Search This Blog

Tuesday, September 27, 2011

அமெரிக்கா அதிரடி : பணக்காரர்களுக்கு தனி வரி!


''நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்பைவிட இப்போது  நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கமோ நெருக்கடியில் இருக்கிறது. இந்நிலையில் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களிடம் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் ஏன் வசூலிக்கக் கூடாது?''

கடகடவென ஆடிக் கொண்டி ருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சற்று தூக்கி நிறுத்த இப்படி ஒரு 'பளிச்’ ஐடியாவைச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தையின் பிதாமகனான வாரன் பஃபெட்!வாரன் பஃபெட்டின் இந்த யோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் இனி தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியை வரியாகச் செலுத்தும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தத் திட்டத்திற்கு 'பஃபெட் ரூல்’ என்றே பெயரும் வைத்துவிட்டார். இத்திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் அனுமதி அளித்துவிடவில்லை. என்றாலும், இத்திட்டம்  முழுமையாக வெற்றி அடைந்தால் அதன் மூலம் குறிப்பிடுகிற அளவுக்கு வரி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஒபாமா.


அமெரிக்க தொழிலதிபர்களைப் பொறுத்தவரை அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீதான அக்கறையை, தேவை ஏற்படும்போது எல்லாம் வெளிப் படுத்துகிறார்கள். பில்கேட்ஸ் உலகின் மிகப் பெரும் பணக்காரராக அறியப்பட்ட நாட்களில் தான் அவருடைய 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை உலகின் மிகப் பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியது. ஏழை நாடுகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவை களுக்குத் தேடித் தேடி உதவத் தொடங்கியது.

ஆனால், நம்மூரில்?

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித் திருக்கிறது. 'பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி’யின் ஆய்வின்படி, 2000-க்குப் பின்னர் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11% என்கிற அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 'ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை உலகெங்கும் ஒரு பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.8 ஆயிரம் கோடி) மேல் சொத்துகள் வைத்து இருப்போரின் பட்டியலை வெளியிட்டது. ஏறத்தாழ ஆயிரம் பேர் கொண்ட அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 49. இந்த 49 பேருடைய மொத்த சொத்து களின் மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10.67 லட்சம் கோடி!).

அதே சமயம் இந்திய அரசின் 2011-12-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியில்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு 10.57 லட்சம் கோடி ரூபாய்தான். அதாவது, இந்திய அரசாங்கத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருமானத்தின் அளவுக்கு இந்த 49 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இருக்கிறது! ஆனால், நம் நாட்டில் வரி செலுத்துவதில் பணக்காரர் களின் பங்கு எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறது? இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. வருமான வரி செலுத்துபவர்கள் 4 சதவிகிதத்துக்கும் குறைவு. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், மொத்த வரியின் பங்கு சுமார் 10 சதவிகிதம்தான். இந்தியாவில் எட்டு லட்ச ரூபாய்க்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 30% விதிக்கப்படுகிறது. சாஃப்ட்வேர் கம்பெனியில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவருக்கும் 30% வரி; அவர்போல பல நூறு பேருக்கு வேலை தருகிற பிஸினஸ்மேனுக்கும் அதே 30% வரிதான். இதை மாற்றி நம் நாட்டிலும் பெரும் பணக்காரர்களுக்கு எனப் பிரத்யேக வரி ஏன் விதிக்கக் கூடாது அமெரிக்கா ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் என்று வரையறுத்திருப்பதுபோல, நாம் ஒரு கோடி ரூபாய் என ஒரு தொகையை நிர்ணயித்து, அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்குப் புதிய வரிவிதிப்பு முறையைக் கொண்டுவருவது குறித்து யோசிக்கலாமே! பணவீக்கமும் விலைவாசி உயர்வும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நாட்டை விரட்டிக் கொண்டு இருக்கும் சூழலில், அமெரிக்கா செய்வது போல நாமும் ஏன் செய்யக் கூடாது?


No comments:

Post a Comment