Search This Blog

Monday, September 26, 2011

தமிழ் சினிமாவின் கிளாடியேட்டர்! - ‘கரிகாலன்’


கரிகாலனைப் பத்தி சொல்லுங்க?

 “நாம பள்ளி சரித்திரப் பாடத்துல படிச்சோமே அதே கரிகால் சோழனைப் பத்தின கதைதான் இது. நிஜமான கதாபாத்திரமாக இருந்தாலும்கூட, அதைத் திரையில் காட்டும் போது, சுவாரசியமில்லாத ஒரு வறண்ட கதையாக - டாக்குமென்டரி போல் காட்ட முடியாதில்லையா? அதனால, கொஞ்சம் ஃபான்டசி கலந்து கரிகால்சோழன் கதையைச் சொல்லப் போறேன். இன்று நம்மால் பார்க்கமுடியாத ஒரு காலக்கட்டத்தை, ஊரை, சூழ்நிலையை, கதாபாத்திரங்களை நான் இந்தப் படத்தில் காட்டப் போகிறேன்.” 

“நாம பள்ளி சரித்திரப் பாடத்துல படிச்சோமே அதே கரிகால் சோழனைப் பத்தின கதைதான் இது. நிஜமான கதாபாத்திரமாக இருந்தாலும்கூட, அதைத் திரையில் காட்டும் போது, சுவாரசியமில்லாத ஒரு வறண்ட கதையாக - டாக்குமென்டரி போல் காட்ட முடியாதில்லையா? அதனால, கொஞ்சம் ஃபான்டசி கலந்து கரிகால்சோழன் கதையைச் சொல்லப் போறேன். இன்று நம்மால் பார்க்கமுடியாத ஒரு காலக்கட்டத்தை, ஊரை, சூழ்நிலையை, கதாபாத்திரங்களை நான் இந்தப் படத்தில் காட்டப் போகிறேன்.”  

கரிகால் சோழனைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

“நம் ஊரில் கல்லணையையும், கரிகால் சோழனையும் தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா? தென்னிந்தியா முழுவதும் அவர் நன்றாக அறியப்பட்டவர். சோழ மன்னர்களில், கரிகால் சோழன் ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு கேரக்டர். ஆகவே, கரிகாலனை என் ஹீரோவாக ஆக்கினேன்.”


கதைக்கு எங்கே ஆதாரங்கள் பிடித்தீர்கள்?

“ரொம்பக் கஷ்டப்பட்டோம். கரிகால் சோழன் இவ்வளவு பெரிய மன்னர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், அவரைப் பற்றிய சரித்திரபூர்வமான விஷயங்களைக் கணிசமான அளவில்கூட நம் முன்னோர்கள் பதிவு செய்யவில்லை. நம் பாடப் புத்தகங்களில் சில தகவல்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. புறநானூறில் இரண்டு பாடல்கள் கரிகால் சோழனைப் பற்றி இருக்கின்றன. மற்றபடி பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலன் பற்றி வருகிறது. சாண்டில்யனின் யவன ராணியில் கொஞ்சம் விஷயம் கிடைத்தது. நீலகண்ட சாஸ்திரி எழுதிய புத்தகங்களில் சில உபயோகமான தகவல்கள் கிடைத்தன. விஷயங்களோடு, கற்பனையான சில விஷயங்களைச் சேர்த்து சினிமாவுக்குக் கதை எழுதி இருக்கிறேன்; ‘கரிகாலன்’ படத்தின் ஸ்கிரிப்ட்டுக்குப் பின்னால், சுமார் பத்து பேர்களின் ஒரு வருட கால உழைப்பு இருக்கிறது.”
விக்ரம் எப்படி கரிகாலன் ஆனார்?

“இந்தக் கதையின் ஹீரோவுக்குத் தேவையான கம்பீரமும், களையும் விக்ரமுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவே, ஒரு தயாரிப்பு நிர்வாகி மூலமாக விக்ரமைச் சந்தித்தேன். கதையின் அவுட் லைனைச் சொன்னதோடு, இந்தப் படத்தில் விக்ரமின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விஷுவலாக ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்த மாத்திரத்தில் ரொம்ப இம்பிரஸ் ஆகி, என் படத்தில் நடிக்கச் சம்மதித்தார். படத்தின் ஸ்டில்ஸ்களைப் பார்த்தாலே, விக்ரமை நான் தேர்வு செய்தது ரொம்ப கரெக்ட் என்று தெரியும். விக்ரம் வெறும் நடிகர் மட்டுமில்லை; அவருக்கு கேமரா கோணங்கள், லைட்டிங் பற்றி ஆழமான அறிவு உண்டு. அவர் ஒரு முழுமையான சினிமா கலைஞர். படம் பத்தின சில விஷயங்களை இப்போதைக்கு நான் ரகசியமாகவே இருக்கட்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கிறபோது, கிளாடியேட்டர் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்க்கிற மாதிரி இருக்கும்.”

