Search This Blog

Tuesday, September 20, 2011

அறிவியல் காரணங்கள்

துருவப் பிரதேசத்தில் வாழும் விலங்குகளின் ரோமம் வெள்ளையாக இருப்பது ஏன்?


துருவப் பகுதிகளில் வாழும் ஜீவராசிகளுக்கு விரோதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இயற்கை அளித்த வரப்பிரசாதம், இந்த வெள்ளை ரோமம். துருவப் பகுதிகளின் சூழ்நிலை, உறைபனியின் காரணமாக வெண்மையாகக் காணப்படும். அந்த வெண்மையோடு வெண்மையாக விலங்குகளை அடையாளம் காண முடியாதபடி, செய்கிறது இந்த வெள்ளை ரோமம். இங்கு வாழும் பல பிராணிகளுக்கு, அவற்றின் ரோமம் கோடையில் நிறம் மாறக்கூடியது. பருவ நிலைக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப, இவற்றின் ரோமங்கள் நிறமாற்றம் பெறுகின்றன. துருவ முயல், கீரி இனத்தைச் சேர்ந்த ஸ்டோட் (stoat) போன்ற பிராணிகளின் ரோமம், குளிர்காலத்தில் வெண்மையாகவும், கோடையில் செம்பழுப்பாகவும் மாறும். 

நெடுஞ்சாலைகளில் வளைவான இடங்களில், ஒரு பக்கம் மட்டும் சாய்வாக சாலைகள் இருப்பது ஏன்?


வளைவான சாலைகளில் வாகனங்கள் வேகமாகத் திரும்பும்போது, மைய விலக்கு விசை தோன்றும்; அவை வாகனங்களை வெளிப்புறமாகத் தள்ளும். அதைத் தவிர்ப்பதற்காகவே சாலை சற்றே சாய்வாக அமைக்கப்படுகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாக்கப்படும். இதுபோன்றே ரயில் தண்டவாளங்களும், வளைகிற இடங்களில் இவ்வாறு சாய்வாகக் காணப்படும்.

இரும்பு ‘துரு’ பிடிப்பது ஏன்?


காற்றுக்கும், இரும்புக்கும் உள்ள உறவு அப்படி. சாதாரணமாக வெளியில் இருக்கும்போது இரும்பு ஒன்றும் ஆவதில்லை. ஆனால் காற்றில் ஈரம் இருப்பின், அது வினை புரிகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஆக்ஸிஜன், ஈரப்பதம், இரும்பு ஆகியவற்றின் ரசாயனக் கூட்டு வினைதான். இதன் விளைவாக ஃபெரஸ் ஆக்ஸைடு உருவாகிறது. இந்த வினைபாட்டை ‘துரு’ (Rust) என்கிறோம். இதனைத் தவிர்க்கக் கண்டுபிடிக்கப்பட்டதே, எனாமல் பெயின்ட். இது இரும்பு மீது ஈரப்பதம் பாதிப்பதைத் தடுக்கின்றது. இதனால் பல காலம் துரு ஏறாமல் இரும்பைப் பாதுகாக்கலாம். 




No comments:

Post a Comment