப்படிப்பட்ட குழுவே
சரியான குழுவாக இருந்திருக்க முடியும். அடுத்த தவறு அண்ணாவின் கைது. அவரைத்
தவிர
அவர் குழுவில் மற்றவர்களைத்தான் கைது செய்திருக்க வேண்டும். கிரண்பேடி
அதிகாரியாக இருந்திருந்தால் அப்படித் தான் செய்திருப்பார். யாருக்கும் வெற்றி தோல்வி என்று சொல்ல முடியாமல் முடிந்த அந்தப் போராட்டத்தின் முடிவில் தெரியவரும் உண்மைகள் என்ன?
1. எதையும் ஆழமாக விவாதிக்காமல், அள்ளித் தெளித்த கோலமாக ஒரு சட்டத்தை நிறை
வேற்றும்படி நிர்ப்பந்திப்பது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல; ஆபத்தானதும்
கூட.
லோக்பால், லோக் ஆயுக்தா எப்படி இருக்க வேண்டும், ஒற்றை அமைப்பு போதுமா,
அல்லது பல்வேறு அமைப்புகள் தேவையா என்பதைப் பற்றி அர்த்தமுள்ள ஆரோக்கியமான
யோசனைகள் வந்திருக்கின்றன. எல்லாம் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்க நிச்சயம்
சில மாதங்கள் தேவை.
2. ஊழல், முறைகேடு, ஒழுக்கமின்மை என்பவை நம் சமூகத்தின் அதிமுக்கியமான
பிரச்னைகள். ஆனால், அவற்றை எதிர்க்க வருபவர்கள் சந்தேகத்துக்கு
அப்பாற்பட்டவர்களாக
இருக்க வேண்டும்.
அண்ணா ஹசாரே குழுவினர் ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
அவற்றுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் மழுப்பலாகவே உள்ளன. முதலில்
அண்ணாவையே
எடுத்துக் கொள்வோம். அவர் காந்தி குல்லாய் அணிவதனாலேயே காந்தியவாதி ஆகிவிட
மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல.
காந்தி
மதுவிலக்கை ஆதரித்தது போலவே அண்ணாவும் ஆதரிக்கிறார். ரேலகான் சித்தி
கிராமத்தில் மதுவை ஒழிக்க அண்ணா கையாண்ட முறையை ஒருபோதும் காந்தி
பின்பற்றியதில்லை,
பின்பற்றவும் மாட்டார். குடிகாரர்களை ஊர்க் கோயில் பொது மண்டபத் தூண்களில்
கட்டி வைத்து சவுக்கால் அடிக்கச் செய்தவர் அண்ணா.அவரது அறக்கட்டளைக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த
நீதிபதி, பிற குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்த போதும் ஒன்றை தவறென்று
சுட்டிக்
காட்டியிருக்கிறார். ரேலகான் சித்தி கிராமத்தில் அண்ணா ஹசாரேவின் பிறந்த
நாளைக் கொண்டாட சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்களை அவரது தொண்டு நிறுவனம்
செலவிட்டிருக்கிறது. காந்தி, ஒருபோதும் இதைச் செய்யமாட்டார். ஹரிலாலுக்கு
ஆசிரமப் பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து கடன் கொடுத்ததற்காக
மணிலாலைக்
கடுமையாகத் தண்டித்தவர் காந்தி.
அண்ணா ஹசாரே, தனி நபர் வழிபாட்டை ஊக்குவிப்பவர் என்பதில் எனக்கு எந்தச்
சந்தேகமும் இல்லை. இந்தியாவில் பல பெரும் ஊழல்களுக்குப் பின்னால் தனிநபர்
வழிபாடு
முக்கியமானதாக இருக்கிறது. தமிழகத்திலேயே எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா,
வடக்கே மாயாவதி போன்றவர்கள் அவரவர் கட்சிகளால் தனிநபர் வழிபாடு
செய்யப்பட்டு
பிரம்மாண்டமாக்கப்பட்டு அந்த நிழலில் ஊழலில் திளைத்தவர்கள். மாற்று
அரசியலை முன்வைக்கும் எவரும் தனி நபர் வழிபாட்டுக்கு உடன்பட மாட்டார்கள்.கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாயாவதியும் கோடிக்கணக்கில் செலவு செய்து
பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்பது, அவர்களை எதிர்க்கும்(?) அண்ணா ஹசாரே
சில
லட்சம் பிறந்த நாள் செலவு செய்வதை நியாயமாக்கிவிடாது.அண்ணா ஹசாரேவுடன் தீவிரமாகச் செயல்படுபவர் அரவிந்த் கேஜ்ரிவால். மத்திய
அரசின் வருமானவரித் துறையில் அதிகாரியாக வேலை பார்த்தவர். இவர் அரசுக்கு
கட்ட
வேண்டிய பணத்தைக் கட்டாமல் ஏமாற்றியதாக இப்போது குற்றச்சாட்டு. கேஜ்ரிவால்,
மேற்படிப்புக்கு அரசு வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாடு
சென்றார்.
அந்த விடுமுறைக் காலத்துக்கு அவருக்குச் சம்பளம் தரப்பட்டது.
அரசு விதிகளின்படி இவ்வாறு சம்பளத் துடன் விடுமுறை தரப்பட்டால், திரும்பி
வந்ததும் குறைந்தது மூன்றாண்டுகள் அரசில் பணியாற்றுவேன் என்று ஒப்பந்தப்
பத்திரத்தில்
ஊழியர் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் மூன்று லட்ச ரூபாய் கட்ட
வேண்டும். கேஜ்ரிவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சென்றார். திரும்பி
வந்ததும் இரு
வருடங்கள்தான் வேலை செய்தார். அடுத்து சம்பளமில்லாத லீவு போட்டுவிட்டுப்
போய் அப்படியே ராஜினாமா செய்துவிட்டார். சம்பளமில்லாத லீவுக் காலத்தையும்
அவர் வேலை
செய்ததாகக் கருத வேண்டும் என்பது கெஜ்ரிவால் வாதம்.இதை அரசு ஏற்கவில்லை; அவர் ராஜினாமாவையும் ஏற்கவில்லை. சம்பளப் பணத்தை
வட்டியுடன் திருப்பிக் கட்டும்படி அண்மையில் அரசு நோட்டீஸ் அனுப்பியது.
உடனே
அண்ணாவின் ஆதரவாளர்களை அரசு ஒடுக்குகிறது என்று கூப்பாடு போடு கிறார்கள்.
கேஜ்ரிவால், கிரண்பேடி... தொடர்புள்ள தொண்டு நிறுவனங்கள் அனைத்தும்
கோடிக்கணக்கில்
வெளி நாட்டு நன்கொடைப் பணம் வைத்திருக்கின்றன.
கிரண்பேடி, தன் மகள் சாய்னாவுக்கு
சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பெற்றார். ஆனால்,
இப்போது கிரண்பேடியின் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் சாய்னா மருத்துவப்
படிப்பைத் தொடர்ந்து
படிக்கவில்லை. ஓராண்டிலேயே விட்டு விட்டு சட்டம் படித்து வீடியோ
தயாரிப்பாளராகி விட்டார். இதனால் வேறோரு தகுதியுள்ள மாணவிக்குக்
கிடைத்திருக்கக்கூடிய இடம்
வீணாகப் போய்விட்டது. இது ஒரு சாதாரண தவறாகத் தோன்றலாம். ஆனால்,
பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள், முட்டாள்கள் என்று
மேடையில்
நடனம் ஆடிக் கிண்டல் செய்யும் கிரண்பேடி செய்யும்போது அசாதாரணத் தவறாகி
விடுகிறது. அண்ணா ஹசாரேவின் பத்து நாள் உண்ணாவிரதத்துக்கு ஐம்பது லட்ச ரூபாய்க்கு
மேல் ஆகியிருக்கிறது. எங்கிருந்து இந்தப் பணம் வந்தது என்ற கேள்விகள்
எழுந்த பிறகுதான்
அண்ணா குழுவினர் தங்களுக்கு வந்த நன் கொடை விவரங்களை வெளியிட்டனர்.
பெரும் தொகையாக 25 லட்ச ரூபாய்களை அளித்திருப்பது ஜிண்டால் அலுமினியம்
கம்பெனி. இது ஏற்கெனவே பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிறுவனம்.
ஆந்திரப்
பிரதேசத்தில் ஆதிவாசிகள் பகுதிகளில் பாக்சைட் எடுப்பதற்கு ஜிண்டாலுக்கு
அனுமதி தருவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல விதிகளை வளைத்திருக்கின்றன.
அதை எதிர்த்து
பல வருடங்களாக சூழல் ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். ஊழல் செய்வோரைத்
தூக்கில் போடுவேன் என்றெல்லாம் அதிரடியாகப் பேசும் அண்ணா, ஏன் இத்தகைய
கம்பெனிகளிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறார்?எவ்வளவு மழுப்பினாலும் எவ்வளவு மூடி மறைத்தாலும், எவ்வளவு வரலாற்றைத்
திரித்து காந்தியத் தத்துவங்களின் துணை கொண்டு சில ‘அறிவுஜீவிகள்’
காந்திக்கு
நிகரானவர் அண்ணா என்று காட்ட முயற்சித்தாலும், அவரின் போராட்டம் மன்மோகனின்
காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தரும் ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே சில
சக்திகளால்
இயக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.ஊழலில் ஊறியிருக்கும் காங்கிரஸை வெற்றிகரமாக எதிர்க்க அதே அளவு ஊழலில்
திளைத்திருக்கும் பி.ஜே.பிக்கு இனி பலமில்லை என்ற புரிதலின் அடிப்படையில்,
இந்த
முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பி.ஜே.பிக்கு சார்பான, அதே சமயம்
பி.ஜே.பிக்கு வெளியில் இருக்கும் உதிரி இந்துத்துவ சக்திகளுக்குப் புதிய
ஒருங்கிணைப்பு வடிவமாக
அண்ணா ஹசாரேவின் போராட்டம் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த சில மாதங்களில்
தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொதுவாக எந்த அரசியல் சார்பும் இல்லாமல்,
ஊழலால்
வெறுப்புற்றிருக்கும் படித்த மேல்நடுத்தர வர்க்கத்து இளைஞர்களை
(எழுபதுகளில் தன் பக்கம் ஈர்க்க முடிந்த) இப்போது ஈர்க்க முடியாத
இடதுசாரிகளின் பலவீனம் இதற்கு
வசதியாக அமைந்து விட்டது.
3. கடைசியாக முக்கியமான பாடம் : ஊழலை ஒழிக்க லோக்பால் அல்ல, இன்னும்
எத்தனை சட்டங்கள் வந்தாலும் போதாது. அந்தச் சட்டங்களை நிறைவேற்றும்
பொறுப்பில்
இருக்கும் மனிதர்களின் தரம் ஏன் மோசமாக இருக்கிறது என்பதே முதன்மையாக
ஆராயப்படவேண்டும். நம் ஆரசியல் அமைப்பே எப்படி ஊழலுக்கு வழி வகுக்கிறது
என்பது
ஆராயப்பட வேண்டும். உண்மையில் ஊழலின் வேர்கள் எங்கே என்று கவனிப்பதே
அதிமுக்கியமானது.
இந்த வார வேண்டுகோள்!
மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி கொடுக்கும் ஜெயலலிதா அரசு, அந்த
மாணவர்களின் ஆசிரியர்களுக்குக் கூடவே சலுகை விலையிலேனும் கணினி
வழங்கவேண்டும்.
இந்தக் கணினிகளில் லைனக்ஸ் உள்ளிட்ட இலவச உரிமமற்ற திறந்த மென்பொருட்கள்
இயங்கும் வசதி தரப்படவேண்டும்.
இந்த வாரப் பூச்செண்டு!
கடந்த இருபதாண்டுகளில் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட டி.வி.
சேனல்களில் மாறுபட்ட முயற்சியாக வந்தது ஒன்றே ஒன்றுதான்- அது மக்கள்
தொலைக்காட்சி. அதன் பின்னர் இன்னும் தரத்துடனும் எதிர்பார்ப்புகளைத்
தூண்டும் விதத்திலும்
வந்திருக்கும் ‘புதிய தலைமுறை’ சேனலுக்கு இ.வா.பூச்செண்டு.
No comments:
Post a Comment