சோழர் காலத்து இடங்களிலேயே ஷூட்டிங் நடத்தப் போகிறீர்களா?

“அப்படி இல்லை. இந்தியாவின் பல பகுதிகளிலும் லொகேஷன்கள் தேடி அலைந்திருக்கிறோம். தொல்பொருள் ஆய்வுத் துறையில் இருக்கும் என் நண்பர்கள் சிலர், ஏராளமான சரித்திரபூர்வமான இடங்களைப் பற்றிச் சொன்னார்கள். பல காட்சிகளுக்கு செட் போட வேண்டி இருக்கும். ஷூட்டிங் முடியவே டிசம்பர் மாதமாகிவிடும்.”

சென்னை காசிமேட்டில் படத்தின் ஷூட்டிங் நடந்ததாமே! கரிகாலனுக்கும், காசிமேட்டுக்கும் என்ன சம்பந்தம்?

“கடலுக்கும், கரிகாலனுக்கும், காவிரிப் பூம்பட்டினத்துக்கும், கரிகாலனுக்கும் சம்பந்தம் உண்டே! அதே மாதிரிதான் என் சினிமா கரிகாலனுக்கும், காசிமேட்டுக்கும் சம்பந்தம் உண்டு.”

மூணு ஹீரோயின்களாமே?

“ஆமாம்! சல்மான் கானுக்கு ஜோடியாக இந்திப் படத்தில் நடித்துள்ள சரைன் கான், ரத்த சரித்திரா படத்தில் விவேக் ஓபராய்க்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே மற்றும் மித்ரா குரியன் என்று மூன்று ஹீரோயின்கள். ஓர் அயல்நாட்டுப் பெண், ஒரு டான்சர், ஒரு கிராமத்துப் பெண் என்று மூன்றுவிதமான கேரக்டர்களில் இவர்கள் நடிக்கிறார்கள்.”

“தமிழ் சினிமாவில் இப்போது சி.ஜி. என்று செல்லமாக அழைக்கப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், இயக்குனருக்கு இணையான இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது. ஒரு சினிமாவில் எந்தக் காட்சியில் எங்கே, எந்த அளவுக்கு சி.ஜி. பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது துளிகூடத் தெரியாத வகையில் அது பயன்படுத்தப்படுவதால் சினிமாவில் எதை வேண்டுமானாலும், சி.ஜி. பயன்படுத்திக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிஜம் அதுவல்ல. நான் இயக்கும் ‘கரிகாலன்’ படத்தில் பயன்படுத்தப்போவது வெறும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மட்டுமில்லை. ஆர்ட் டைரக்ஷன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேடிரானிக்ஸ் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான். இந்தத் தொழில் நுட்பம்தான் ‘எந்திரன்’ படத்தில் பயன்படுத்தப்பட்டது.

அண்மையில் தெலுங்கில் வந்த ‘அனகனகா ஒக தீரடு’ அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனத் தயாரிப்பு. ‘எந்திரன்’ படத்தில் பயன்படுத்திய டெக்னாலஜியைத்தான் அதிலும் பயன்படுத்தினார்கள். படம் சூப்பர் ஹிட். இந்தப் படங்களில் செய்ததைத்தான் ஹாலிவுட்டிலும் செய்கிறார்கள். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேடிரானிக்ஸ், திரி டி எஃபெக்ட்ஸ் விஷயங்களில் நம் நாட்டு இளைஞர்கள் கில்லாடிகள். இவர்கள் வேகமாக வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். செலவிலும் சிக்கனம். எனவே இந்த வேலைகள் எல்லாம் ஹாலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்கிறார் ‘கரிகாலன்’ படத்தின் இயக்குனரான கண்ணன். கரிகாலனாக நடிப்பது நம்ம சீயான் விக்ரம்.
கண்ணனுக்கு இதுதான் முதல் படம். இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, சினிமாத் துறைக்கு வந்தவர். ‘அறை எண் 302ல் கடவுள்’, ‘சிவகாசி’, ‘அந்நியன்’, ‘எந்திரன்’ என்று பல படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேடிரானிக்ஸ், திரி டி எஃபெக்ட்ஸ் விஷயங்களில் பணியாற்றிய அனுபவசாலி. அவரது லட்சியம் டைரக்ஷன்தான். எனவே, தாமாகவே கேமரா, எடிட்டிங் போன்ற சினிமாவின் பல்வேறு சமாச்சாரங்களையும் ஆர்வமுடன் தெரிந்துகொண்டார். கடைசியில், தமக்கு பலம் என இவர் நினைக்கும் அனிமேடிரானிக்ஸ் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு கதையை ரெடி பண்ணி, டைரக்டர் ஆகிவிட்டார்.










1 comment: