Search This Blog

Thursday, September 01, 2011

விநாயகர் சதுர்த்தி - வினை தீர்க்கும் விநாயகனே..!


'ஆனை முகம், பானை வயிறு, சூரியன் - சந்திரன் - அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்த ஐந்து கரங்கள், குட்டைக் கால்கள்... மொத்தத்தில் பிரணவ தத்துவத்தை உணர்த்தும் ஞான வடிவம்- பிள்ளையார்! தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் ஆதலால் விநாயகன் என்று திருநாமம் அவருக்கு! அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தி!''தும்பிக்கையான் துணையிருப்பார்! 

''வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததி சிறக்கவும்... சதுர்த்தி தினங்களில் பிள்ளையாரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவது ரொம்பவே விசேஷம். ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய நன்னாளில் வருவது விநாயகர் சதுர்த்தி. இந்தத் திருநாளில்தான் பிள்ளையார் அவதரித்தார்.ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும்  சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளி-ஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி. ஒளி வட்டம்- பிந்து; தண்டம் (ஒலி) - நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து 'ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, 'ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார். அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபட, அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்''

'சரி... விநாயகர் சதுர்த்தியில் அவரை வழிபடுவதற்கான நியதிகள் என்னென்ன?’  


''மகள் பார்வதிக்கு இமவான் விவரித்ததாக, விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து விளக்குகின்றன புராணங்கள். இந்த நாளில், அதிகாலையில் நீராடி, நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்! அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தன-குங்கும திலகமிட்டு  அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக பழங்கள், அச்சுவெல்லம், அவல், பொரிகடலையுடன், சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர்...

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷ§ சர்வதா...

 எனப்போன்ற விநாயகர் ஸ்லோகங்கள், துதிகள் பாடி, தூப- தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம். 



விநாயக சதுர்த்தியன்று ஆரம்பிக்கும் பூஜையை புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை கடைப்பிடிப்பவர்களும் உண்டு. இப்படி ஒருமாத காலம் வழிபட்டு,  பிறகு விநாயக விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைப்பார்கள். மறுநாள் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். ஒருமாத காலம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், விநாயக சதுர்த்தியன்று ஒருநாள் மட்டுமாவது, உளமார்ந்த பக்தியுடன் விநாயகரை வழிபட, உன்னத பலன்கள் கிடைக்கும்'' ''விநாயக சதுர்த்தி திருநாளில் பிள்ளையாரை வீட்டில் வழிபடுவதுடன், தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் விசேஷ பலன் தரும்.


அருந்ததி படைத்த மோதகப் பிரசாதம்!

ர்க்கரை- கடலை பருப்பால் ஆன பூர்ணத்தை, தண்ணீர் கலந்து பிசைந்த அரிசி மாவில் பொதிந்து உருண்டையாக்கி வேக வைத்து, மோதகம் செய்வார்கள். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கினால், நம்முள்ளே இனிப்புப் பூர்ணமாய் இறைவன் எழுந்தருள்வான் எனும் தத்துவத்தை உணர்த்துவதே, மோதகம் எனும் கொழுக்கட்டை பிரசாதம். அதுசரி, பிள்ளையார் பெருமானுக்கு முதன் முதலில் மோதகம் படைத்து வழிபட்டது யார் தெரியுமா? வசிஷ்டரின் மனைவி அருந்ததி! 

அருகம்புல் எதற்கு?

தேவர்களைக் கொடுமைப்படுத்திய அனலாசுரனை அப்படியே விழுங்கிவிட்டார் விநாயகர். அதனால் ஏற்பட்ட வெம்மையால் அவரின் திருமேனி தகித்தது. வெப்பத்தின் தாக்கம் உலகையும் வருத்தியது. ஆனைமுகனை குளிர்வித்தால்தான் எல்லாம் சரியாகும் என முடிவு செய்தனர் தேவர்கள். குளிர்ந்த நீராலும், பாலாலும் விநாயகரை அபிஷேகித்தனர்; வெப்பம் தணியவில்லை. குளிர் சந்திரனையே அவர் திருமுடியில் வைத்தனர்; அப்போதும் பலனில்லை. பிறகு முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புல்லை எடுத்து, விநாயகரின் திருமேனியில் சார்த்தினார்கள். வெம்மை தணிந்தது. விநாயகர் அகமகிழ்ந்தார். அன்று முதல் அருகம்புல் அவருக்கு விருப்பமான ஒன்றாயிற்று.  

விநாயகர் சதுர்த்தி பூஷை செய்ய உகந்த நேரம்

ந்த வருடம் ஆவணி மாதம் (ஹஸ்த நட்சத்திரம்; சுக்லபட்ச சதுர்த்தி தினம்) 15-ஆம் நாள், வியாழக்கிழமை (செப்டம்பர்-1)  விநாயக சதுர்த்தி வருகிறது. அன்று காலை 7:36 முதல் 8:36 மணிக்குள் வழிபாடு செய்வது உத்தமம்; இயலாதவர்கள் 9:00 முதல் 12:00 மணிக்குள் பூஜித்து வழிபடலாம்.  



No comments:

Post a Comment