Search This Blog

Saturday, February 04, 2012

தேவைப்படும் 3 சட்டத் தீர்வுகள்! - ஓ பக்கங்கள், ஞாநி

1. அரசியல்:


இந்தியாவில் ஊழலை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ லோக்பால் மாதிரி புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களில் போதிய திருத்தங்கள் செய்தாலே போதுமானது என்ற என் கருத்தை மறுபடியும் வலுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அரசின் முன் அனுமதி தேவை என்ற விதி தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்துள்ளனர்.இதுவரை இந்த விதியின் கீழ் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய லேசில் அனுமதி தரமாட்டார்கள். சி.பி.ஐ. மட்டும் 169 அதிகாரிகள் மீது வழக்குப் போட அனுமதி கேட்டுக் காத்திருக்கிறது. அனுமதியை இழுத்தடிக்கும் அமைச்சகங்களிலேயே முதன்மையானது நிதி அமைச்சகம் தான். மத்திய அரசின் அனுமதிக்காக டிசம்பர் 2010 வரையிலும் முடிவு தெரியாமல் காத்திருந்த விண்ணப்பங்கள் மட்டும் 236. இதே போல வெவ்வேறு மாநில அரசுகளின் முன்பும் நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் காத்திருக்கின்றன.இந்தச் சூழலில்தான் அரசியல் பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கில் நீதிபதிகள் சிங்வியும் கங்குலியும் எந்த விண்ணப்பத்தையும் நான்கு மாதங்களுக்கு மேல் பதில் சொல்லாமல் வைத்திருக்கக்கூடாது என்றும் அப்படி வைத்திருந்தால், வழக்குத் தொடுக்க அனுமதி தரப்பட்டு விட்டதாகவே சட்டப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர். தேவைப்பட்டால் இதற்கான சட்டத் திருத்தங்களை ஊழல் தடுப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம் மூலம் செய்யும்படி அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார் கங்குலி. ஒரு அதிகாரி மீதோ அமைச்சர் மீதோ ஊழல் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டால், அதுபற்றிப் பூர்வாங்க விசாரணை நடத்தியபின்தான் முடி வெடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனுவில் உள்ள விவரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் அதற்குப் பின் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையும் கேட்கத் தேவையிருந்தால் இன்னும் ஒருமாதம் எடுத்துக் கொள்ளலாம். சுப்ரமணியன் சுவாமி 2008 நவம்பர் 29ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டார். மன் மோகன்சிங் இதற்குப் பதிலளிக்கவே 16 மாதங்கள் ஆயிற்று. இதை எதிர்த்து சுவாமி தில்லி உயர்நீதி மன்றத்தில் போட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் மீது சுவாமி உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில்தான் இப்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ள தீர்ப்பு வந்திருக்கிறது. சுவாமியின் கடிதத்தை பிரதமர் அலுவலகம் ராசாவுக்கே அனுப்பி வைத்ததையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஊழல் வழக்குப் பதிவு செய்யும் அனுமதி மூன்று மாதங்களுக்குள் தரப்பட வேண்டும் என்பது லோக்பால் மசோதாவில் ஓர் அம்சம். இன்னும் லோக்பால் சட்டமாகவில்லை. அதே விஷயத்தை எளிதாக இப்போது உள்ள சட்டத்திலேயே ஒரு திருத்தம் மூலம் செய்து விடலாம் என்பதை இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காட்டுகிறது. இதுபோல பல லோக்பால் அம்சங்களை இருக்கும் சட்டங்களின் திருத்தம் மூலமே கொண்டு வர முடியும். ஒரு வழக்கை எத்தனை காலத்துக்குள் விசாரித்து முடிவு தெரிவிக்க வேண்டும் என்ற வரையறையையும் கொண்டு வர வேண்டும்.சுப்பிரமணியன் சுவாமி தமக்கென்று கட்டுக்கோப்பான ஒரு கட்சியோ தொண்டர்களோ வோட்டோ ( கொள்கையோ ?!) இல்லாத ஒரு அரசியல்வாதியானபோதும், மக்கள் நலனுக்குரிய இந்தத் தீர்ப்பைப் பெற்றிருப்பதற்காக அவருக்கு இ.வா.பூ.


2.கல்வி:


கல்லால் அடித்து சிவனை வழிபட்ட கதைக்குரிய சாக்கிய நாயனாரின் வம்சாவளியாக சென்னைக் கல்லூரி மாணவர்கள் சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.  பஸ் டே, பேருந்து விழா என்றெல்லாம் அடிக்கடி சென்னையிலும் சில ஊர்களிலும் நடக்கும் தெருவிழாக்கள் முதன்முதலில் ஆரம்பித்தது, அண்ணாவின் ஆட்சியில் நடந்த ஒரு மோதலுக்குப் பின்னர்தான். அப்போது சென்னையில் பேருந்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டபோது, அண்ணா மிகுந்த மனவேதனைக்குள்ளானார். பதற்றமான சூழல் தணிந்தபின்னர், சில மாதங்கள் கழித்து, சில காவல் அதிகாரிகளும், சில போக்குவரத்து அதிகாரிகளும் சேர்ந்து மாணவர்- பஸ் ஊழியர் நல்லெண்ணத்தை வளர்க்க முக்கியமான பஸ் ரூட்களில் மாணவர்களைக் கொண்டு ‘பஸ் டே’ கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். இதெல்லாம் சுமார் 40 வருடப் பழைய கதை.டிரைவருக்கும் கண்டக்டருக்கும் மாலை போடுவது, பஸ் பயணிகள் எல்லாருக்கும் இனிப்பு வழங்குவது, பஸ்சில் தோரணங்களும் வாழை மரமும் கட்டுவது என்றெல்லாம் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் ‘பஸ் டே’ நடந்தது சில வருடங்களில்; சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான். ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே ‘பஸ் டே’ அதன் அசல் நோக்கத்தையும் உணர்வையும் இழந்தது. கும்பல் மனோ பாவத்தில் தெருவில் ரகளை செய்வதும், குறிப்பாக பஸ்சில் வரும் பெண்களை சீண்டி கேலி செய்வதுமாக அது சீரழிந்தது. இதில் போட்டி வேறு உருவாகி ஒரு கல்லூரியின் ரவுடிகளுக்கும் இன்னொரு கல்லூரியின் ரவுடிகளுக்குமான மோதலாக அது பல இடங்களில் மாறியது. இப்படிப்பட்ட சூழலில் ‘பஸ் டே’ நடக்காமல் இருந்தாலே தேவலை என்ற மனநிலைக்கு ரெகுலர் பஸ் பயணிகளும் பஸ் ஊழியர்களும் வந்துவிட்டார்கள். காவல்துறை பஸ் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துவிட்டது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு கல்லூரி மாணவர்கள் பஸ்சை மறித்து ‘பஸ் டே’ பதாகையைக் கட்டி ரகளை செய்ததும் போலீஸ் அவர்களை வந்து தடுத்தது. பஸ்சைக் கல்லால் அடித்து உடைத்து, பஸ் பயணிகளைத் தாக்கி வழிபாடு நடத்தி பஸ் டே - சாக்கிய நாயனார் பாணியில் நடந்து முடிந்தது. எந்த பஸ்சுக்குத் தோரணமும் வாழை மரமும் கட்டி ஆராதிக்கப் போவதாகச் சொன்னார்களோ அதையே கல்லால் அடித்ததுதான் அவர்களின் அசல் மனநிலை. தமிழக அரசு அதிகாரபூர்வமாக இந்த ‘பஸ் டே’ கொண்டாட்டங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்து அறிவிக்க வேண்டும்.பஸ்சில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் இடையே நல்லுறவைப் பேணுவதற்கு, போக்குவரத்துக் கொள்கைகளில் மாற்றம் தேவை. நியாயமான கட்டணங்கள், படிக்கட்டில் நிற்கத் தேவையில்லாத அளவுக்கு - போதுமான பஸ்கள், வாசற்கதவு பூட்டப்படும் வசதியுடையதாக எல்லா பஸ்களையும் மாற்றுதல், ஊழியர்களிடம் தினமும் போதுமான சில்லறைக் காசுகளை டெப்போவிலேயே கொடுத்து அனுப்புதல் என்று நடவடிக்கைகளை எடுத்தால் நல்லுறவுதானே வரும்.

3.சினிமா:


தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மறுபடியும் நின்றுவிட்டன. காரணம் வழக்கமான சம்பளப் பிரச்னைதான்சினிமாக்காரர்கள் எதையும் தப்புத்தப்பாகவும் மிகைப்படுத்தியுமே சித்திரித்து பழக்கப்பட்டவர்கள். இப்போதைய பிரச்னையிலும் நடப்பது வேலை நிறுத்தம் அல்ல. தொழிலாளி வேலை செய்ய மறுத்தால் அதற்குப் பெயர் ஸ்டிரைக்- வேலை நிறுத்தம். முதலாளி, தொழிலை நடத்த முடியாது, நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னால் அதற்குப் பெயர் ஸ்டிரைக் அல்ல; லாக் அவுட்- கதவடைப்பு. இப்போது நடப்பது முதலாளிகளான தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும் லாக் அவுட். இது ஸ்டிரைக் அல்ல. எஸ்.ஏ.சந்திரசேகரன் முதல் சேரன் வரை ஆளுக்கு ஆள் உளறிக் கொட்டுவதை நிறுத்திவிட்டு, தொழிலாளர் நல ஆணையர் முன்பு பிரச்னையைக் கொண்டு போனால், ஒரே நாளில் தீர்ந்துவிடக் கூடியது இது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தயரிப்பாளர்களும் தொழிலாளர் கூட்டமைப்பான பெப்சியும் சம்பள ஒப்பந்தம் போடுகிறார்கள். கடைசியாகப் போட்ட ஒப்பந்தம் டிசம்பர் 2010ல் முடிந்துவிட்டது. ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2013 வரை நடைமுறைக்கு வரவேண்டிய சம்பள விகிதம் தீர்மானித்து ஒப்பந்தம் போடாமலேயே ஒரு வருடம் ஓடி விட்டது. பழைய சம்பளத்திலேயே பெரும்பாலோர் வேலை செய்தார்கள். இப்போது புது சம்பள விகிதம் போட்டால் கூட, சினிமா தொழிலாளருக்கு அரசு ஊழியர் மாதிரி பழைய அரியர்ஸ் கணிசமாகக் கிடைக்கும் நடைமுறையோ சாத்தியமோ கிடையாது. போன சம்பளம் போனதுதான். ஒரு சிலர் மட்டும் கடந்த ஓராண்டில் தங்கள் சங்கம் உயர்த்திக் கேட்ட சம்பளத்தை ஒப்பந்தம் இல்லாமலேயே பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோரின் சம்பளம் என்பது மாதச் சம்பளம் அல்ல. இது தினக் கூலிதான். கேட்கப்பட்டிருக்கும் பேட்டா என்ற கூலி உயர்வு விவரங்கள் இதோ: லைட்மேன் - ரூ 350லிருந்து 530. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250லிருந்து 320. மகளிர் ஊழியர் யூனியன் - 290 லிருந்து 400. செட் அஸிஸ்டெண்ட் - 350 லிருந்து 625. டிரைவர்ஸ் யூனியன் - 270 லிருந்து 415. காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700 லிருந்து 850. புரடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350 லிருந்து 550.மூன்று வருடத்துக்குப் பிறகு இவர்கள் கூடுதலாகக் கேட்டிருக்கும் தொகை 180,70,110,275,145,150,200 ரூபாய் என்ற அளவில்தான். இதைத் தர மறுப்பதில் எந்த நியாயமுமில்லை. ஆறுமாத காலம் ஒரு முழுப் படத்தில் சுமார் 60 நாள் வேலை செய்தாலும் இதில் ஒருவர் புதிய சம்பள விகிதத்திலேயே அதிக பட்சமாகப் பெறப் போகும் சம்பளம் மொத்தமாக 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையில் தான். இப்போது தொழிலாளர் நல அதிகாரி செய்ய வேண்டியதெல்லாம், சென்ற வருடத்தில் சிலருக்கு மட்டும் உயர்த்தித் தந்த விகிதம் எவ்வளவு, யூனியன் கேட்பது எவ்வளவு, தயாரிப்பாளர் தர விரும்புவது எவ்வளவு என்பதை விசாரித்து சமரசம் செய்வது தான். மூன்றாண்டுகளில் பணவீக்கத்தினால் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு வருடம் சம்பள உயர்வு இல்லாமலே போய்விட்டது. இதையெல்லாம் கணக்கிட்டு, புதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஒரு படத்தில் எத்தனை தொழிலாளர் வேலை பார்க்க வேண்டும், பட பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரே வேலைக்கு வெவ்வேறு சம்பளம் தரமுடியுமா, ஸ்டார் நடிகர் -ஸ்டார் டைரக்டர் சம்பளம் மட்டும் 200 சதவிகிதம் உயர்வது முறையா, வேலை வாங்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளரும் அவர்கள் கீழ் வேலை செய்யும் உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கெல்லாம் தனித்தனி யூனியன்கள் வேண்டாமா, பெப்சி யூனியன்களில் இல்லாதவர்கள் சினிமாவில் வேலை செய்ய அடிப்படை உரிமை இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உண்டா இல்லையா, யூனியன் உறுப்பினராக கார்டு வாங்க ஏன் லட்சக்கணக்கில் கட்டணம் விதிக்கவேண்டும் போன்ற நீண்ட காலமாக இருக்கும் அடிப்படைச் சிக்கல்கள் எதையும் இப்போது சேர்த்துத் தீர்த்துவிடமுடியாது. அதற்குத் தனியே சினிமா துறை நிலை பற்றி ஆராய நீதிபதிகள், நிபுணர்கள் குழு அமைத்து, சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கர் அறிக்கையிலிருந்து: 


எனக்கும் என் குடும்பத்துக்கும் இயேசு கிறிஸ்து தமது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார். இது இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும்போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை... 2012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினை யிலிருந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல்...  

1 comment: